TNPSC Thervupettagam

மனிதகுலம் நிலைக்க...சுற்றுச்சூழல் காக்க

June 4 , 2019 1854 days 960 0
  • ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இயற்கையை உண்மையாக நாம் நேசித்தால்,  சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இருப்பது மிக அவசியம். பூமியையும், அது சார்ந்த இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு  சுற்றுச்சூழல் பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொள்ளச் செய்வது, உலக சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பது, சுற்றுச்சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இந்தத் தினத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இயற்கை வளங்கள்
  • பூமி, நீர்நிலைகள், காடுகள்,  வன ஜீவராசிகள், வளி மண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதகுலத்துக்காக  வடிவமைக்கப்பட்ட இயற்கைப் பொக்கிஷங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ்  உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்தச் சுற்றுச்சூழலின் சமநிலையிலேயே அடங்கியுள்ளதை மறந்துவிடக் கூடாது. இந்தச் சமநிலையில்  ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும்  அமைந்து விடுகிறது.
  • நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல்  மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், தொழிற்சாலை புகை முதலானவை வளி மண்டலத்தை மாசுபடுத்தி  உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.
  • வாகனப் புகை, குளிர்சாதனக் கருவிகள் பயன்பாடு உள்ளிட்டவை காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்து ஓசோன் படலம் வலுவிழந்து வருகிறது; விளைவு, சூரியனின் நேரடிக் கதிர்வீச்சின் தாக்கத்தால்,  பூமி அதிக வெப்பம் அடைந்து, சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ்  அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை  உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.  ஒரு புறத்தில் வறட்சி, மறுபுறத்தில் வெள்ளக் கொடுமையும் சூறாவளியும் என்று இஷ்டம்போல் இயற்கை செயல்படத் தொடங்கி விட்டது. மனிதர்களுக்கும், மரங்களுக்கும் இடையிலான உறவு மிகவும்  முக்கியமானது.
  • மரங்கள் இல்லையெனில் உயிரினங்கள் இருக்காது. மரங்கள் உள்ளிட்ட காடுகளை அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனமாக்குவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நாம் உணராமல்  போனது ஏன்? முன்பெல்லாம் காற்று மாசு என்பது மிக மிகக் குறைவு. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில்  தொழிற்சாலைகள்- வாகனங்கள் பெருக்கம், காடுகள்-மரங்கள் அழிப்பு ஆகியவை காரணமாக காற்றில் மாசு கலந்து  சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவது நிதர்சனம்.
  • ஐ.நா. சபையின் கணக்கெடுப்பின்படி, இந்தப் பூமியில் 3 லட்சத்து 4,000 கோடி மரங்கள் உள்ளன; ஆனால்,  மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46% மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.  ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து 1,530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன. அதே சமயம்  ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன.
  • ஆக, ஓர்ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1,030 கோடி மரங்கள். ஒவ்வொரு ஆண்டும் நாம் எவ்வளவு  மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை இந்தக் கணக்கு உணர்த்தும். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால்  இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக 405 மரங்கள் உள்ளன.
  • இந்தக் கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம். இந்தியாவில் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள்  மட்டும்தான் உள்ளன. இதன் விளைவாக காற்று, நிலம், நீர், காடு முதலான  இயற்கை வளங்கள் அதிவேகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. உலகில் சுத்தமான காற்றை 10-இல் 9 பேர் சுவாசிக்க முடிவதில்லை என ஆய்வறிக்கையொன்று கூறுகிறது. உலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 70  லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். நெகிழிக் குப்பை அணுகுண்டைவிட ஆபத்தானவை என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக்
  • 10  நிமிஷங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பை பல நூறு ஆண்டுகள்  அழியாமல் மண் வளத்தைக் கெடுக்கிறது. இந்தப் பைகள் குளம், ஏரி, ஆறு, கடல் மற்றும் பூமியில் புதைந்து  சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன; மேலும், கடல் வாழ் உயிரினங்கள், வன விலங்குகள், கால்நடைகள்,  பறவைகள் உள்ளிட்டவை நெகழியைச் சாப்பிட்டு ஒவ்வாமை காரணமாக உயிரிழக்கின்றன.
  • மேலும்,  கரையோரங்களில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக்  குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி மனிதர்களுக்கு பல்வேறு  நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நெகிழிப் பைகளால் ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என அனைத்தும் கடுமையாக மாசடைகின்றன.
  • நெகிழிக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை எரிப்பதால் ஆபத்தான  நச்சு வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கால்நடைகள் வளர்த்து அதன் மூலம்  கிடைக்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். திடக்கழிவு மற்றும் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை தமிழக அரசு கடுமையாகச் செயல்படுத்த வேண்டும். நெகிழியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
  • பேட்டரி வாகனங்கள் தயாரிக்க  உலக நாடுகள் அனைத்தும் முன் வரவேண்டும். ஓசோன் படலத்துக்குத் தீங்கை உருவாக்காத வகையில் குளிர்சாதனப் பெட்டி,  ஏ.சி. இயந்திரம் தயாரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் எந்தவிதச் சமரசமும் கூடாது.

நன்றி: தினமணி (04-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்