TNPSC Thervupettagam

மணிப்பூர் கலவரம் - ஏன் இந்த நிலைமை?

November 25 , 2024 53 days 86 0
  • மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. வன்முறைச் சம்பவங்கள் நிகழத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அம்மாநிலத்தில் சின்கா மாவட்டத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 11 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 6 மாத குழந்தை உட்பட 6 பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பெரும் வேதனையையும் ஆற்றொணா துயரத்தையும் அளிக்கிறது.
  • நவம்பர் 11 பிற்பகலில் ஜிரிபாம் மாவட்டத்தில் போரேபேக்ராவில் உள்ள ஜாக்குராதோர் கரோங் சந்தைப் பகுதியின் குடியிருப்புகள், கடைகள், காவல் நிலையம், சிஆர்பிஎப் முகாம்கள் ஆகியவற்றின் மீது ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் குகி பழங்குடியின கிராமங்களில் தன்னார்வலர்களாகச் செயல்பட்டு வந்தவர்கள். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
  • நவம்பர் 7 ஜிரிபாம் மாவட்டத்தில் ûஸரான் கிராமத்தில் குகி பழங்குடிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மைதேயி சமூக ஆயுதக் குழுவினர், போரேபேக்ரா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவே குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நாள் அதிகாலை 3 மணி அளவில் விஷ்ணுபூர் மாவட்டத்தில் சைய்தோன் பகுதியில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
  • அஸ்ஸாம் ரைபிள் சிஆர்பிஎப் காவல் துறை என பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை. குகி பழங்குடிகளிடம் மன்னிப்புக் கோராமல் சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் முகாம்களில் இருந்து வெளியேறக் கூடாது என்று குகி பழங்குடி அமைப்புகள் மிரட்டல் விடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. மைதேயி சமூகத்தினர், காவல் துறையினர், பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஹமார் கிராமத்தின் தன்னார்வலர்கள் என்று குகி பழங்குடி அமைப்பு நடத்திய தாக்குதலும் புதிய பதற்றத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
  • வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் 82 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்தாலும் நிலைமை அவ்வாறாக இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் பிரச்னைகள் வெடிக்கும் என்கிற அளவில் இருதரப்புகளுக்கும் ஆழமான மனக்காயங்களும் பகை உணர்வுகளும் வேரூன்றி இருப்பதே இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் மூலகாரணம் என்று தெரிகிறது.
  • 2023-ஆம் ஆண்டு மே மாதம் பற்றிய நெருப்பு இன்னும் அடங்காமல் பற்றிப் படர்கிறது. மணிப்பூரில் உள்ள மைதேயி இனத்துக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும்படி கூறிய அம்மாநில உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அனைத்துப் பழங்குடி மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்பேரணியில் ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் பரவி வன்முறையாக உருவெடுத்து இன்று வரை தொடர்கிறது. மைதேயி, குகி சமூகத்தினரிடையே வன்முறையால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஏறத்தாழ 60ஆயிரம் பேர் வெவ்வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.
  • 2024 மக்களவைத் தேர்தலின்போது பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என்றும் அரசியல் களம் வேறு திசைமாறிப் போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலின்போது அவ்வாறு நிகழவில்லை. அப்போது அமைதியே நிலவியது. அவ்வாறெனில், வடகிழக்கு மாநிலத்தில் அமைதி நிலவுவது என்பது ஒரு மாயத்தோற்றம் என்பதை இந்த வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கின்றன.
  • வேரோடிப் போய் இருக்கும் இன அடையாள உணர்வுகளை ராணுவ பலத்தைக் கொண்டு அடக்கி விட முடியாது. அப்படிச் செய்தால் அரசின் அடக்குமுறையை மீறி வன்முறைகள் தானாக எழுந்துவிடும். வன்முறை இப்போது இந்த நிலைக்கு வந்திருப்பதும் அடக்குமுறையின் அடுத்த கட்டமாகத்தான் பார்க்க முடிகிறது.மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை மனசாட்சியை மதிப்பவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரதமர் எல்லா மாநிலத்திற்கும் சென்று வருகிறார். ஆனால், அவர் மணிப்பூருக்குச் செல்வதைத் தவிர்க்கிறார். வன்முறை தொடங்கி கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஒருமுறை கூட அவர் மணிப்பூருக்குச் செல்லவில்லை.
