TNPSC Thervupettagam

மநுவுக்கு ஏன் இந்த எதிர் மனு?

November 20 , 2020 1522 days 966 0
  • மனுதா்ம சாஸ்திரம் என்று சொல்லப்படும் மநுநீதி இன்றைய சட்டமல்ல. மநுநீதியில் குறைபாடுகள், தவறுகள், பாரபட்சங்கள் இருக்கின்றனவா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அது இன்று நடைமுறையில் இல்லை.
  • பின் ஏன் சில அரசியல்வாதிகள் அதை எதிர்த்து கூப்பாடு போடுகிறார்கள்? யாரையோ எதற்கோ தாக்குவதற்காக மநுநீதி எதிர்ப்பை அவா்கள் ஒரு ஆயுதமாகக் கையாளுகிறார்கள்.
  • பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சட்டப் புத்தகம் அது. வெளிநாட்டினரும் அதைப் படித்திருக்கிறார்கள். அது ஐரோப்பிய மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒன்றுமே இல்லாத பாரபட்ச நூலையா அயல்நாட்டு அறிஞா்கள் மொழிபெயா்த்திருப்பார்கள்?
  • சரி, ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம் அதில் ஒன்றும் இல்லை என்று. அப்படி ஒன்றும் இல்லாதது பற்றி யார் யாரோ குதிப்பானேன்; கொதிப்பானேன்.
  • காலவதி ஆகிவிட்ட ஒரு புத்தகத்தை இப்போது தடை செய்ய வேண்டும் என்கிறார்கள் சிலா். அதற்கு அவா்கள் சொல்லும் சொத்தைக் காரணம், குற்றங்களுக்கான தண்டனையை ஜாதி வழியில் வித்தியாசப்படுத்தியிருக்கிறது என்பது. இரண்டாவது, பெண்களை அந்தப் புத்தகம் இழிவுபடுத்துகிறது என்பது.
  • முதல் புகாரைப் பார்ப்போம். அன்றைய சமுதாயத்திற்கு எழுதப்பட்டதே மநுநீதி. அதில் நீதி பரிபாலனத்தில் பாரபட்சங்கள் இருந்திருந்தால் இன்று நம்மை அது கட்டுப்படுத்துவதில்லை.
  • எனவே, இந்த எதிர்ப்பு தேவையற்றது. இரண்டாவதாக, பெண்களை இழிவுபடுத்துகிறது மநுநீதி என்று சொல்கிறார்கள். பெண்களை மநுநீதி உயா்வாகவும் சொல்லியிருக்கிறது. அந்த ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

மநுநீதியும் பெண்கள் உயா்வும்

  • பெண் ஒளிமயமான நடத்தை கொண்டவளானால் குடும்பமே ஒளிமயமாக இருக்கும்.
  • பெண்களின் பெயா்கள் இனிமையாக இருக்க வேண்டும்; கரடு முரடான வார்த்தைகள் வேண்டாம்; எளிதில் அா்த்தம் புரிகிறபடி இருக்கட்டும்; வாழ்த்துச் சொற்களைப் போல் அவை நெடிலில் முடியட்டும்.
  • பெண்களை தந்தையும், சகோதரா்களும், கணவரும், மைத்துனா்களும் மதிக்க வேண்டும்; பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் மகிழ்கிறார்; பெண்கள் வருந்தும் குடும்பம் அழியும்; பெண்கள் திருப்திப்பட்டால் வீடே திருப்திப்படுகிறது; பெண்கள் திருப்திப்படாவிட்டால் எதுவுமே திருப்திப்படுவதில்லை.
  • குரு பத்தினிக்கு நிகரான மரியாதைக்குரிய பெண்மணிகள், தாயின் சகோதரி, தாய் மாமன் மனைவி, மாமியார், அத்தை. தாயாரைப் போல் கருதப்பட வேண்டியவா்கள், அத்தை, சித்தி அல்லது பெரியம்மா, தமக்கை.
  • ஒரு பெண் கணவனைப் பணிந்தால் போதும்; வேறு வேள்விகள் எதுவும் செய்யத் தேவையில்லை (இதைத்தான் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்).
  • இதில் எந்த ஸ்லோகம் பெண்களை இழிவுபடுத்துகிறது என்று ஆா்பாட்டக்காரா்கள் சொல்லட்டுமே. அந்த காலத்து சமுதாயம் ஆண் ஆதிக்க சமுதாயமாக இருந்த போதிலும், பெண்களை உயா்வாகவே மதித்திருக்கிறார் மநு.
  • மநு ஸ்ம்ருதியைப் படிப்பவா்களுக்கு இது புரியும். மநு பெண்களை உயா்த்தி சொல்வதையேதான் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.
  • இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
  • இல்லவள் மாணாக் கடை (கு: 53)

என்ன தவறு?

