TNPSC Thervupettagam

மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

May 25 , 2019 2058 days 1103 0
  • கடந்த மூன்றாண்டுகளில் சமுதாயத்தின் சில பிரிவினர் மீது இந்துத்துவ இயக்கங்கள் பெயரில் சமூகவிரோத சக்திகள் நடத்திய தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெற்றதால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. எனவே, பன்முக கலாசாரம், பல மொழிகள், பல இனங்கள் கொண்ட இந்தியத் தன்மையைக் காக்கக் கூடியதாக தனது அரசை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும். சட்டவிரோதக் கும்பல்களிடமிருந்து நாட்டைக் காக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில்....
  • நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் பலவும் கடந்த மூன்றாண்டுகளில் பாஜக அரசால் கட்டுப்படுத்தப்பட்டதாக ஒரு தோற்றம் உருவானது. தன்னாட்சி பெற்ற அந்த அமைப்புகள் சட்டப் பாதுகாப்புடன் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் செயல்படும் வகையில், முந்தைய தோற்றத்தை மக்களின் நலன் கருதி பிரதமர் மோடி தவிடுபொடியாக்க வேண்டும்.
  • தன்னாட்சி பெற்ற நிறுவனங்களின் தலைவர்களையும், அமைச்சகங்களின் செயலர்களையும்  நியமிப்பதில் தற்போது நிலவும் முறைக்கு மாற்றாக அடித்தள மாற்றத்தை பிரதமர் மோடி முன்னெடுக்க வேண்டும். இந்த அமைப்புகளின் தலைமைக்குத் தேர்வு செய்யப்படுவோரின் பட்டியலை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அரசு அனுப்ப வேண்டும். அந்தக் குழு தேர்வு செய்யப்படுவோரின் ஆவணங்களையும் அனுபவங்களையும் பரிசீலித்து, நேர்காணல் நடத்தி அவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு  நியமிக்கப்படுவோரின் பதவிக் காலம் ஓய்வு வயதின் அடிப்படையில் அல்லாது,  ஐந்து ஆண்டுகளாக வரையறை செய்யப்பட வேண்டும். இதன்மூலம் அரசியல் ரீதியான நியமனங்கள் தடுக்கப்படும்.
அரசு நிர்வாகம்
  • இந்திய அரசு நிர்வாகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளே பிரதானமானவர்கள். அவர்கள் மக்களுடன் நேரடித்  தொடர்பில் இருப்பவர்கள்; மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றும் இடத்தில் இருப்பவர்கள். அவர்களின் பணி நியமனத்துக்கு முன்னர், இந்திய ராணுவப் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாத முன்னோட்டப் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். போர்த் தந்திரங்களில் ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி குடிமைப் பணி அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
  • மேலும், எல்லைப்புற மாநிலங்களில் நான்கு மாத கள அனுபவம் பெறும் வகையில் குடிமைப்பணி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட வேண்டும். அதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறனையும், எல்லைப்புற பிரச்னைகளில் அனுபவ அறிவையும் அவர்கள் பெற முடியும். அதன் மூலம், தங்கள் பணிக்காலத்தில் பலவிதமான பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றலும், பணியில் நேர்மையும் அவர்களுக்கு அதிகரிக்கும். மத்திய அரசுப் பணிகளில் இணைய விரும்புவோருக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது.
ஊரகப் பகுதிகள்
  • இந்த அரசு மீது ஊரகப் பகுதியிலுள்ள மக்கள் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே ஊரக, கிராமப் பகுதியிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகர்ப்புறத்திலுள்ள பெரும் வர்த்தகர்கள் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாயை கபளீகரம் செய்திருப்பது மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இந்தப் பண முதலைகளிடமிருந்து வங்கிப் பணத்தை மீட்க மோடி அரசு 2016-இல் புதிய திவால் சட்டத்தை நிறைவேற்றியது. அதனால், கடன்களை வேறு வழியின்றி பல மோசடி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தியதையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
  • நிலமில்லாத தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக ஊரக வேலைவாய்ப்பு அமைச்சகத்தை இந்த அரசு உருவாக்க வேண்டும். பலவிதத் திறன்களின் அடிப்படையில் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகள் கிடைப்பதையும் அந்த அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை  அவசரகால அடிப்படையில், தீவிரமான திட்டமாக  நிறைவேற்றுவது அவசியம். அதற்காக மாவட்ட அளவிலான சிறப்பு அதிகாரிகளை நியமிக்கலாம்.
  • விவசாய நிலங்களை பாகப் பிரிவினை செய்வதும் கூறு போடுவதும் எந்தக் கட்டுப்பாடுமின்றி நடைபெறுகிறது. இதனால் விவசாய வளர்ச்சி பாதிக்கப்படுவது குறித்து எந்த அரசும் இதுவரை கவலைப்படவில்லை. ஒரு ஹெக்டேர் நிலப்பரப்புக்கும் குறைவாக விவசாய நிலங்களைப் பங்கிடுவதற்குத் தடை விதித்து அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். இது மாநில அரசு நிர்வாகம் தொடர்பான விவகாரம் என்பதால், மாநில அரசுகளுடன் ஆலோசித்து மாதிரி சட்டத்தை மத்திய அரசு வடிவமைக்க வேண்டும். இந்தச் சட்டத்தை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயம்
