- சமூக நீதி, இடஒதுக்கீடு, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ற வார்த்தைகள் எல்லாம் ஒருபொருட்பன்மொழியாகவே பயன்பாட்டில் இருக்கிறது.
- மண்டலுக்கு முன்பே இடஒதுக்கீடும் நடைமுறையில் இருந்தது; காகா கலேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷனும் அமைக்கப்பட்டிருக்கிறது. எனினும், மண்டல் கமிஷனின் அறிக்கையும் பரிந்துரைகளும் மட்டுமே மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுவருகின்றன.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை ஆராய்ந்து இடர்ப்பாடுகளைக் களைவதற்காக ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் கூறு 340 கூறுகிறது.
- காந்தியரான காகா கலேல்கரின் தலைமையில் 1953-ல் முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. ‘பிற்படுத்தப்பட்ட சமூக இளையோருக்குத் தொழில் நிறுவனங்களில் 70% இடஒதுக்கீடு’ என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை காகா கலேல்கர் ஆணையம் பரிந்துரைத்தது.
- பிற்படுத்தப்பட்டோர் என்ற வரையறைக்குள் வழக்கமான சமூகக் கணக்குகளைத் தாண்டி, அனைத்துப் பெண்களையும்கூட உள்ளடக்கியது இந்த ஆணையம். இதுவே அதன் பரிந்துரைகளை ஒழித்துக்கட்டப் போதுமானதாக ஒன்றிய அரசுக்கு இருந்தது.
- ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தெளிவான முறையில் அடையாளங்காணத் தவறிவிட்டது’ என்ற ஒரே காரணத்தைச் சொல்லி அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்தது.
பிற்படுத்தப்பட்டோர் யார்?
- ஆக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பே அது எந்தெந்தச் சாதியினர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை வரையறுக்க வேண்டியது அவசியம்; அதைச் செய்யவில்லையென்றால் பரிந்துரைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது முடிவாகிவிட்டது.
- 1979-ல் அப்போது உள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சரண் சிங், இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டலின் தலைமையில் அமைக்க முன்முயற்சிகளை எடுத்தார்.
- இந்த முடிவைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஏற்றார். அன்று ஜனதா கூட்டணியின் முக்கியமான கட்சிகளாக இருந்த லோக் தளம், சோஷிலிஸ்ட் கட்சி ஆகியவை பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் பிரதிநிதிகளாகவே தம்மை முன்னிறுத்தின. ஆணையத்தை அமைக்கும் பணி மிகவும் எளிதாய் முடிந்தது என்றாலும், அதன் ஆய்வுப் பணிகள் அவ்வளவு எளிதாக இல்லை.
- பிஹாரின் யாதவச் சமூகத்தைச் சேர்ந்தவரான பி.பி.மண்டல் வழக்கறிஞர், அரசியலர். பிஹாரில் சில காலம் மட்டும் முதல்வர் பதவியில் அமர்ந்த வரலாறு அவருக்கு உண்டு.
- அப்போது மண்டல் மக்களவை உறுப்பினராக இருந்தார். இந்தியாவில் அன்றைக்கு இருந்த 406 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு நேரடியாகவே சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார் மண்டல். அஸ்ஸாமில் இருந்த ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டுமே அப்போது அங்கு பெய்த பெருமழையின் காரணமாக அவரால் செல்ல முடியாமல் போனது.
- அரசமைப்புச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவுமே வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் மண்டல் தனது ஆய்வில் பொருளாதார அளவுகோல்களையும் பயன்படுத்தினார்.
- உதாரணமாக, இளம் வயதுத் திருமணங்களின் மாநில சராசரியைக் காட்டிலும் 25% அதிகமாகத் திருமணங்கள் செய்யப்படும் சாதிகள், 50%-க்கும் அதிகமாக உடலுழைப்பில் ஈடுபடும் சாதிகள் என்ற அளவுகோல்களையெல்லாம் அவர் பயன்படுத்தினார்.
- கல்வியைப் பொறுத்தவரையில் தொடக்கக் கல்விக்கே செல்லாதவர்களின் மாநில சராசரியைக் காட்டிலும் 25% அதிகமுள்ள சாதிகள், படிப்பைத் தொடராமல் விட்ட மாணவர்களின் மாநில சராசரியைக் காட்டிலும் 25% அதிகமுள்ள சாதிகள் என்று அந்த அளவுகோல்கள் நீள்கின்றன.
- பொருளாதாரரீதியில் அளவுகோல்களை நிர்மாணிக்கும்போது ஓலைக்குடிசையில் வசிப்பவர்கள், குடிநீருக்காக அரை கிமீக்கும் மேலாக நடந்துபோகிறவர்கள், மாநில சராசரியைக் காட்டிலும் அதிகக் கடன் பெற்றவர்கள் என்ற அளவீடுகளையும் சேர்த்துக்கொண்டார்.
- இத்தகைய அளவீடுகளைத் திட்டமிட்டுக்கொள்வதில் எம்.என்.ஸ்ரீநிவாஸ் போன்ற சமூகவியலாளர்கள் அவருக்கு உதவினார்கள். இப்படி ஒவ்வொரு அளவீட்டுக்கும் தனித் தனி மதிப்பெண்களைக் கொடுத்து, மொத்த மதிப்பெண் 22-ல் 11-க்கும் அதிகமாக இருக்கிறவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று வகைப்படுத்தினார்.
