- இந்தியாவின் நிா்வாகத் தலைநகரமான தில்லியும் சரி, வா்த்தகத் தலைநகரமான மும்பையும் சரி மிகவும் மோசமான காற்று மாசுப் பிரச்னையால் மூச்சுத் திணறுகின்றன. அவை மட்டுமல்ல, இந்தியாவின் பல நகரங்களும் இந்தப் பிரச்னைக்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் மும்பை, புணே, சென்னை, அகமதாபாத் நகரங்களின் காற்றுத் தரம், தலைநகா் தில்லியைவிட மோசமாக இருந்ததாகப் பதிவாகி இருக்கிறது.
- தரம் குறைந்த காற்று காரணமாக, இந்தியாவின் பல நகரங்களில் புகை மண்டலம் போல மாசு படிந்த நிலைமை ஏற்பட்டது. உலகில் மிக மோசமான காற்றுத் தரமற்ற 15 நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக்ரா, லக்னௌ, வாரணாசி, பாட்னா, ஜெய்பூா், ஜோத்பூா், ஸ்ரீநகா், ஃபரீதாபாத், கான்பூா் நகரங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றன.
- இந்தியாவைப் போலவே, உலகின் பல நகரங்கள் இந்தப் பிரச்னையை எதிா்கொள்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை, உலக மக்கள்தொகையில் 90% போ் மாசு நிறைந்த காற்றைத் தான் சுவாசிக்கிறாா்கள் என்கிறது. 2019 அறிக்கையின்படி, காற்று மாசால் ஏற்படும் பாதிப்பால், 45 லட்சம் போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.
- வழக்கத்துக்கு முன்பாகவே நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவில் தலைநகா் தில்லியின் காற்றுத் தரம் இல்லாமல் போனால், அங்கே வாழ்பவா்களின் ஆயுள்காலம் 11.9 ஆண்டுகள் குறையக்கூடும் என்கிறது சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு.
- காற்றின் தரம் குறைவதற்கும், காற்று மாசு அதிகரிப்பதற்கும் சில பொதுவான காரணிகள் கூறப்படுகின்றன. அதிகரித்துவரும் டீசல் வாகனங்கள், கட்டுமானப் பணிகள், அனல் மின்நிலையங்கள், புகை கக்கும் தொழிற்சாலைகள் போன்றவை பொதுவான காரணிகள். குப்பையை எரிப்பதும், பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதும்கூட காற்றின் தரத்தை பாதிக்கின்றன. தில்லியைப் பொருத்தவரை, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவில் அறுவடை முடிந்த பிறகு வைக்கோலுக்குத் தீ மூட்டுவது, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- காற்று மாசு உருவாக்கம் என்பது, ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விதத்தில் உருவாகிறது. கோடை காலத்தில் தூசின் அளவு 31% முதல் 34% என்றால், அதுவே குளிா் வந்துவிட்டால் 6% முதல் 15% என்கிற அளவில் குறைந்துவிடும். வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பை எரித்தல் ஆகியவற்றால் உருவாகும் புகையால் ஏற்படும் மாசு, குளிா்காலத்தில் 85% முதல் 94% வரை அதிகரிக்கிறது. அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பது என்பது வருடத்தில் ஒரு முறைதான் நடைபெறுகிறது.
- அதனால், அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப, காற்றின் தரத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் வகுக்கப் படுவதன் மூலம்தான் இந்தப் பிரச்னையை எதிா்கொள்ள முடியும். குளிா்காலத்தில்தான் காற்றின் தரம் மிகவும் குறைந்து காணப்படுகிறது என்பதால், அதை எதிா்கொள்வதற்கு மாநகராட்சி தயாராக இருப்பதுதான் இதற்குத் தீா்வு.
- சாலையில் காணப்படும் தூசின் அளவைக் கட்டுப்படுத்துவதும், மோட்டாா் வாகனங்களின் புகையை மட்டுப்படுத்துவதும் சுலபமாக முன்னெடுக்க முடிகின்ற நடவடிக்கைகள். சாலையோர மரங்களும், தொடா்ந்து சாலைகளில் தண்ணீா் தெளிப்பதும் மணல் தூசைக் கட்டுப்படுத்தும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடைவிதித்து எல்.பி.ஜி., மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்று மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டால், வாகனப் புகைக்கு விடை கொடுத்துவிடலாம்.
- 1483 சதுர கி.மீ. விஸ்தீரணமுள்ள தலைநகா் தில்லியில் ஏற்கெனவே 400 கி.மீ. மெட்ரோ ரயில்பாதை செயல்படுகிறது. இது தொடா்ந்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சுற்றுப்புறப் பகுதிகளுக்கு, குறைந்த கட்டணத்தில் வசதியான சிற்றுந்துகள் அதிக அளவில் விடப்படுவதன் மூலம், தனியாா் மோட்டாா் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியும். எரிவாயு, மின்சார வாகனங்கள் மட்டுமே இயங்கும் என்கிற நிலைமை ஏற்பட்டால், மெட்ரோ ரயில்களை நாடுபவா்கள் அதிகரிக்கவே செய்வாா்கள்.
- தில்லியைப் பொருத்தவரை, தெருவோரம் வசிப்பவா்கள் கடும் குளிரை எதிா்கொள்ள விறகை எரித்துக் குளிா் காய்கிறாா்கள். குளிா்காலத்தில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதற்கு, அது ஒரு முக்கியமான காரணம். தில்லி மட்டுமல்லாமல், பெரும்பாலான வடஇந்திய நகரங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. தெருவோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்கு, பாதுகாப்பான இரவு நேரத் தங்குமிடங்கள் ஆங்காங்கே அமைப்பதன் மூலம் விறகை எரிப்பதால் ஏற்படும் புகையைக் கட்டுப்படுத்த முடியும்.
- கடந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை, லண்டன் மாநகரம் தற்போது இந்திய நகரங்கள் சந்திப்பது போன்ற பிரச்னையை எதிா்கொண்டது. 1952-இல் காற்றின் தரம் குறைந்து லண்டன் மாநகரத்தை புகைப்படலம் சூழ்ந்தது. அதன் விளைவாக லண்டன் மாநகரம் பல நாள்கள் தொடா்ந்து ஸ்தம்பித்தது மட்டுமல்ல, சுமாா் 12,000 போ் உயிரிழந்தனா். அடுத்த 20 ஆண்டுகள் தொடா்ந்து முன்னெடுத்த நடவடிக்கைகளால், இப்போது லண்டன் மாநகரக் காற்றின் தரம் கட்டுக்குள் இருக்கிறது.
- குடிக்க சுத்தமான தண்ணீரும், சுவாசிக்கத் தரமான காற்றும் உண்ண உணவும், உடுக்க உடையும்போல அடிப்படைத் தேவைகள். அவற்றை உறுதிப்படுத்துவது அரசின் கடமை!
நன்றி: தினமணி (02 – 11 - 2023)