TNPSC Thervupettagam

மதுவிலக்குச் செயல்பாடுகள்: அன்றும் இன்றும்

September 27 , 2024 110 days 292 0

மதுவிலக்குச் செயல்பாடுகள்: அன்றும் இன்றும்

  • மது உள்ளிட்ட போதைப் பழக்கத்​துக்கு ஆட்பட்​டோரின் விழுக்காடு அதிகரித்​துக்​கொண்டே இருக்​கிறது. திறன் இழப்பு, விபத்து, இளவயது மரணம், குடும்ப வன்முறை, குற்றங்கள் உள்ளிட்ட துணை விளைவு​களும் முன்னெப்​போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்​துக்​கொண்டிருக்கின்றன.
  • போதைப் பழக்கத்​துக்கு ஆட்பட்​ட​வருக்கு நிகழ்ந்த நேரடிப் பாதிப்பு​களுக்குச் சற்றும் குறைவின்றி, அப்பழக்​கத்​துக்கு ஆட்படாதவர்​களுக்கு மறைமுகப் பாதிப்புகள் ஏற்படு​கின்றன. இந்தச் சூழலில் உடனடி அவசியத் தேவை மது ஒழிப்பா? மது விலக்கா? சுய விழிப்பு​ணர்வா? இந்தக் கேள்வி​களினூடாகக் கடந்த காலத்தில் மதுவுக்கு எதிராகச் செயல்பட்ட தன்னார்வ, சமூக நல இயக்கங்​களின் செயல்​பாடுகளை நினைவு​கூர்வதன் மூலம் சமகாலச் சாத்தி​யங்களை விஸ்தரிக்க முயலலாம்.
  • மதுவைப் பகிர்ந்து குடித்துக் களிக்கும் ‘உண்டாட்டு’ நடைமுறை தொல் சமூகத்தின் பண்பாடாக இருந்​ததைப் போலவே மதுவைப் புறக்​கணிக்கச் சொல்லும் அறச்செயல்பாடு பொ.ஆ. (கி.பி.) 2ஆம் நூற்றாண்டு முதலே இருந்​து​வந்​திருக்​கிறது. மதுவை வெறுக்கும் ‘அறம்’ தனியுடைமை, நிலவுடைமை வழியிலான வேளாண் சமூகம் உருப்​பெற்​ற​போது, மேலிருந்து கீழ்நோக்கிச் சொல்லப்​பட்டதாக இருக்​கிறது.
  • வேளாண் சமூகத்தின் உருவாக்​கத்​துக்குப் பங்களிப்பு செய்த அல்லது அச்சமூகத்தின் அறிவு விளைச்​சலாகக் கருதப்பட்ட புலவர்​களில் பலர் மதுவைப் புறக்​கணித்து வாழ வலியுறுத்​தி​யுள்​ளனர். அதனால், சமூகப் புழக்​கத்தில் மதுவை முற்றாகப் புறக்​கணிக்க முடியா​விட்​டாலும் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்​திருக்​கிறது. இது ஒரு பண்பாட்டு ரீதியிலான செயல்​பாடு.

கடந்த காலச் செயல்​பாடுகள்:

