TNPSC Thervupettagam

மத்திய பிரதேசம் : காங்கிரஸுக்குச் சாதகம்

November 4 , 2023 434 days 248 0
  • “மத்திய பிரதேசம் என்பது வெவ்வேறு மாநிலங்களின் விடுபட்ட நிலப்பரப்புச் சேர்க்கை, இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி நெருங்கிய பிணைப்பு இல்லாத வெவ்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கவில்லை” என்றார் அரசியல் அறிவியலாளர் வேய்ன் காக்ஸ்.
  • தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவிட்டது. காங்கிரஸ் – பாரதிய ஜனதா இடையில் எந்தக் கட்சிக்கு மாநில சமூகங்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதுதான் அறியப்பட வேண்டும். அது நிச்சயம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கப்போகிறது.
  • மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் 2000வது ஆண்டில் பிரிக்கப்படும் வரை இந்த மாநிலம், நான்கு வெவ்வேறு - ஆனால் தனித்துவமான - பிரதேசங்களின் கூட்டுக் கலவையாகத்தான் இருந்தது. 1. மால்வா பீடபூமியை ஒட்டிய மத்திய-மேற்கு மால்வா பிரதேசம்; 2. விந்திய மலைத்தொடரை ஒட்டிய வடக்கு-கிழக்கு பிரதேசம் – இது உத்தர பிரதேச எல்லையை ஒட்டியவரை செல்கிறது, 3. தெற்கில் உள்ள மகா கோசலப் பகுதி - கனிம வளம் மிக்கது, மகாராஷ்டிர எல்லையை ஒட்டியது, 4. தென்-கிழக்கில் இருந்த சத்தீஸ்கர் பகுதி. இதுதான் தனி மாநிலமாகிவிட்டது.

கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்

  • மத்திய பிரதேசத்தில், 2000வது ஆண்டு மாநிலப் பிரிவினைக்கு முன்னதாக நிலவிய மூன்று அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியது.
  • முதலாவது, 1956இல் மத்திய பிரதேச மாநிலம் ஏற்படுத்தப்பட்டபோது சட்டப்பேரவையின் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள், அந்த நாள் சமஸ்தானங்களின் (ராஜதானிகள்) பகுதிகளில்தான் இருந்தன. மத்திய பிரதேசத்தின் அரசியலில் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திவந்திருக்கிறது, அதற்கு அந்நாளைய ராஜ வம்சத்தவரின் செல்வாக்கும், நில உடைமையாளர்களாக இருந்த முற்பட்ட சாதியினரின் ஆதரவும் முக்கிய காரணம்.
  • இரண்டாவது, இப்படி வெவ்வேறு ராஜ வம்சத்தவர்களும் நில உடைமையாளர்களும் ஆதரவாளர்களாக இருந்ததாலேயே காங்கிரஸ் கட்சிக்குள் வெவ்வேறு குழுக்களும் வலிமை வாய்ந்ததாகவும் ஒன்றையொன்று எதிர்த்து தொடர்ந்து செயல்படுவதாகவும் இருந்தன. முன்னாள் முதல்வர்கள் டி.பி.மிஸ்ரா, எஸ்.சி.சுக்லா போன்றோர் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டிக் குழுக்களாகவே செயல்பட்டு ஆதரவாளர்களையும் திரட்டி வைத்திருந்தனர். இதனால் காங்கிரஸ் ஆளுங்கட்சியாகவே தொடர்ந்த நிலையிலும், ஆட்சி என்பது கூர்வாள் முனை மீது இருந்துகொண்டு எப்போதும் சாகசம் செய்ய வேண்டியிருந்தது. ஆயினும் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருந்தது. 1977-80இல் ஜனதா, 1990-92 பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சிகள் விதிவிலக்காக இருந்தன.
  • உத்தர பிரதேசம், பிஹாரைவிட மத்திய பிரதேசத்தில் முற்பட்ட சாதியினரின் அரசியல் ஆதிக்கம் தூக்கலாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தது. சுதந்திரத்துக்கு முன்னால் நாட்டின் பிற பகுதிகளில் மக்களைத் திரட்டிய காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்தில் சுதேச மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை அரசியல் இயக்கமாக மாற்ற அதிக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. எனவே, 1967 வரையில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற முற்பட்ட சாதியினரின் எண்ணிக்கை மட்டும் 66% முதல் 86% வரையில் இருந்தது.

