மதுவிலக்குச் செயல்பாடுகள்: அன்றும் இன்றும்
- மது உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு ஆட்பட்டோரின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திறன் இழப்பு, விபத்து, இளவயது மரணம், குடும்ப வன்முறை, குற்றங்கள் உள்ளிட்ட துணை விளைவுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
- போதைப் பழக்கத்துக்கு ஆட்பட்டவருக்கு நிகழ்ந்த நேரடிப் பாதிப்புகளுக்குச் சற்றும் குறைவின்றி, அப்பழக்கத்துக்கு ஆட்படாதவர்களுக்கு மறைமுகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில் உடனடி அவசியத் தேவை மது ஒழிப்பா? மது விலக்கா? சுய விழிப்புணர்வா? இந்தக் கேள்விகளினூடாகக் கடந்த காலத்தில் மதுவுக்கு எதிராகச் செயல்பட்ட தன்னார்வ, சமூக நல இயக்கங்களின் செயல்பாடுகளை நினைவுகூர்வதன் மூலம் சமகாலச் சாத்தியங்களை விஸ்தரிக்க முயலலாம்.
- மதுவைப் பகிர்ந்து குடித்துக் களிக்கும் ‘உண்டாட்டு’ நடைமுறை தொல் சமூகத்தின் பண்பாடாக இருந்ததைப் போலவே மதுவைப் புறக்கணிக்கச் சொல்லும் அறச்செயல்பாடு பொ.ஆ. (கி.பி.) 2ஆம் நூற்றாண்டு முதலே இருந்துவந்திருக்கிறது. மதுவை வெறுக்கும் ‘அறம்’ தனியுடைமை, நிலவுடைமை வழியிலான வேளாண் சமூகம் உருப்பெற்றபோது, மேலிருந்து கீழ்நோக்கிச் சொல்லப்பட்டதாக இருக்கிறது.
- வேளாண் சமூகத்தின் உருவாக்கத்துக்குப் பங்களிப்பு செய்த அல்லது அச்சமூகத்தின் அறிவு விளைச்சலாகக் கருதப்பட்ட புலவர்களில் பலர் மதுவைப் புறக்கணித்து வாழ வலியுறுத்தியுள்ளனர். அதனால், சமூகப் புழக்கத்தில் மதுவை முற்றாகப் புறக்கணிக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருக்கிறது. இது ஒரு பண்பாட்டு ரீதியிலான செயல்பாடு.
கடந்த காலச் செயல்பாடுகள்:
- மது ஒழிப்புக்குச் சாத்தியமற்ற நிலையில், அதன் புழக்கத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம். அது மதுப்புழக்கத்தைச் சட்டத்தின் வரம்புக்குள் வைத்துக்கொள்வதற்கு உதவும். இன்னொரு புறம் மதுவுக்கு எதிரான சிந்தனையைப் பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்த வழிமுறையாக அமையலாம். உதாரணமாக, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, 1908ஆம் ஆண்டு ஜே.பி.சர்வாந்த்தோன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு, தென்னிந்தியா முழுக்கக் கிளைச் சபைகளைத் தோற்றுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘அன்னம்மாள் மதுவிலக்குச் சபை’யின் செயல்பாடுகளைக் குறிப்பிடலாம்.
- ஒவ்வொரு சபையிலும் ஒரு போதகரும் மருத்துவரும் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கின்றனர். மதுவுக்கு ஆட்பட்டவர்களுக்கு ஆன்மிக, மருத்துவ ரீதியிலான உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ஒருவகையில் இன்றைய போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்களைப் போன்றதாகத் தெரிகிறது.
- இந்தச் சபையில் உறுப்பினராகும் நபர்கள் ‘மருத்துவரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன், மதுவைப் புறக்கணிப்பேன்’ என்பதை முதல் உறுதிமொழியாக அளித்திருக்கிறார்கள். அவர்கள் மதுவிலக்குச் சபை நடத்தும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்கிற விதி இருந்திருக்கிறது. அதன்வழி தொடர்ச்சியான கண்காணிப்பில் அவர்கள் இருந்திருக்கின்றனர்.
- அங்கு வழங்கப்பெறும் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு, தேவைப்படும் இடத்தில் புதிய மதுவிலக்குச் சபையைத் தொடங்குவதற்கு உறுப்பினர்களுக்கு வழிகாட்டப்பட்டிருக்கிறது. இச்சபையின் வழிகாட்டலால் குடியிலிருந்து மீண்ட ஒருவர் மற்றொருவரை மீள வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்.
- இதில் சேர்ந்து மருத்துவ உதவியுடன் மீட்படைவதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. சபையின் நோக்கங்கள் களப்பணியினுடைய அனுபவங்களின் வழி ஒவ்வொன்றாக எழுதித் தொகுக்கப்பட்டவை. அந்த நோக்கங்களுள் ஒன்று, மக்களை எளிதில் கவரக்கூடிய கும்மிப் பாடல்களின் வழி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
- அதற்காக, 1916ஆம் ஆண்டு அன்னம்மாள் மதுவிலக்குச் சபையின் செயலாளர் சி.எஸ்.ஞானப்பிரகாசம் ‘மதுவிலக்குக் கும்மி’ என்ற நூலை எழுதினார். இச்சபையின் கோலார் தங்கவயல் கிளையின் தலைவர் சா.சே.துரைச்சாமி இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘நாற்ற மதுஜலத்தை நாளுங் குடித்துவெறித் / தாற்றுமத் தைகெடுத் தாஸ்திபொருள் – தோற்றழியு / மாந்தர்கட்கென் றேகும்மி மாமலைப் பாடித்தந்தான் / வேந்தன்ஞா னப்ரகாச வேள்’ என்கிறார்.