  • மது ஒழிப்​புக்குச் சாத்தி​யமற்ற நிலையில், அதன் புழக்​கத்தில் கட்டுப்​பாடு​களைக் கொண்டு​வரலாம். அது மதுப்பு​ழக்​கத்தைச் சட்டத்தின் வரம்புக்குள் வைத்துக்​கொள்​வதற்கு உதவும். இன்னொரு புறம் மதுவுக்கு எதிரான சிந்தனையைப் பரப்பி, விழிப்பு​ணர்வை ஏற்படுத்துவது சிறந்த வழிமுறையாக அமையலாம். உதாரணமாக, பெங்களூருவைத் தலைமை​யிட​மாகக் கொண்டு, 1908ஆம் ஆண்டு ஜே.பி.சர்​வாந்த்தோன் என்பவரால் தோற்று​விக்​கப்​பட்டு, தென்னிந்தியா முழுக்கக் கிளைச் சபைகளைத் தோற்று​வித்து விழிப்பு​ணர்வை ஏற்படுத்திய ‘அன்னம்மாள் மதுவிலக்குச் சபை’யின் செயல்​பாடு​களைக் குறிப்​பிடலாம்.
  • ஒவ்வொரு சபையிலும் ஒரு போதகரும் மருத்​துவரும் தலைமைப் பொறுப்பில் இருந்​திருக்​கின்​றனர். மதுவுக்கு ஆட்பட்​ட​வர்​களுக்கு ஆன்மிக, மருத்துவ ரீதியிலான உதவிகள் வழங்கப்​பட்​டிருக்​கின்றன. இது ஒருவகையில் இன்றைய போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்​களைப் போன்ற​தாகத் தெரிகிறது.
  • இந்தச் சபையில் உறுப்​பின​ராகும் நபர்கள் ‘மருத்​துவரின் வார்த்​தைகளுக்குக் கட்டுப்​பட்டு நடப்பேன், மதுவைப் புறக்​கணிப்​பேன்’ என்பதை முதல் உறுதி​மொழியாக அளித்​திருக்​கிறார்கள். அவர்கள் மதுவிலக்குச் சபை நடத்தும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் கலந்து​கொள்ள வேண்டும் என்கிற விதி இருந்​திருக்​கிறது. அதன்வழி தொடர்ச்சியான கண்காணிப்பில் அவர்கள் இருந்​திருக்​கின்​றனர்.
  • அங்கு வழங்கப்​பெறும் ஆலோசனையை அடிப்​படை​யாகக் கொண்டு, தேவைப்​படும் இடத்தில் புதிய மதுவிலக்குச் சபையைத் தொடங்​கு​வதற்கு உறுப்​பினர்​களுக்கு வழிகாட்​டப்​பட்​டிருக்​கிறது. இச்சபையின் வழிகாட்​டலால் குடியி​லிருந்து மீண்ட ஒருவர் மற்றொருவரை மீள வைக்க வேண்டும் எனக் கேட்டுக்​கொள்​ளப்​பட்டு இருக்​கிறார்.
  • இதில் சேர்ந்து மருத்துவ உதவியுடன் மீட்படைவதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்​கப்​பட​வில்லை. சபையின் நோக்கங்கள் களப்பணி​யினுடைய அனுபவங்​களின் வழி ஒவ்வொன்றாக எழுதித் தொகுக்​கப்​பட்டவை. அந்த நோக்கங்​களுள் ஒன்று, மக்களை எளிதில் கவரக்​கூடிய கும்மிப் பாடல்​களின் வழி கிராமங்கள் தோறும் விழிப்பு​ணர்வை ஏற்படுத்துவது.
  • அதற்காக, 1916ஆம் ஆண்டு அன்னம்மாள் மதுவிலக்குச் சபையின் செயலாளர் சி.எஸ்​.ஞானப்​பிர​காசம் ‘மதுவிலக்குக் கும்மி’ என்ற நூலை எழுதினார். இச்சபையின் கோலார் தங்கவயல் கிளையின் தலைவர் சா.சே.துரைச்சாமி இந்த நூலைப் பற்றிக் குறிப்​பிடும்​போது, ‘நாற்ற மதுஜலத்தை நாளுங் குடித்து​வெறித் / தாற்றுமத் தைகெடுத் தாஸ்திபொருள் – தோற்றழியு / மாந்தர்​கட்கென் றேகும்மி மாமலைப் பாடித்​தந்தான் / வேந்தன்ஞா னப்ரகாச வேள்’ என்கிறார்.
  • இதன் வழி மதுவிலக்குக் கும்மி எழுதப்​பட்டதன் நோக்கத்​தையும் அக்காலச் சூழலையும் அறிந்​து​கொள்ள முடிகிறது. ‘குடி​வெறியது கொடிய நஞ்சென / கூறினேன் சாஸ்திர சம்மத​மாய்க் / கொடிய நஞ்சினு மிக்கக் கொடியதெனக் கூசாமல் உரைப்பேன் கேளுங்​களேன், தரித்​திரமே மற்றனைத்தும் பாதகத் / தந்திர தீயக் கொடுமை​களும் / புரியத் தூண்டும் பெருந்​துன்ப மிதற்குப் பொல்லாக் குடிவெறி காரணமே’ என்று எளிய மொழியில் குடியின் தீமை பற்றி விளக்கு​கிறார் ஆசிரியர்.
  • மற்றொரு இடத்தில், ‘மது எப்போதும் சுத்த​மானதல்ல. ஏராளமான கலப்பு​டையது. ஸ்டவ் அடுப்​புக்கே ஊற்றி எரிய வைக்கலாம். அந்த அளவுக்கு அதில் நஞ்சு உள்ளது. அடுப்பை எரியவைக்கும் திரவம் உடலை எரிக்​காதா?’ என்கிற தொனியில் மதுவின் தீமையை விளக்கு​கிறார். ‘நஞ்சு’ குடிப்பவரை மட்டும் கொல்லும். ‘மது’ குடிப்பவரை மட்டுமின்றி அவர்தம் பெற்றோர், உற்றார், குடும்பத்​தினரையும் கொன்று சர்வநாசம் செய்யும் என்கிறார். அக்காலத்தில் இந்நூலின் பாடல்கள் பல இடங்களில் தொடர்ச்​சி​யாகப் பாடப்​பட்டு, மக்களிடம் விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தப்​பட்​டிருக்​கிறது.
  • ‘குடிப்பது குளிரைப் போக்கும்’, ‘ஜீரணம் உண்டாக்​கும்’ என்கிற பொது எண்ணம் மக்களிடம் இருந்​திருக்​கிறது. அதைச் சுட்டிக்​காட்டி மதுவுக்கு அப்படிப்பட்ட குணம் இல்லை என்று விளக்கி​யிருக்​கிறார் நூலாசிரியர். குடியாளரைக் கண்டு மனைவி மக்கள் அஞ்சுவர், பெரும் தரித்​திரத்தை உண்டாக்கும் என்று கூறி, மதுவை விலக்கு​வதால் உண்டாகும் பயனைப் பட்டியலிடு​கிறார்.
  • இன்று உலகம் முழுவதும் செயல்​படும் AA (Alcoholic Anonymous) அமைப்பை பில் வில்சன் (Bill Wilson), டாக்டர் பாப் (Dr. Bob) ஆகியோர் இணைந்து 1935இல்தான் அமெரிக்​காவில் தொடங்​கினர். அதற்குச் சில பத்தாண்​டு​களுக்கு முன்பே தமிழ்​நாட்டில் அது போன்ற அமைப்புக் கட்டு​மானம் இருந்​திருப்பது குறிப்​பிடத்​தக்கது. 1844ஆம் ஆண்டு திருச்​சியில் முகாமிட்​டிருந்த பிரிட்டிஷ் படைவீரர்​களின் அதீத மதுப் பழக்கத்தைக் கட்டுப்​படுத்தி, அவர்களை மீட்கும் பணியில் திரிங்கால் பாதிரியார் ஈடுபட்டு இருந்​திருக்​கிறார்.

