- ஒரு தலைமை ஆசிரியராக எனது பணி அனுபவத்தில், காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்து, இறை வணக்கக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பல குழந்தைகளைப் பார்த்துள்ளேன். பல அரசுப் பள்ளிகளில் இது அன்றாட நிகழ்வாகவே இருந்தது. உடனடித் தீர்வாகத் தாங்கள் கொண்டுவந்துள்ள மதிய உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை உண்ட ஆசிரியர்கள் ஏராளம். இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் காலை உணவுத் திட்டம் மிகப் பெரிய புரட்சி என்றே சொல்ல வேண்டும்.
- காலை உணவு வழங்குவதற்காக அரசு ஒரு மாணவருக்கு ரூ.12.72 வழங்குகிறது. அதில் அரிசி, பருப்பு, எண்ணெய், சேமியா, ரவை போன்றவை கூட்டுறவு அங்காடிகள் மூலம் சிறந்த நிறுவனங்களின் பொருள்களாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய காலை உணவு வழங்கப்படுகிறது. மாணவர்கள் காலை உணவுக்காகச் சற்று முன்கூட்டியே பள்ளிக்கு வருகை தருகின்றனர். மாணவர் வருகை சதவீதம் உயர்ந்திருக்கிறது. காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பின், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளியில் காலை உணவு சாப்பிடுகிறார்கள். எனினும், மதிய உணவின் தரம் சற்று குறைவாக இருப்பதால், பலர் மதிய உணவு உண்ணத் தயங்குகின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு மதிய சத்துணவுத் திட்டத்துக்கு வழங்கப்படும் மானியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன.
மானியம் குறைவு
- சர் பிட்டி தியாகராயர், காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என நமது ஆட்சியாளர்களின் முன்னெடுப்புகளால், பல தலை முறையினர் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள். மதிய உணவாக இன்றைக்குக் காய்கறி பிரியாணி, மிளகு முட்டை, கறுப்புக் கொண்டைக் கடலை புலாவ், தக்காளி மசாலா முட்டை, கறிவேப்பிலை சாதம், கீரை சாதம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
- இதில் மாணவர்களுக்கென்று ஒதுக்கப்படும் தொகை மிகக் குறைவாக உள்ளது. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.8.54; 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரு.8.65 என மானியம் வழங்கப்படுகிறது.
- அனைத்து சத்துணவு மையங்களிலும் சிலிண்டர் மூலம் சமையல் செய்யப் படும் சூழலில், விறகுக்கு ஒதுக்கப்பட்ட பழைய தொகையே இன்னும் நீடித்து வருகிறது. நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் அதே அரிசிதான் மதிய சத்துணவுக்கும் வழங்கப்படுகிறது. அந்த அரிசியில் சமைத்த உணவு சுவையாக இருப்பதற்கு உணவு மானியம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
- முடிந்தால், சற்றுத் தரமான அரிசியை வழங்க முயலலாம். எனவே, அதற்கான ஒதுக்கீட்டையும் காலை உணவுக்கு நிகராக உயர்த்தி வழங்குவது அவசியம். காலை உணவுத் திட்டம் மூலம் கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றத்துக்கு வித்திட்டிருக்கும் தமிழ்நாடு அரசு இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2023)