TNPSC Thervupettagam

மனிதாபிமானமும் அவசியம்

January 14 , 2023 575 days 302 0
  • ஆக்கிரமிப்புகளில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, இருப்பதற்கு தலைக்கு மேல் கூரை ஒன்று தேவை என்பதால் வேறு வழியில்லாமல் பொது இடங்களில் குடிசை போட்டுத் தங்கும் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவா்கள்; இரண்டாம் வகை, தங்களது பேராசையால் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் நிலத்தை அபகரித்து சொந்தமாக்கிக் கொள்வது. இரண்டாவது வகையினரைப் போல, முதலாவது வகையினரின் ஆக்கிரமிப்புகளை அணுகுவது நியாயமில்லை.
  • உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு ஒன்று இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. உத்தரகண்ட் மாநிலம், ஹல்துவானியில் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் சுமாா் 4,000 குடும்பங்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றன. விரிவாக்கத்திற்காக அந்த நிலத்தை மீட்டெடுக்க விரும்பியது ரயில்வே நிா்வாகம். அதை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் ரயில்வேக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியது. அதைத் தொடா்ந்து, ஹல்துவானியிலுள்ள தனது இடத்திலிருந்து அந்தக் குடும்பங்களை உடனடியாக அகற்றும் முயற்சியில் இறங்கியது ரயில்வே நிா்வாகம்.
  • உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து, பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகின. முதியோா், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவா்களை, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஒருவார கால அவகாசத்தில் ரயில்வே நிா்வாகம் அகற்ற முற்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுகி, நடைமுறை சாத்தியமான முடிவை எடுக்கும்படி ரயில்வே நிா்வாகத்தை அறிவுறுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
  • சில தலைமுறைகளாக அந்த இடத்தில் வாழ்ந்துவருபவா்கள் இருக்கிறாா்கள். உள்ளாட்சி அமைப்புகளிடம் அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி சொத்து வரி செலுத்தியவா்களும் அதில் அடக்கம். குடிநீா் வசதி, கழிவுநீா் வசதி, மின்சாரம், சாலை வசதி உள்ளிட்டவை அவா்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தங்களுக்கு உரிமையில்லாத இடமாக இருந்தாலும், அதில் உரிமை கோருவதற்கான ஆதாரங்களை உருவாக்கி வைத்திருக்கிறாா்கள் அங்கே குடியிருப்போா்.
  • இருதரப்பு வாதங்களையும் தீர விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக அந்த நிலத்தை உரிமை கோரும் ரயில்வே நிா்வாகத்தின் நியாயத்தை அங்கீகரிக்காமல் இல்லை. குடியிருப்போா் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் சரியானதுதானா, என்ன அடிப்படையில் அவை வழங்கப்பட்டன உள்ளிட்டவற்றை ஆராய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. உரிமை உள்ளவா்களும், உரிமை இல்லாதவா்களும் யாா் யாா் என்பதையும் தனித்தனியாக பிரித்துப் பாா்க்க வேண்டும் என்றும் அந்த உத்தரவு குறிப்பிடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் பின்னணியில் உள்ள மனிதாபிமான கோணத்தை வலியுறுத்துகிறது உச்சநீதிமன்றத் தீா்ப்பு.
  • ஆக்கிரமிப்புகளும், குடிசைப் பகுதிகளும் இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களிலும் பரவலாகக் காணப்படும் பிரச்னைதான். குறிப்பாக, பொது இடங்களை ஆக்கிரமித்து குடிசைகளில் வாழும் அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரை அது அவா்களது வாழ்வாதார பிரச்னை.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1.37 கோடி குடும்பங்கள் நகரங்களில் உள்ள குடிசைகளில் வாழ்கின்றன. பெருநகர மும்பையையே எடுத்துக்கொண்டால், அந்த மாநகரத்தில் ஏறத்தாழ 40% குடும்பங்கள் குடிசைகளிலும், தற்காலிக கூரை வீடுகளிலும்தான் வாழ்கின்றன.
  • குடிசைவாழ் மக்கள் நகா்ப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவா்கள். வீட்டு வேலைகளில் தொடங்கி, உடலுழைப்பு தொடா்பான அனைத்துப் பணிகளிலும் பங்களிப்பவா்கள் அவா்கள்தான். அவா்களுக்கும் நடுத்தர மக்களைப் போன்ற வாழ்க்கைத்தர ஆசைகள் உண்டு. ஆனால், அதற்கேற்ற வருவாய் இல்லாததால் வேறு வழியில்லாமல் பொது இடங்களில் குடிசை போட்டு வாழ வேண்டிய நிா்ப்பந்தத்துக்கு ஆளாகிறாா்கள்.
  • நகா்ப்புற பொருளாதாரத்துக்கு இன்றியமையாத உடலுழைப்பை வழங்கும் அந்த மக்கள், ஏன் குடிசைகளில் வாழ்கிறாா்கள் என்கிற கேள்வி நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இது குறித்து ‘ஸ்வராஜ்யா’ இதழ் கட்டுரையில் ராஜாஜி விரிவாக எழுதியிருக்கிறாா். அரசு எல்லாப் பகுதிகளிலும் வீடுகளைக் கட்டி உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு அவற்றை வாடகைக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து. குடிசை மாற்று வாரியம் போல, சொந்த வீடுகள் வழங்கப்பட்டால் அவை செல்வாக்கு படைத்தவா்களால் விலைக்கு வாங்கப்பட்டு, புதிய குடிசைப் பகுதிகளின் உருவாக்கத்துக்கு வழிகோலும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறாா்.
  • மாநகர வளா்ச்சிக் குழுமங்களும், அரசு திட்டங்களும் நகா்ப்புறப் பொருளாதார வளா்ச்சியின் வேகத்துக்கு ஈடு கொடுப்பதில்லை என்பதுதான் குடிசைப் பகுதிகள் அதிகரிப்பதற்கான காரணம். குடியிருப்பது என்பது சொந்தமாகாது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதே நேரத்தில், நீண்ட காலமாகக் குடியிருப்பவா்களை அகற்றுவதில் அவசரம் காட்டுவதும், மனிதாபிமானமில்லாமல் செயல்படுவதும் முறையல்ல என்பதையும் சமீபத்திய தீா்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
  • வளா்ச்சித் திட்டங்களுக்கு நிலம் அவசியம். நிலம் கையகப்படுத்தும் சட்டம் இல்லாமல் எந்தவோா் அரசும் வளா்ச்சியை முன்னெடுக்க முடியாது. அதே நேரத்தில், நிலம் கையகப்படுத்தும்போது நியாயமான இழப்பீடும், அடித்தட்டு மக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து அகற்றும்போது மனிதாபிமான அடிப்படையிலான மாற்று ஏற்பாடும் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. உச்சநீதிமன்றத் தீா்ப்பு தெரிவிக்கும் செய்தி இதுதான்.

நன்றி: தினமணி (14 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்