உள்ளூர்க் கட்டுப்​பாடுகள்:

  • மதுப் பழக்கத்தைக் கீழ்நிலையில் இருந்தே சரிசெய்ய வேண்டும் என்கிற ஓர்மையும் இருந்​திருக்​கிறது. பெரிய அளவில் திட்ட​மிட்டுச் செயல்​படு​வதைவிட, உள்ளூர் அளவில் சிறு குழுவுக்கான திட்டமாக வடிவமைத்து, மதுவுக்கு எதிரான தொழிற்​பாட்டினை நிகழ்த்​தி​யிருக்​கிறார்கள். கிராமம், சாதி சார்ந்து ‘மதுவருந்தக் கூடாது’ என்ற கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருக்​கின்றன.
  • கட்டுப்​பாட்டை மீறுகிறவர்​களுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டிருப்பதை 1926இல் வெளியான ‘இராயகுல மகாநாடு தீர்ப்பு விபரம்’ (பக்க எண்: 26) என்கிற நூல் விவரிக்​கிறது. இதன் வழி ஓர் ஊரின் / சாதியின் அனைத்து மக்களும் அனைவரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய சூழலில் மதுவிலக்கம் தன்னிச்​சையாக நடைபெற்றிருக்​கிறது.
  • மது மட்டுமின்றி, போதைப்​பொருள்​களின் தீங்கைக் கேலியாகச் சொல்லும் ‘புகை​யிலையின் வெண்பா’, ‘குடியர் ஆனந்தப் பதம்’, ‘கெஞ்​சாவின் ஆனந்தக் களிப்பு’, ‘கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து’, ‘குடியர் அலங்காரம்’ முதலிய நூல்களும் வெளிவந்​திருக்​கின்றன. இவை அனைத்தும் 1914இல் வெளியானவை. இவற்றில் குடும்பம், பெண்கள், பிள்ளைகள் என்னும் மூன்று விஷயங்களை முன்னிறுத்தியே போதையால் வரும் கேடுகள் பேசப்​பட்​டிருக்​கின்றன. போதைப் பழக்கம் அதிகரிப்​ப​தற்கும் குடும்பத்தின் சீர்கேட்டுக்​குமான தொடர்​புகள் குறித்த விஷயங்களே வெவ்வேறு விதங்​களில் சொல்லப்​பட்​டிருக்​கின்றன. இந்தச் செயல்​பாடு​களில் இருந்து சமகாலத்​துக்​காகப் பெற்றுக்​கொள்ள நிறைய வழிகாட்​டல்கள் உண்டு.
  • இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தடுக்க முடியாத மதுவை அரசே விற்பதும் விற்பனையை ஊக்குவிப்பதும் எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? சட்ட வடிவத்தைத் தாண்டி பண்பாட்டு ரீதியான மாற்றங்கள் மூலமாகவும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
  • அதைச் செயல்​படுத்து​வதற்கு மேற்கூறிய மதுவிலக்குச் சபை போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அமைப்புகளை ஊக்கு​விக்க வேண்டும். கூடவே, சமகாலத் தேவைகளையும் நடைமுறைச் சிக்கல்​களையும் கருத்தில் கொண்டு திட்ட​மிட்டுக் களப்பணி​யாற்றினால், பெருகிவரும் போதைப் பழக்கத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். அது மனித வளத்தின் ஆரோக்​கியத்​துக்கு அவசியம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்