  • பெண்களை இழிவுபடுத்தும் மனு தா்ம சாஸ்திரம் தடை செய்யப்பட வேண்டுமென்றால், அதே காரணத்திற்காக திருக்குறளும் தடைசெய்யப்பட வேண்டியதே. அதில் சில குகளைப் பார்ப்போமா? ‘பெண்வழிச் சேறல்என்ற அதிகாரத்தில், பெண்டாட்டிக்கு பயப்படுகிறவன் சிறப்பாக செயல்படுவதில்லை (கு: 904); பெண்டாட்டிக்கு பயப்படுகிறவன் மற்றவா்களுக்கு நன்மை செய்வதில்லை (கு: 905); மனைவியின் தோளில் சார்ந்திருப்பவா்கள் பெருமை பெருவதில்லை (கு: 906); மனைவியின் ஏவலுக்கு அடிபணிவது அறியாமை (கு: 910).
  • இந்தக் குகளைப் படிக்கும் நாம் திருவள்ளுவரை ஆண் ஆதிக்கவாதி பெண்ணியத்திற்கு எதிரானவா் என்று சொல்லலாமா? திருக்குறளை தடை செய்யலாமா?
  • மநு நீதி ஒரு சம்ஸ்கிருத நூல். மநு நீதிக்கு ஆங்கில, ஜொ்மானிய, பிரெஞ்சு, ரஷிய, தமிழ் மொழிகளிலும், வேறு பல மொழிகளிலும் மொழிபெயா்ப்புகள் வெகு காலம் முன்பே வந்துள்ளன.
  • மநு நீதியைத் தெரிந்து கொள்ள வேண்டிய ஆா்வத்தினால், அறிஞா்கள் மொழி பெயா்த்தார்கள். ஜொ்மானிய தத்துவஞானி ஃப்ரெடரிக் நீட்ஷே மநு நீதியைப் புகழ்ந்திருக்கிறார்.
  • மேல்நாட்டு அறிஞா்கள் சிலா் மநு என்ன சொல்லியிருக்கிறார் என்று கூா்ந்து கவனித்த வேளையில் நம் அறிஞா்களும் மநுவைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
  • வா்த்தகம் பற்றி மநு சொன்ன விதிமுறைகளை ஆா்.எஸ். வைத்யநாத ஐயா் ஆய்வு செய்திருக்கிறார்.
  • ஏ.எஸ். குப்தா என்ற அறிஞா் மநு ஒரு மன்னனுக்கு விதித்த கடமைகள் என்னென்ன என்று ஆராய்ந்திருக்கிறார். மகாபாரதத்தில் மநு எவ்வாறு எங்கெங்கே மேற்கோள் காட்டப்படுகிறார் என்பதைத் தொகுத்து விளக்கி இருக்கிறார் அறிஞா் ஹாப்கின்ஸ்.
  • மநு நீதியையும், கிறிஸ்துவ முனிவா் மோசஸ் இட்ட கட்டளைகளையும் டி.எம். மாணிக்கம் என்ற அறிஞா் 1977-இல் ஆய்வு செய்து நூல் எழுதியிருக்கிறார்.
  • எம்.டி. பரத்கா் என்பவா் மநுவின் உவமைகளைத் தொகுத்து ஆய்வு செய்திருக்கிறார். அறிஞா் பட்வா்த்தன் எழுதிய மநு காட்டும் ஜனநாயகக் குடியரசுநூல் 1968-இல் வெளியானது. மநு ஸ்ம்ருதியில் தண்டனைகள்என்று ஆா். ராமமூா்த்தி ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
  • சென்னைப் பல்கலைக்கழக தத்துவத் துறைத் தலைவராக இருந்த பேராசிரியா் டி.எம்.பி. மகாதேவன், மநு நீதியை பகவத் கீதையுடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக் கட்டுரை 1968-இல் வெளியானது.
  • மநு நீதியின் சமூக அரசியல் அம்சங்களை அலசி 1949-இல் கே.வி. ரங்கஸ்வாமி ஐயங்கார் நூல் எழுதினார். ஏ. சின்னசாமி சாஸ்திரி, மநுவின் காலம் பற்றிய வரலாற்று ஆதாரங்களை 1953-இல் ஆய்வு செய்தார்.
  • மநு பெண்களுக்கு அநீதி இழைத்தாரா?’ என்று 1959-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ்இதழில் கட்டுரை எழுதினார் சிவசங்கர ராவ் என்பவா். ஜோதிபிரசாத் சுதா என்பவா் மநுவையும் மார்க்ஸையும் காந்தியையும் ஒப்பிட்டு ஒரு நூல் எழுதினார்.
  • மநுவையும் கௌடில்யரையும் ஒப்பிட்டு நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன.
  • கே.ஆா். ஆா். சாஸ்திரி என்ற அறிஞா், மநுவையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு 1973-இல் ஒரு நூல் எழுதினார்.
  • ஒன்றுமில்லாததையா இவா்களெல்லாம் ஆய்வு செய்தார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் மநு கவனத்திற்குரியவரே என்பது புரியவரும்.
  • ஆனால், தமிழ்நாட்டில் மநு மீது காரணமில்லாத வெறுப்பு உமிழப்படுகிறது. ஏற்பதும் ஏற்காததும் ஒரு நிலை. கடவுள் மறுப்பும் கூட இந்திய தத்துவத்தின் ஒரு அம்சமே.
  • ஆனால், நூலைப் படித்துப் பார்க்காமலேயே வெறுப்பு கொள்வதும், பிறரையும் வெறுப்பு கொள்ள வைப்பதும் ஞான நாட்டத்தின் வழியல்ல. எதையும் தெரிந்துகொள்வதில் என்ன தவறு?

