TNPSC Thervupettagam

மணீஷ் சிசோடியாவுக்குப் பிணை: மற்றவர்களுக்கும் முன்னுதாரணம் ஆகட்டும்!

August 14 , 2024 6 hrs 0 min 7 0

மணீஷ் சிசோடியாவுக்குப் பிணை: மற்றவர்களுக்கும் முன்னுதாரணம் ஆகட்டும்!

  • மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 17 மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது, இன்றைய அரசியல் சூழலிலும் நீதித் துறையின் போக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • 2021 நவம்பரில் டெல்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில், முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2023 பிப்ரவரி 6 இல் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டார். மார்ச் 9 இல் இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் அவரைக் கைதுசெய்தது. துணை முதல்வர், கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துவந்த மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டது, ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லி ஆட்சி நிர்வாகத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
  • இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், 2024 மார்ச் 21இல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு ஆகஸ்ட் 9இல் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது.
  • ஏழு முறை பிணை மறுக்கப்பட்ட நிலையில், எட்டாவது கோரிக்கையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்த பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மணீஷ் சிசோடியாவுக்கு உரிய நேரத்தில் பிணை வழங்காத உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் ஆகியவற்றையும் கண்டித்திருக்கிறது.
  • ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு, விசாரணையின்றி அவரைக் காவலில் வைப்பதோ அல்லது சிறை வைப்பதோ தண்டனையாக மாறக் கூடாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், குறிப்பிட்ட காலம் சிறைவாசம் அனுபவிக்கும் வரை அவருக்குப் பிணை மறுக்கப்பட வேண்டும் என்று விசாரணை அமைப்புகள் நினைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
  • இதற்கிடையே ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையில் நிலவும் பிணக்குகள் டெல்லி ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தியிருக்கும் சுணக்கம், சமீபத்திய மழை வெள்ளப் பாதிப்பில் பட்டவர்த்தனமாகியிருக்கிறது. மணீஷ் சிசோடியா விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்குத் தார்மிகரீதியில் பலம் சேர்த்திருப்பதையும் பாஜகவினர் கவனிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் தகுந்த ஆதாரம் இல்லாமல் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.
  • மணீஷ் சிசோடியா பிணையில் விடுதலை செய்யப்பட்டதை முன்னுதாரணமாகக் கொண்டு, தனக்கும் பிணை வழங்கப்பட வேண்டும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் ஆகஸ்ட் 12இல் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட கவிதாவுக்கு இடைக்காலப் பிணை வழங்க மறுத்திருக்கும் உச்ச நீதிமன்றம், சிபிஐ - அமலாக்கத் துறையின் எதிர்வினையின் அடிப்படையில், கேஜ்ரிவாலின் பிணைக்கான மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது.
  • டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, குற்றம் உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும். அதேவேளையில், சட்டரீதியான உத்தரவுகளோ, விசாரணையோ இல்லாமல் அவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்