  • பிரதமர் சென்றிருந்தால் பிரச்னை தீர்ந்திருக்குமா என்று எதிர்கேள்வியை நாமே முன்வைத்தால், நெருக்கடியைத் தீர்க்க உதவியிருக்கும் என்றுதான் பதிலாகச் சொல்ல முடியும். கடுமையான சட்டத்தைத் திணிப்பதன் மூலம் அமைதியின்மையும் ஒருவித பதற்றமும் அதிகரிக்கக் கூடுமே தவிர வேறு மாற்றத்தை நிகழ்த்திக் காட்டாது.
  • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது ஒரு கொடூரமான சட்டம். மணிப்பூரில் இது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வடகிழக்கு என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்பது மத்திய அரசு வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, நடைமுறையிலும் செயல்படுத்திட வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம் ஆயுதப்படைக்கு சந்தேகத்தின் அடிப்படையில் எந்த நபரை வேண்டுமானாலும் கைது செய்யவும் வாரண்ட் இன்றி எந்த இடத்திலும் சோதனை செய்யவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • மணிப்பூர் கலவரத்திற்கு அருகில் உள்ள மாநிலமான மிஸ்ரோம் மாநிலத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்று. மணிப்பூரில் நடப்பது இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்னை அல்ல. அல்லது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் அல்ல. ஒரே மாநிலத்தில் இரண்டு சமூக குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இவற்றை ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவும் மைதேயி, குகி சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு அமைதிக் குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஏன் செய்யத் தவறினார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
  • மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பாஜக அரசு அமைதியை நிலை நாட்டவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தவறவிட்டதாக தேசிய மக்கள் கட்சி, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடந்த 17-ஆம் தேதி அறிவித்தது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சியில் 7 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பாஜகவுக்குப் பெரும்பான்மையாக 32 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அது தவிர நாகா மக்கள் முன்னணி 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளத்தில் 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேசிய மக்கள் கட்சி தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டாலும் பாஜக அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
  • நிலைமை இவ்வாறாக இருக்க பிரச்னைகளைத் தீர்ப்பதுதான் ஒரே வழி. ஏனென்றால், கோபம் அடைந்த போராட்டக்காரர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் உடைமைகளின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவை ஜனநாயகத்தின் மீதான கோபத்தையே காட்டுகிறது.
  • வன்முறைச் சம்பவங்களில் அதிநவீன ஆளில்லா விமானங்கள், ராக்கெட் குண்டுகளைச் செலுத்தும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய ஆயுதங்கள் பொதுவாக போரின்போது பயன்படுத்தக் கூடியவையாகும். ஆனால், பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது ஒரு பெரிய மாற்றத்தையும் சகிக்க முடியாத மனிதப்பண்பு அற்றதனத்தையும் காட்டுகிறது.
  • மணிப்பூர் அமைதிக்காகக் காத்துக் கிடக்கிறது. இந்தப் பிரச்னைகள் திடீரென்று ஏற்பட்டதா? அல்லது உருவாக்கப்பட்டதா? என்பதை ஆராய்வதற்குத் தேவையின்றி தீர்வு காணும் முடிவை நோக்கி நாம் நிற்கிறோம். கல்வியும் நல்ல வாழ்க்கையும் அவர்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும் என்று கனவு கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு, தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு, தாங்கள் வாழ்ந்த கிராமத்தை விட்டே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் உணவுத் தேவைக்காக கல்வியைத் தொலைத்து விட்டு அவர்கள் பிள்ளைகள் வேலைக்குச் செல்கிறார்கள்.
  • இத்தகைய சோகம் மனதைக் கவ்வி இழுக்கிறது. தாங்கள் கண்ட கனவு தங்கள் கண் முன்பே நிராசையாகப் போய் நிற்கிற மக்களைப் பார்க்கிற இன்னொரு மனிதன் ஒருபோதும் சகித்துக் கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டான். மனித நாகரிகம் எவ்வளவோ காலம் கடந்து வந்த நிலையிலும், இன்னும் நாம் கற்காலத்தை நோக்கியா செல்ல வேண்டும்? கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற ஹமுராபி மன்னன் கால நீதிக்குச் செல்ல வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்