- கள்ளச்சாராய மரணங்கள் தொடங்கி மதுபான விற்பனை முறைகேடு வரை பல குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் தோற்றம், இன்றைய நிலவரம் குறித்து இந்தத் தருணத்தில் திரும்பிப் பார்ப்பது அவசியம்.
மதுவும் வருவாயும்:
- தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், மதுவிலக்குக் கொள்கையால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, 1971இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதினார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. 1971 ஆகஸ்ட் 31 அன்றுமதுவிலக்குச் சட்டத்தைத் தளர்த்தி, கள்-சாராயக் கடைகள் செயல்பட அனுமதி அளித்தார். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.26 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. எனினும், கடும் விமர்சனங்கள் எழுந்ததால் 1974 செப்டம்பர் 4 அன்று மீண்டும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார் கருணாநிதி.
- 1981இல், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே கையோடு, பூரண மதுவிலக்குச் சட்டத்தைத் தளர்த்தி, வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்க 10 நிறுவனங்களுக்குத் தயாரிப்பு உரிமம் வழங்கியது எம்ஜிஆர் அரசு.
- மது விற்பனையை ஒழுங்குபடுத்தி, வருவாய் அளவை உயர்த்தும் நோக்கோடு இந்திய நிறுவனச் சட்டம் 1956இன்கீழ் டாஸ்மாக் நிறுவனத்தை எம்ஜிஆர் தொடங்கினார். டாஸ்மாக் நிறுவனம், மொத்தமாகவும் சில்லறையாகவும் மது வகைகளை விற்பனை செய்யத் தொடங்கியது. 1989இல் திமுக அரசு மலிவு விலை மது விற்பனையை அறிமுகம் செய்தது.
- 2001இல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மது வகைகளின் மொத்த விற்பனை, டாஸ்மாக்கின் ஏகபோக உரிமை ஆனது. 2002இல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம், அருங்குணம் கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 53 பேர் உயிரிழந்தனர்.
- இதைத் தொடர்ந்து கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, 2003இல் மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து, சில்லறை விற்பனையையும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஏகபோக உரிமை ஆக்கியது ஜெயலலிதா அரசு. மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் அதிகரித்ததால், அடுத்தடுத்துவந்த அரசுகளும் இந்த நடைமுறையைத் தொடர்ந்தன.
மவுசு கூடிய மது விலக்குப் பிரிவு:
- டாஸ்மாக்கில் அண்மைக் காலமாக விலையேற்றம், கூடுதல் தொகை வாங்கப்படுவது போன்ற காரணங்களால், அடித்தட்டு மக்கள் சிலர் கள்ளச்சாராயத்தை நோக்கித் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது; கள்ளச்சாராய வியாபாரிகளும் அதிகரித்துவிட்டனர். போதாக்குறைக்கு, மது விலக்குப் பிரிவிலும் சட்டம்-ஒழுங்குப் பிரிவிலும் சில காவலர்கள் கள்ளச்சாராய வியாபாரிகளிடம் கையூட்டுப் பெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.
- இப்படியான பின்னணியில்தான், சமீபத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
கள் விற்பனை:
- தமிழ்நாட்டில் பனை, தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி விற்கவும், வாங்கிக் குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக போதைக்காகப் பனைமரத்துக் கள்ளில் குளோரல் ஹைட்ரேட் எனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டதால் 30 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட தடை அது.
- தற்போது கள் விற்பனையை ஒழுங்குபடுத்தி டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யலாமே என்கிற யோசனையை கள் இறக்கும் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். இவை அனைத்தையும் பரிசீலித்து அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்!
நன்றி: தி இந்து (30 – 05 – 2023)