  • விவசாய சாகுபடிப் பயிர்களின் உற்பத்தித் திறன் நமது நாட்டில் உலக சராசரியைவிடக் குறைவாக உள்ளது. இதனை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் அவசியம். கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து உபரி விளைபொருள்களையும் அரசு வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான சட்டத்தை இந்த அரசு உருவாக்குவது இன்றியமையாததாகும்.
  • விளைபொருள்களை பத்திரப்படுத்தி விநியோகிக்கும் சேமிப்புக் கிடங்கு வசதிகள் தனியார் துறையில் போதிய அளவு நிறுவப்படவில்லை. எனவே, பொதுத் துறை நிறுவன சேமிப்புக் கிடங்குகளை மாநிலம் முழுவதும் அரசுகள் அமைக்க வேண்டும். அதன் மூலம்  நியாயமான கொள்முதல் விலையை விவசாயிகள் பெற இயலும்.
  • விவசாயக் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் பல இடங்களில் இன்னமும் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமான நிர்வாகக் கோளாறுகள், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி சரி செய்யப்பட வேண்டும்.
  • கிராமங்களுக்குத் தேவையான குடிநீர்,  கழிப்பறை, சாலைகள், விநியோக ஏற்பாடு, தெரு விளக்குகள், பள்ளிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வட்ட அளவில் சிறப்பு வட்டாட்சியரை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். அவை கிராம அளவில் உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக நிர்வகிக்கப்படுவதையும் சிறப்பு வட்டாட்சியர் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட கூடுதல் ஆட்சியர் அளவிலான அதிகாரி இந்தப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.
  • குறு,  சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களே வேலைவாய்ப்புகளை அதிக அளவில் வழங்கும் தொழில் துறையின் முதுகெலும்பாக உள்ளன. ஆனால், இந்தத் துறைக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட  வசதிகள் எளிதில் கிடைப்பதில்லை. இவர்களுக்கு கடனுதவி தேவையான நேரத்தில் உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • அதேபோல, ஏற்றுமதி செய்ய விரும்பும் சிறு நிறுவனங்களுக்கு, சீன அரசு வழங்குவது போன்று 5 சதவீதத்துக்கும் குறைவான வட்டியுடன் கடனுதவி அளிக்கப்பட வேண்டும். சீனாவிலும் தெற்காசிய நாடுகளிலும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் இந்தியாவிலுள்ள ஏற்றுமதி சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இதனை ஏற்றுமதியாளர்கள் உடனுக்குடன் பெற, பொருத்தமான ஏற்பாடு செய்யப்படுவதும் அவசியம். ரோபோ இயக்கம், செயற்கை நுண் ணறிவுத் திட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் கவனம் செலுத்துகின்றன. இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வேலைகளுக்கு நபர்களைச் சேர்ப்பது குறைகிறது.
தொழிற்துறை
  • இத்தகைய தொழிற்சாலைகளுக்கு மதிப்புக் கூடுதல் வரிகளை விதித்து, அதன் மூலம் கிடைக்கும் நிதியில்,  வேலைவாய்ப்பிழக்கும் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தி சேவைத் துறைகளில் ஈடுபடச் செய்யலாம். சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட சேவைத் துறைகளில்  வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த ஒரு சிறப்பு அமைப்பை அரசு நிறுவுவதும் காலத்தின் தேவையாகும்.
  • மேற்கண்ட பல நடவடிக்கைகளையும் மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பின்றி நிறைவேற்ற இயலாது.  எனவே, இவற்றை நடைமுறைப்படுத்த  மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் நிர்வாகக் குழுக்களை துறைதோறும் மத்திய அரசு உருவாக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், தொழில் துறை, ஏற்றுமதி, வர்த்தகம், விவசாயம், ஊரக வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் அந்த மாநில அமைச்சர் குழுக்களை ஜி.எஸ்.டி. நிர்வாகக் குழுவைப் போல அரசு நிறுவ வேண்டும். தேவைப்பட்டால் அதற்காக புதிய சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றலாம்.
  • அதன் மூலம், நிதி ஆதாரங்களின்அடிப்படையில் அரசின் கொள்கை முடிவுகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்த, மாநில அரசுகள் தேசியக் கருத்தாக்கத்துடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பு ஏற்படும்.
  • ஊரகப் பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்;  நகர்ப்புற மக்கள் பெற்றுவரும் அடிப்படை வசதிகளை கிராமப்புற மக்களும் பெற வேண்டும்; விவசாயிகள் ஊக்கத்துடனும் மன  உறுதியுடனும், லாபகரமாகவும்  விவசாயம் செய்யும் நிலை தொடர வேண்டும். அவர்களின் கனவுகளை நனவாக்குவது மத்திய அரசின் பொறுப்பு.

நன்றி: தினமணி(25-05-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்