- அதன் அடிப்படையில் 3,734 சாதிகள் இன்னமும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக மண்டல் கண்டறிந்தார். அறிவியல்பூர்வமாக அதை உறுதிப்படுத்தினார் என்பதால்தான் அவரது தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை வகுப்புரிமையின் மகாசாசனம் என்று கருதப்படுகிறது.
- பிற்படுத்தப்பட்ட இந்தச் சாதிகள் அரசு நிர்வாகத்தின் உயர் பதவிகளில் மிகக் குறைவான அளவிலேயே பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது என்பதையும் மண்டல் தலைமையிலான ஆணையம் கண்டறிந்தது.
- இந்த முரண்பாட்டை நீக்குவதற்கு அட்டவணைச் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த 22.5% உடன், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகத் தனியாக 27% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது.
மண்டல் பரிந்துரைகள்
- மண்டல் ஆணையம் ஆறு பரிந்துரைகளைச் செய்தது. முதலிரண்டு பரிந்துரைகளும் முறையே கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றன.
- இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் 44%, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரில் 8%; ஆக மொத்தம், மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 52% என்றாலும் 27%-ஐ மட்டுமே மண்டல் ஆணையம் பரிந்துரைத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- ஆனால், வங்கிக் கடன் கொடுப்பதிலும்கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றது அது.
- அதேபோல, ஆதிக்கச் சாதிகளின் கைகளில் இருந்த நிலவுடைமை விடுவிக்கப்படப்பட வேண்டும் என்றது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றது.
- மீனவர்களைத் தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றி, அவர்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்றது மண்டல் ஆணையத்தின் இன்னொரு முக்கியமான பரிந்துரை.
- மண்டல் ஆணையத்தின் அறிக்கை 1980-ல் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஜனதா கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டனர்.
- 1989 தேர்தலுக்குப் பிறகு, தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமரானபோதுதான் மீண்டும் அந்த அறிக்கை கையில் எடுக்கப்பட்டது. மண்டல் ஆணைய அறிக்கையின் முக்கியப் பரிந்துரையான, ‘வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்’ என்று 1990 ஆகஸ்ட் 7-ல் அறிவித்தார்.
- அடுத்த வாரமே, அதற்கான அரசாணையையும் பிறப்பித்தார். நிச்சயமாக இது புரட்சிகரமான ஒரு முடிவுதான். அரசியலில் பெரும் மாற்றங்களை அது நிகழ்த்தலானது. இதற்கு வி.பி.சிங் கொடுத்த முதல் விலை ஏற்கெனவே ஊசலாட்டத்தில் இருந்த அவருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது.
அரசியல் மாற்றங்கள்
- இந்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு வழங்கும் முடிவானது, தென்னிந்திய மாநிலங்களில் பெரிய அளவிலான எதிர்ப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
- தென்னிந்தியச் சமூக நீதி இயக்கங்களின் வரலாற்றுப் பின்புலமும், ஏற்கெனவே இங்கு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்ததும் இதற்கான காரணமாக இருந்தன.
- ஆனால், வடஇந்தியாவில் போராட்டங்களும் கலவரங்களும் நடந்தன. ஆதிக்கச் சாதிகள் இதில் முன்வரிசையில் நின்றன. காங்கிரஸ் – பாஜக இரண்டுமே இதில் கிட்டத்தட்ட ஒரே மனநிலையைப் பிரதிபலித்தன.
- விளைவாக, உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. மாறாக, மண்டல் ஆணையப் பரிந்துரைகளுக்கு ஆதரவாக நின்ற அன்றைய இளம் தலைவர்களான முலாயம் சிங் யாதவும் லாலு பிரசாத் யாதவும் மக்களின் ஏகோபித்த செல்வாக்கோடு முன்நகர்ந்தார்கள்.
- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்தன.
- ‘மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளும் அதை நடைமுறைப்படுத்தியதும் அரசமைப்புச் சட்டத்தின்படி சரியே’ என்றது தீர்ப்பு. அதே நேரத்தில், ‘மொத்த இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது; பணி நியமனத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும், பதவி உயர்வுக்கு அல்ல’ என்று இரண்டு நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.
- நாட்டின் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற வரையறைக்குள் வரும்போது அவர்களுக்கான ஒதுக்கீட்டை எப்படி வெறும் 27% என்கிற வரையறைக்குள் சுருக்க முடியும் என்ற நியாயமான கேள்வி அரசியல் களத்தில் துரத்தலானது.
- இது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்றாக இருக்கும் என்பதை வளர்ந்துவரும் காலகட்டம் சொல்கிறது. நாளுக்கு நாள் இடஒதுக்கீடு கோரும் சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற வரையறையை அது விஸ்தரிக்கிறது.
- மண்டல் ஆணைய அறிக்கையின் முக்கியப் பரிந்துரையான, ‘வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்’ என்று 1990 ஆகஸ்ட் 7-ல் அறிவித்தார். அடுத்த வாரமே, அதற்கான அரசாணையையும் பிறப்பித்தார். நிச்சயமாக இது புரட்சிகரமான ஒரு முடிவுதான். அரசியலில் பெரும் மாற்றங்களை அது நிகழ்த்தலானது!
நன்றி: தி இந்து (07-08-2020)