மண்டலும் மத்திய பிரதேசமும்

  • இதில் 1990களில் உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களில் பற்றி எரிந்த மண்டல் ஆணையப் பரிந்துரை விவகாரம், மத்திய பிரதேசத்தில் பெரிய அளவில் உணரப்படவே இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள்.
  • முதலாவது, மத்திய பிரதேச மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஒபிசி) அனைவருமே சேர்ந்தும்கூட 40% இல்லை. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல இங்கே ஒபிசி பிரிவைச் சேர்ந்த யாதவர்கள், ஜாட்டுகள், குர்மிகள் என்று எந்தச் சாதியினரும் கணிசமான எண்ணிக்கையில் இல்லை. சொல்லப்போனால் எந்த இடைநிலைச் சாதியினரும் மொத்த மக்கள்தொகையில் 5%கூட இல்லை. 2000வது ஆண்டுக்குப் பிறகு எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களில் யாதவர்கள் 4%, குர்மிகள் 2.5%. ஜாட்டுகள் 0.3% மட்டுமே. எனவே, இந்த மாநிலத்தைப் பொருத்தவரை ஒபிசி பிரிவினருக்கு அரசியலில் பேரம் பேசும் வலிமை இல்லை.
  • இரண்டாவது, திக் விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்கவைக்க, அபூர்வமான சாதிக் கூட்டணியைத் தன் செல்வாக்கில் கொண்டுவந்தது. ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரையும், பட்டியல் இனத்தவர் – பழங்குடிகளையும் இணைத்து மேல் – கீழ் சமூக அடுக்குகளை இணைத்துவிட்டது. பட்டியல் சமூகத்தவர்கள், பழங்குடிகளுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்துத் தங்கள் கூட்டில் இடம்பெறச் செய்தது. மக்கள்தொகையில் பட்டியல் இனத்தவர் 14% பழங்குடிகள் 21%. இவ்விருவரும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கு இருக்கின்றனர். மண்டல் – மந்திர் பிரச்சினைகளால் பிற இந்தி மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியைப் கண்டபோதிலும் மத்திய பிரதேசத்தில் திக் விஜய் சிங் தலைமையில் காங்கிரஸ் அடுத்தடுத்து இரண்டு பொதுத் தேர்தல்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

காங்கிரஸ் ஆட்சியை இழந்தது ஏன்?

  • அப்படி இருந்த காங்கிரஸ் கட்சி ஏன் ஆட்சியை இழந்தது, 2003இல் ஏன் படுதோல்வி அடைந்தது என்று கேட்கலாம். இதற்கான காரணங்களும் இரண்டு.
  • முதலாவது, கல்வி சுகாதாரம் ஆகிய துறைகளில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடிகளுக்கும் வசதிகளைச் செய்து தரும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் மின்சார இணைப்பு, குடிநீர், சாலை வசதிகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் திக் விஜய் சிங் அரசு கோட்டைவிட்டது. இந்த மூன்றையும் செய்து தருவோம் என்று கூறி (பிஜ்லி-பானி-சடக்) பாஜக தேர்தலில் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது.
  • இரண்டாவதாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தனர். பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் பக்கம் காங்கிரஸ் சாய்ந்துவிட்டதால் கோபமடைந்த ஒபிசியினர் ஒட்டுமொத்தாக பாஜகவை ஆதரித்தனர். அந்தக் கட்சிக்கு ஒபிசி தலைவர்கள் உமா பாரதி, சிவராஜ் சிங் சௌஹான் தலைமை வகித்ததால் இது மிகவும் எளிதாகிவிட்டது. 2003 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 50% பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்தது, காங்கிரஸுக்கு 26% வாக்குகள்தான் கிடைத்தன. இதனாலேயே பாரதிய ஜனதா கடந்த இருபதாண்டுகளாக மத்திய பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