- இதன் வழி மதுவிலக்குக் கும்மி எழுதப்பட்டதன் நோக்கத்தையும் அக்காலச் சூழலையும் அறிந்துகொள்ள முடிகிறது. ‘குடிவெறியது கொடிய நஞ்சென / கூறினேன் சாஸ்திர சம்மதமாய்க் / கொடிய நஞ்சினு மிக்கக் கொடியதெனக் கூசாமல் உரைப்பேன் கேளுங்களேன், தரித்திரமே மற்றனைத்தும் பாதகத் / தந்திர தீயக் கொடுமைகளும் / புரியத் தூண்டும் பெருந்துன்ப மிதற்குப் பொல்லாக் குடிவெறி காரணமே’ என்று எளிய மொழியில் குடியின் தீமை பற்றி விளக்குகிறார் ஆசிரியர்.
- மற்றொரு இடத்தில், ‘மது எப்போதும் சுத்தமானதல்ல. ஏராளமான கலப்புடையது. ஸ்டவ் அடுப்புக்கே ஊற்றி எரிய வைக்கலாம். அந்த அளவுக்கு அதில் நஞ்சு உள்ளது. அடுப்பை எரியவைக்கும் திரவம் உடலை எரிக்காதா?’ என்கிற தொனியில் மதுவின் தீமையை விளக்குகிறார். ‘நஞ்சு’ குடிப்பவரை மட்டும் கொல்லும். ‘மது’ குடிப்பவரை மட்டுமின்றி அவர்தம் பெற்றோர், உற்றார், குடும்பத்தினரையும் கொன்று சர்வநாசம் செய்யும் என்கிறார். அக்காலத்தில் இந்நூலின் பாடல்கள் பல இடங்களில் தொடர்ச்சியாகப் பாடப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
- ‘குடிப்பது குளிரைப் போக்கும்’, ‘ஜீரணம் உண்டாக்கும்’ என்கிற பொது எண்ணம் மக்களிடம் இருந்திருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி மதுவுக்கு அப்படிப்பட்ட குணம் இல்லை என்று விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். குடியாளரைக் கண்டு மனைவி மக்கள் அஞ்சுவர், பெரும் தரித்திரத்தை உண்டாக்கும் என்று கூறி, மதுவை விலக்குவதால் உண்டாகும் பயனைப் பட்டியலிடுகிறார்.
- இன்று உலகம் முழுவதும் செயல்படும் AA (Alcoholic Anonymous) அமைப்பை பில் வில்சன் (Bill Wilson), டாக்டர் பாப் (Dr. Bob) ஆகியோர் இணைந்து 1935இல்தான் அமெரிக்காவில் தொடங்கினர். அதற்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் அது போன்ற அமைப்புக் கட்டுமானம் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1844ஆம் ஆண்டு திருச்சியில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களின் அதீத மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களை மீட்கும் பணியில் திரிங்கால் பாதிரியார் ஈடுபட்டு இருந்திருக்கிறார்.
உள்ளூர்க் கட்டுப்பாடுகள்:
- மதுப் பழக்கத்தைக் கீழ்நிலையில் இருந்தே சரிசெய்ய வேண்டும் என்கிற ஓர்மையும் இருந்திருக்கிறது. பெரிய அளவில் திட்டமிட்டுச் செயல்படுவதைவிட, உள்ளூர் அளவில் சிறு குழுவுக்கான திட்டமாக வடிவமைத்து, மதுவுக்கு எதிரான தொழிற்பாட்டினை நிகழ்த்தியிருக்கிறார்கள். கிராமம், சாதி சார்ந்து ‘மதுவருந்தக் கூடாது’ என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
- கட்டுப்பாட்டை மீறுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை 1926இல் வெளியான ‘இராயகுல மகாநாடு தீர்ப்பு விபரம்’ (பக்க எண்: 26) என்கிற நூல் விவரிக்கிறது. இதன் வழி ஓர் ஊரின் / சாதியின் அனைத்து மக்களும் அனைவரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய சூழலில் மதுவிலக்கம் தன்னிச்சையாக நடைபெற்றிருக்கிறது.
- மது மட்டுமின்றி, போதைப்பொருள்களின் தீங்கைக் கேலியாகச் சொல்லும் ‘புகையிலையின் வெண்பா’, ‘குடியர் ஆனந்தப் பதம்’, ‘கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பு’, ‘கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து’, ‘குடியர் அலங்காரம்’ முதலிய நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இவை அனைத்தும் 1914இல் வெளியானவை. இவற்றில் குடும்பம், பெண்கள், பிள்ளைகள் என்னும் மூன்று விஷயங்களை முன்னிறுத்தியே போதையால் வரும் கேடுகள் பேசப்பட்டிருக்கின்றன. போதைப் பழக்கம் அதிகரிப்பதற்கும் குடும்பத்தின் சீர்கேட்டுக்குமான தொடர்புகள் குறித்த விஷயங்களே வெவ்வேறு விதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தச் செயல்பாடுகளில் இருந்து சமகாலத்துக்காகப் பெற்றுக்கொள்ள நிறைய வழிகாட்டல்கள் உண்டு.
- இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தடுக்க முடியாத மதுவை அரசே விற்பதும் விற்பனையை ஊக்குவிப்பதும் எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? சட்ட வடிவத்தைத் தாண்டி பண்பாட்டு ரீதியான மாற்றங்கள் மூலமாகவும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
- அதைச் செயல்படுத்துவதற்கு மேற்கூறிய மதுவிலக்குச் சபை போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். கூடவே, சமகாலத் தேவைகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு திட்டமிட்டுக் களப்பணியாற்றினால், பெருகிவரும் போதைப் பழக்கத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். அது மனித வளத்தின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2024)