- தமிழகத்தின் மது விற்பனை வருவாய் 2021-22-இல் ரூ.36,013 கோடியாக உயர்ந்திருப்பதாக மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை தெரிவிக்கிறது. 2003-04-இல் வெறும் ரூ.3,640 கோடியாக இருந்த மது விற்பனை வருவாய் படிப்படியாக அதிகரித்து இப்போது ரூ.36,013 கோடியை எட்டியிருக்கிறது.
- பெரும்பாலான மதுபானத் தொழிற்சாலைகள் அரசியல் கட்சிப் பிரமுகர்களால் நடத்தப்படுவதும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடில்லாமல் அவர்கள் இணைந்து செயல்படுவதும் தெரிந்தும்கூட அதை வாக்காளர்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்பது வேதனையிலும் வேதனை. தமிழகத்தில் இப்போது 5,380 சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3,240 கடைகளில் மதுக்கூட (பார்) வசதியும் உள்ளது.
- மது அருந்துதல் என்பது, அருந்துபவர்களின் பிரச்னை மட்டுமேயல்ல, அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் ஏராளம். கணவன் - மனைவியிடையே தகராறு என்பது பல குடும்பங்களை சீரழிக்கிறது. மது போதையில் பல கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதைக்கு அடிமைப்பட்டவர்கள். மதுப் பழக்கத்தினால் உழைக்கும் திறன் குறைவதும், உழைப்பு நேர இழப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவை.
- விபத்துகளில் உயிரிழப்போரில் 3.5% பேர் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கியதாக நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மதுக்கடைகள் இயங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை அரசு கண்டுபிடித்ததே தவிர நிறைவேற்ற முற்படவில்லை.
- 1921-இல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, ஈவெரா பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். ஒரே நாளில் தன்னுடைய தோட்டத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார் என்று சொல்வார்கள்.
- 1938-இல் அன்றைய சென்னை ராஜதானியின் பிரதமராக ராஜாஜி பொறுப்பேற்றபோது மதுவிலக்கை முதல்முறையாக அமல்படுத்த முற்பட்டார். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 1% விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். 1948-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது.
- 1967-ஆம் ஆண்டில் சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது, படி அரிசி திட்டத்தை நிறைவேற்ற நிதியாதாரம் தேவைப்பட்டது. அதை எதிர்கொள்ள மதுக் கடைகளைத் திறக்கலாம் என்கிற யோசனை முன்மொழியப்பட்டது. மதுவிலக்கு ரத்தை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அன்றைய முதல்வர் அண்ணா.
- "அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பாகும். மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெய்யை வாங்குவதற்கு சமம். எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்' என்றார் அண்ணா.
- ஆனால், அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி 1971-இல் மதுவிலக்கை ரத்து செய்து மதுக் கடைகளைத் திறந்தார். மூதறிஞர் ராஜாஜி நேரடியாகவே கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று கோரியபோதும், அவர் செவிசாய்க்கவில்லை.
- தனிப்பட்ட முறையில் மது அருந்தாத, மதுவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட எம்ஜிஆரின் ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது மட்டுமல்ல, சாராயம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப்பின் வந்த ஜெயலலிதா ஆட்சியின்போது அரசே மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் நிறுவனம் இயங்கத் தொடங்கியது.
- ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். ஆனால், அது செயல்பாட்டுக்கு வரவில்லை. அதன்பிறகு இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மதுக்கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படவில்லை.
- சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கடந்த புதன்கிழமை (மே 4) பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, அதனால் "திராவிட மாடல்' ஆட்சி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பெரியார் - அண்ணா கொள்கைகளுக்கு எதிரான, அரசே மது விற்பனையில் ஈடுபடும் ஆட்சியை "திராவிட மாடல்' ஆட்சி என்று குறிப்பிடும் முரணை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை.
- கரோனா பேரிடர், ஜிஎஸ்டி அமலாக்கம் இவற்றுக்குப் பின்னர் மாநில அரசின் வருவாய் ஆதாரம் சுருங்கிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமல்ல என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதனால் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்ததுபோல, மதுவிலக்கை நோக்கிய முனைப்பாவது முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலின் அரசிடம் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கை.
- மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், கண்ணுக்குத் தெரியாத மருத்துவச் செலவினத்துக்கு வழிகோலுகின்றன. அடித்தட்டு மக்கள் பலர் கடன் சுமையிலும் சுகாதாரம் கெட்டும் சீர்குலைந்து போவதற்கு மதுக்கடைகள் காரணமாக இருக்கின்றன என்பதை தெரிவிக்க ஆய்வுகள் தேவையில்லை. மது விலக்கை நோக்கிய ஸ்டாலின் அரசின் பயணம்தான் பெரியார் - அண்ணா வழியிலான "திராவிட மாடல்' அரசின் பயணமாக இருக்கும்.
நன்றி: தினமணி (06 – 05 – 2022)