சௌஹானும் கமல்நாத்தும் 

  • அது மட்டுமின்றி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி அடிப்படையில் மட்டும் அல்லாமல் அவர்கள் செய்யும் வேளாண் தொழில் வழியாகவும் இணைத்துவிட்டார் சௌஹான். மாநில மக்களில் 50% பேர் விவசாயிகள் என்பதால் பிற விவசாயிகளும் பாஜகவை ஆதரித்தனர். விவசாயத்துக்கு ஆதரவாக முதல்வர் சௌஹான் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளால் மாநில வேளாண் உற்பத்தி பல மடங்காக உயர்ந்திருக்கிறது. 2007-15 காலத்தில் வேளாண்மையிலிருந்து மாநிலத்துக்குக் கிடைத்த ஜிடிபி சராசரியாக 10.9% அதிகரித்துவந்திருக்கிறது, தேசிய சராசரி 4.3% மட்டுமே.
  • பொருளாதார அறிஞர் அசோக் குலாத்தி 2017இல் வெளியிட்ட ஆய்வறிக்கை இதைத் தெரிவிக்கிறது. பாசன வசதிகள் பல மடங்கு உயர்ந்துள்ளன, நிலத்தடி நீரை சாகுபடிக்குப் பயன்படுத்த வசதியாக நம்பகமான மின்சார வசதியை மாநில அரசு வழங்குகிறது, வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நல்ல மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது, எல்லா கிராமங்களுக்கும் சாலைகள் போடப்பட்டு அவை எல்லாப் பகுதிகளுடனும் இணைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளால் எளிதில் சந்தைக்குச் செல்ல முடிகிறது, அத்துடன் குடிநீர் வசதிகளும் மேம்பட்டிருக்கிறது.
  • ஆனால், 2018க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியால் பாஜகவுக்கு வலிமையான போட்டியைத் தர முடிகிறது. காரணம் வேளாண் வருமானம் தேக்க நிலையில் இருக்கிறது. சுகாதார வசதிகள் போதவில்லை. ஒபிசி பிரிவினரைக் கவர காங்கிரஸ் தனிக் கவனம் செலுத்துகிறது. ஒபிசிக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என்று மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் மேடைதோறும் முழங்கிவருகிறார்.
  • வெற்றிபெற வேண்டும் என்ற பொது நோக்கில் ஒற்றுமை காக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இருபதாண்டு காலம் தொடர்ந்து ஆட்சிசெய்வதால் மக்களுக்கு பாஜக அரசின் மீது அதிருப்தியும், ஆட்சியை மாற்றினால் என்ன என்ற மனநிலையும் ஏற்பட்டிருக்கிறது. 2018 தேர்தலின்போது பட்டியல் இனத்தவரும் பழங்குடிகளும் பாஜகவைவிட காங்கிரஸையே அதிகம் தேர்ந்தெடுத்தனர். பழங்குடிகளில் 10%. பட்டியல் இனத்தவரில் 16% அதிக ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குத்தான் கிடைத்தது.

கடும் முயற்சிகள்

  • கருத்துக் கணிப்புகள் துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்குப் பாஜகவைவிட அதிக ஆதரவு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக வேலை செய்கிறார்கள், கட்சி அமைப்பும் சுறுசுறுப்பாக இருக்கிறது.
  • பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பின் வலிமையான நிர்வாக அமைப்பு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக முயல்கிறது. நகர்ப்புறங்களிலும் மால்வா பிரதேசத்திலும் பாஜகவுக்கு ஆதரவு சிறிது அதிகம். எல்லாவற்றையும்விட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடும்போது குறைகளை மறந்து ஆட்சி தொடர வாக்களித்தால் என்ன என்று நடுநிலை வாக்காளர்களில் சிறிய அளவுப்பேர் தீர்மானித்தாலும் தேர்தல் முடிவு பாஜகவுக்குச் சாதகமாகிவிடும் என்றும் தோன்றுகிறது.
  • மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா தவிர பிற கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: அருஞ்சொல் (04 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்