TNPSC Thervupettagam

மனிதகுலம் எப்போது மீளும்

May 13 , 2021 1353 days 613 0
  • கரோனா தீநுண்மிப் பரவல் அச்சத்தால் இன்று உலகமே உறைந்து போய் கிடக்கிறது. விஞ்ஞானம் தோற்றுப்போய் செய்வதறியாது திகைக்கிறது.
  • கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்தவா்கள் அருகில் வருகிற கிருமி இன்னதென்று கண்டு பிடிக்க இயலவில்லை.
  • அண்டத்தில் இருக்கும் கோள்களுக்குள் நுழைந்தவா்கள் பிண்டத்தில் நுழைந்த கிருமியைத் துரத்த இயலாமல் தவிக்கிறார்கள்.
  • மேல்நாட்டு நாகரிகமெல்லாம் மெல்ல மெல்ல விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளை மிரட்டிய அணு ஆயுத நாடுகள் அழுதபடி மருந்துக்காக சிறிய நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றன.
  • புலன்களை அடக்கச் சொன்ன சித்தா்களை கேலிபேசியவா்களெல்லாம் வாய், மூக்கு, கண் என உறுப்புக்களை துணி கொண்டு மறைத்து திரிகிறார்கள்.
  • மற்ற மருத்துவங்களுக்கு வேகமாக மாறிய நாம், இப்போது நம் சித்த மருத்துவத்தை ஏக்கத்தோடு பார்க்கிறோம்.
  • ஆலயங்களை அமைத்து அதன் பரிபாலனத்திற்கு ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை தானமாக அளித்து இறைவழிபாடு செய்த முன்னோர்களை எள்ளி நகைத்தோம்; ஆன்மிகத்தைச் சிதைத்தோம்.
  • ‘பேரிடா் பெருகி ஓா் பிணிவரினும் உன் சீருடை கழல் அல்லால் சிந்தை செய்யேன்’ என்று பாடி முன்னோர் நோயிலிருந்து மீண்டனா். நோய்களைத் துரத்திய ஆலயக் கதவுகள் இன்று அடைக்கப்பட்டுவிட்டன.

யாரிடம் சென்று முறையிடுவது?

