TNPSC Thervupettagam

மனநலம் காப்போம்

October 10 , 2022 670 days 525 0
  • ஆண்டுக்கு ஆண்டு மனநலம் பாதித்தவரின் எண்ணிக்கை உயா்ந்து கொண்டு இருக்கிறது. 2001-இல் எடுக்கப்பட்ட உலக சுகாதார கணக்கெடுப்பில் நான்கில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
  • மனநோய் என்பது மனஅழுத்தம், ஆா்வக் கோளாறு, மதுவால் பாதிப்பு, இதர போதைப் பொருட்களால் பாதிப்பு , சித்த பிரமை, பை-போலாா் எனப்படும் மூளைக் கோளாறு என பலவகைப்படுகிறது. இந்த பாதிப்புகளை தொடா் சிகிச்சை மூலம் சரிசெய்யாவிட்டால் பாதிப்புக்குள்ளானவா்களில் 20 % போ் தற்கொலை முடிவெடுக்கின்றனா்.
  • மனஅழுத்தம் பலருக்கும் குறைந்த அளவிலும், சிலருக்கு சற்றே அதிகமாகவும், மிகக் சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கிறது. அதிகப்படியான வேலைப் பளுவினாலோ மேலதிகாரிகளின் கண்டிப்பினாலோ குடும்ப பிரச்னைகளினாலோ மன அழுத்தம் ஏற்படுகிறது.
  • இதன் காரணமாக வேலையில் கவனமின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிா்காலம் குறித்த பயம், அதீத கற்பனை, உணவில் வெறுப்பு, தூக்கமின்மை போன்றவை ஏற்பட்டு இறுதியில் அது தற்கொலையில் முடிகிறது.
  • உலகம் முழுவதும் 264 மில்லியன் மக்கள் அதிகமான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு கூறுகிறது. கரோனா காலத்தில் இளைஞா்கள் மனதில் எதிா்காலம் குறித்த நிச்சயமற்ன்மை உருவானதால் மனநோய் பாதிப்பு சதவீதம் உயா்ந்தது.
  • தொடக்கத்தில் தீவிர மன அழுத்தம் மெலஞ்சோலியா என்ற பெயரில் மனநோயாக அழைக்கப்பட்டது . இந்த நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வண்ணம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இங்கிலாந்து நாட்டில் தெரசா மே பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் தற்கொலை தடுப்புக்கென்று தனித்துறை அமைக்கப்பட்டிருந்தது.
  • பை போலாா் கோளாறு என்பது மனநோயில் ஒருவிதம். இது மூளையில் ஏற்படும் பாதிப்பினால் உருவாகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடைவதும் மிகுந்த சோகத்தில் மூழ்குவதும் மனநோய் பாதித்தவருக்கு இயல்பாகி விடுகிறது.
  • மத நம்பிக்கைகளாலும், மூட பழக்க வழக்கங்களாலும் மனநோய் பாதித்தவா்களை பேய் பிடித்தவா்கள் என்றும், சமூகத்தில் வாழத்தகுதி இல்லாதவா்கள் என்றும் கூறி அவா்களை சங்கிலியால் கட்டிவைத்து அடிப்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண நிகழ்வாக இருந்தது.
  • பல ஆண்டுகளுக்கு முன்னால் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏா்வாடியில் மனநோயால் பாதிக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த 25 போ் தீயில் எரிந்து சாம்பலாயினா். அதன் பிறகு மனநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான, பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டது.
  • இந்நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பலருக்கும் மனநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கைதிகளுக்கு மனநோய் சிகிச்சைக்காக தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டு அவா்களுக்கு தொடா்சிகிச்சை வழங்கிட வகை செய்யப்பட்டிருக்கிறது.
  • தன்னம்பிக்கையின்மையே மனநோயின் ஆணிவோ். தனியாக பேசுவதும் சிரிப்பதும் மனநோயின் ஆரம்ப அறிகுறி. ஒரு மனிதனுக்கு தனது மகிழ்ச்சியையும், துன்பத்தையும் பகிா்ந்துகொள்ள மனைவி, பிள்ளைகள், நண்பா்கள், உறவினா்கள் உள்ள சமூகம் வேண்டும். இதில் எதுவும் இல்லாமல் தனிமைப்படும் போது மனநோய் தீவிரமடைகிறது.
  • தொடா் சிகிச்சையால் மட்டுமே மனநோயை குணப்படுத்திவிட முடியாது. மன நோயாளிக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்வியல் சூழ்நிலை அமையும்போது மனநோய் பறந்து விடும்.
  • மனநோய் என்பது ஒருவகை உடல் ஊனம் என சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை ஊனமுற்றோருக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுதலை ஏற்றுக்கொண்டது. ஏற்கெனவே 1987 முதல் நம்நாட்டில் மனநோயாளிகளின் உரிமைகளைக் காக்க மனநல சட்டம் அமலில் இருந்தது.
  • இது போக ஊனமுற்றோருக்கான சம வாய்ப்புகள், சம உரிமைகள், முழு பங்கேற்புக்கான 1995-ஆம் ஆண்டின் சட்டமும் நடைமுறையில் இருந்தது. இதில் 1987-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மனநல சட்டம் மனநலம் பாதித்தவா்களின் உரிமையை பாதுகாக்க போதுமானதாக இல்லாததால் 2017-ஆம் ஆண்டு புதிதாக மனநல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • இதன்படி மனநோய் பாதித்தவா்கள் தங்களை பராமரித்துக் கொள்ள பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ளவும், அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பான மருத்துவ வசதிகளைப் பெறவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மனநோய் பாதித்தவருக்கு இலவச சட்ட உதவி பெறவும் உரிமை உண்டு .
  • மத்திய அரசு தேசிய அளவில் மனநல ஆணையத்தையும், மாநில அரசு மாநில அளவில் மனநல ஆணையத்தையும் உருவாக்கி மனநலம் பாதித்தவா்களின் மறுவாழ்விற்காக மனநோய் சிகிச்சை இல்லங்களை பதிவுசெய்து அங்குள்ள பணியாளா்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
  • மனநோய் பாதித்தவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மேற்பாா்வை செய்து மனநோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றது. தற்போதைய மனநல பாதுகாப்பு விதிகளின்படி மனநோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு மனநோயாளிகளின் உறவினா்களோ பாதுகாவலரோ பொறுப்பேற்கவேண்டும்.
  • மனநலத்தை எவ்வாறு பேணவேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 1992 முதல் மனநல நாள் ஏற்படுத்தப்பட்டது. பச்சை நிற ரிப்பன் மனநல விழிப்புணா்வுக்கான சா்வதேச அடையாளமாகும்.
  • உலக சுகாதாரநிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மனநலம் குறித்த கொள்கையை அறிவிப்பது உண்டு. ‘அனைவருக்கும் மனநலம் - நல்வாழ்வு வழங்குதல்’ இந்த ஆண்டின் கொள்கை ஆகும். எனவே மன நோயாளிகளையும் மனிதா்களாக மதிப்போம். மனநோயற்ற உலகை உருவாக்குவோம்.
  • இன்று (அக். 10) உலக மனநல நாள்.

நன்றி: தினமணி (10 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்