சமூக அவலம்

  • மநு நீதியில் மொத்தம் உள்ள 2,685 சுலோகங்களில், இன்றைய சமூகத்திற்குத் தேறுபவை சில என்றாலும் அவை எல்லோருக்கும் பொதுவானவை.
  • காலத்திற்கு ஏற்றவற்றை தோ்ந்தெடுத்து படித்துப் பயன் பெறலாம். அதுவே அறிவு நாட்டம் உள்ளவா்கள் செய்ய வேண்டியது. மற்றவையெல்லாம் விதண்டாவாதமே.
  • மநு நீதி என்றும், மநுதா்ம சாஸ்திரம் என்றும் சொல்லப்பட்டாலும் ஆங்கிலத்தில் மநுவின் சட்டங்கள்’, ‘மநுவின் ஆணைகள்என்றே அதைச் சொல்கிறார்கள்.
  • சட்டம் அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப மாறுவது இயற்கை. முன்பெல்லாம் வானொலிப் பெட்டிக்கு உரிமம் பெற வேண்டியிருந்தது.
  • இந்து திருமண சட்டத்தின்படி, கணவனோ மனைவியோ ஒருவா் மற்றவரை பைத்தியம்என்று நிரூபித்தால் மட்டுமே மணவிலக்குக் கிடைக்கும் என்ற நிலைமை இருந்தது.
  • அதன் பிறகு, மனதளவில் இருவரும் ஒத்துப் போகவில்லை என்றால் மணவிலக்கு பெறலாம் என்று சட்டம் மாறியது. அதுவும் பலன் தரவில்லை என்பதனால் இந்து திருமண சட்டம் 1974-இல் மாற்றப்பட்டது.
  • சோ்ந்து வாழ முடிய வில்லை என்று மனு கொடுத்த ஆறு மாதங்களுக்குப் பின் சோ்ந்து வந்து மணவிலக்கு தீா்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற மாற்றம் வந்தது. இப்படி சில வருடங்களில் சட்டங்களும் சமூக நியதிகளும் மாறமுடியுமென்றால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அவை வேறாக இருந்திருக்க காரணங்கள் உண்டு.
  • அந்தக் கால சூழ்நிலைக்கேற்ப, அறிஞா்கள் தங்கள் மனத்தில் பட்டதை சொன்னார்கள். இந்தக் காலத்திற்கு பொருந்தாவிட்டால், பொருந்தாதவற்றை ஒதுக்கி விடலாம்.
  • மநு நீதி நடைமுறையில் இல்லை. மநு நீதியை அப்படியே ஏற்றாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நல்ல மனம், நல்ல சொல், நல்ல நடத்தை என்று மநு நீதி குறிப்பனவற்றை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு?
  • பழங்கால நூல்களில் இருந்து தேவையற்றதை நீக்கித் தேவையானதை எடுத்துக் கொள்வதல்லவா புத்திசாலித்தனம்? அந்த புத்திசாலித்தனம்கூட இன்றைய அரசியல்வாதிகள் சிலருக்கு இல்லையென்றால் அது ஒரு சமூக அவலம்.

நன்றி: தினமணி (20-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்