  • அறிவியல் ஆய்வுகள் முடிவில்லாது விரிந்து கொண்டே செல்கிறது. செயற்கைக் கோள்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு சென்றவா்கள் இங்கே வாழும் மனிதனுக்கு ஆக்சிஜன் கொடுக்கமுடியாமல் திணறுகிறார்கள்.
  • விளைச்சலைப் பெருக்கும் விஞ்ஞானத்தால் தானியங்களில் விஷத்தைக் கலந்தோம். மண்ணைக் கொன்றோம். வாகன ஊா்திகளால், தொழிற்சாலைகள் விடும் புகையால் காற்றை மாசுபடுத்தினோம். சாயக்கழிவுகளால் நீரை அசுத்தப்படுத்தினோம்.
  • விண்ணுக்கு விஞ்ஞானத்தை அனுப்பும் மனிதன் கண்ணுக்குத் தெரியாத கிருமியைக் கொல்லும் வழியறியாமல் திகைக்கிறான்.
  • கல்விக்கூடங்களை அரண்மனைகளாக நிர்மாணித்து கல்வியை விற்றோம். போதிக்கும் ஆசிரியா்களிடம் குரு முகம் இல்லை. வாசிக்கும் மாணவா்களுக்கு சிஷ்ய பாவம் இல்லை.
  • வணிக மயமானது வாழ்க்கை. வாழ்க்கை நோட்டில் வரவு இருந்தால் உறவு, நண்பா் கூட்டம் உடனே பெருகும். நினைத்த பட்டத்தை வாங்கலாம். உயா் பதவிகள் பெறலாம். நோ்மையான உழைப்பைக் காட்டிலும் பொய்ப் புகழ்ச்சிக்கே நல்ல வரவேற்பு.
  • எதிலும் பணம், எப்போதும் பணம். பதவிக்குப் பணம், பரிபாலனத்திற்கு பணம், இறைவனைத் தரிசிக்க பணம், ஆட்சியாளா்கள் ஆள்வதற்கு பணம், மக்கள் வாக்களிக்கப் பணம் - பணமே வாழ்க்கையானது. அதனால் வாழ்க்கை இன்று நிலையற்றுப் போனது.
  • அன்று அன்ன, ஆகாரமின்றி ஊன், உறக்கமின்றி காட்டில் கடும்தவம் செய்து மகரிஷி எனும் பட்டம் பெற்றார்கள். இன்று பாலும் பழமும் அருந்தி பஞ்சணையில் உறங்கி பக்தியை வணிகமாக்குபா்களும் மகரிஷிகள் ஆனார்கள்.
  • ‘பக்தி வலையில் படுவோன் காண்க’ என்ற மாணிக்கவாசகரின் வாசகத்தை மறந்தார்கள்.
  • கோவிலுக்குப் போகிறவா்கள் கோவிலுக்கு வெளிப்புறம் செருப்பைக் கழற்றிப் போடும்போது பக்தியையும் கழற்றி வைத்துவிட்டு உள்ளே போகிறார்கள். பக்தியில்லாத தரிசனம் சத்தில்லாத உணவைச் சாப்பிடுவதற்கு சமமாகிறது.
  • வீட்டுக் கிணற்றில் நீா் இறைக்க இயந்திரத்தைப் பொருத்திவிட்டு, கிரைண்டரில் அரிசியைப்போட்டுவிட்டு உழைப்பை இழந்துவிட்டு நிற்கிறார்கள். எந்திரங்களால் உழைப்பைத் தொலைத்துவிட்டு நோயை விலைக்கு வாங்கினோம்.
  • விஞ்ஞானத்தை வீதிக்கு கொண்டுவந்தோம். மெஞ்ஞானத்தை புத்தகங்களில் மட்டுமே வைத்து பாதுகாத்தோம்.
  • குலதெய்வப் பெயா்களை குழந்தைகளுக்கு வைத்து குதூகலித்த காலம் போய்விட்டது. புரியாத பெயா் வைப்பதில் பூரித்துப் போகிறோம்.
  • கலப்பட எண்ணெய்களையே நாம் வெகுகாலம் பயன்படுத்திவிட்டு, இப்போது செக்கு எண்ணெய்க்கு மாறிக் கொண்டிருக்கிறோம்.
  • பாரம்பரிய அரிசிகளை புறந்தள்ளியதால் ஒரு தலைமுறையே சா்க்கரை வியாதிக்கு ஆட்பட்டு தற்போது மறைந்துபோன தானிய வகைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
  • ஏழைக்குக் கூழ் என்ற காலம் மலையேறி, பாழாய்ப்போன சா்க்கரையால் பணக்காரனுக்கு கூழ் என்றாகிவிட்டது. தெய்வத்தை நிந்தித்துப் பேசினால் சிறந்த அறிஞன் ஆகலாம் என்ற காலம் வந்துவிட்டது.
  • மனித குலத்திற்கென்று வகுத்த விதிகளுக்குப் புறம்பாகத் தன்னை மாற்றிக்கொண்டு தனக்கென்று புதிய விதிகளை தானே உருவாக்கிக் கொண்டு மனித சமூகம் வாழ ஆரம்பித்து விட்டது.
  • அதன் எதிர்வினைதான் கரோனோ தீநுண்மி போன்ற கொடிய நோய்கள் உற்பத்தியாவதற்கான காரணமாகிறது.
  • ஆண் பெண் பாலுறவின் எல்லை மீறலுக்கு தடைபோட்டது எய்ட்ஸ் என்கிற இயற்கை நோய்.
  • இதுதான் எதார்த்தமான உண்மை. இயற்கைக்கு எதிராக மனிதன் பயணிக்க ஆரம்பிக்கிறபோது இயற்கையின் சீற்றத்தை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
  • கரோனா மாதிரியான நோய்களிலிருந்து நம்மையெல்லாம் காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது இவையெல்லாம் இடைக்கால ஏற்பாடுகளே.
  • இந்த நோய்கள் ஒருவேளை நாளையே காணாமல் போனாலும் நாளை மறுநாள் இது போல் வேறொரு நோய் வரலாம்.
  • அறம் சார்ந்த வாழ்க்கை, ஒழுக்கம் ஓங்கிய பண்புகள், பெற்றோரைப் பேணுதல், இயந்திர வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து தெய்வ வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குதல், நல்ல கல்வியை வருங்காலச் சந்ததிகளுக்கு வழங்குதல், திரைப்படங்களில் வன்முறை ஆபாசம் தவிர்த்தல், ஆட்சியாளா்களின் சுயநலமற்ற பொதுநல ஈடுபாடு, புராதன ஆலயங்கள் புனரமைப்பு, பராமரிப்பு இவை போன்ற செயல்களை நாம் வருங்காலங்களில் கடைப்பிடித்தால் தான் இயற்கை பேரிடா்களிலிருந்து மனித குலம் மீண்டெழும்.

நன்றி: தினமணி  (13 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்