TNPSC Thervupettagam

மனித உரிமைப் போராளி

September 30 , 2019 1929 days 1027 0
  • விடுதலைப் போராட்ட வீரர் பி.சீனிவாச ராவின் 58-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்.29)  கடைப்பிடிக்கப்பட்டது.
  • ஒன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னடப் பகுதியைச் சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிஎஸ்ஆர் என்று அழைக்கப்பட்ட பி.சீனிவாச ராவ் பிறந்தார்.
பி.சீனிவாச ராவ்
  • 1930-ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவின் பின்னணியில் மக்களை தேசிய இயக்கத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே.ஐயங்கார், சி.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர். அவர்களுடன் இணைந்து பி.சீனிவாச ராவும் பணியாற்றினார்.
  • 1952 ஏப்ரல் 30 அன்று தலைமறைவாக இருந்த பி.சீனிவாச ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.
  • நிலப் பிரபுக்களின் நெருக்கடியிலும், பண்ணையார்களின் தாக்குதலிலும் செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில்தான் பி.சீனிவாச ராவின் நிழல் அவர்கள் மீது விழுந்தது.
  • உழைப்பாளி மக்களாகிய அடித்தட்டு மக்கள் தங்களின் வேதனைகளை பி.சீனிவாச ராவிடம் கொட்டித் தீர்த்தனர். அதன் பிறகுதான் பி.சீனிவாச ராவ் கிராமம் கிராமாகச் சென்று அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தைத் தொடங்கினார்.
  • 1960-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய நில உச்சவரம்பு திருத்த சட்டமசோதா நிலப் பிரபுக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.
  • இதனை எதிர்த்து மசோதாவில் திருத்தம் கொண்டுவரக் கோரி பி.சீனிவாச ராவ் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழகம் முழுவதும் மக்களிடம் கோரிக்கையைக் கொண்டுசெல்ல மாபெரும் பாத யாத்திரையை மேற்கொண்டது.
இயக்கம்
  • இந்த இயக்கம்  வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதைய மாநில தலைவராக இருந்த பி.சீனிவாச ராவ் தலைமையில் கோவையிலிருந்து ஓர் அணியும் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த மணலி கந்தசாமி தலைமையில் மதுரையிலிருந்து ஓர் அணியுமாக இரண்டு பகுதிகளிலிருந்து சென்னை நோக்கி அந்த நடைப்பயண பிரசார இயக்கம் புறப்பட்டது.
  • இரண்டு குழுக்களும் 965 கி.மீ. தொலைவு பயணம் மேற்கொண்டு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் பிரசாரம் செய்தன. 
போராட்டம்
  • நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15-ஆம் நாளில் இரு குழுக்களும் தங்களின் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு செப்-21-ல் தலைநகர் சென்னை வந்தடைந்தன.
  • நிறைவாக நடைபெற்ற மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரெழுச்சியோடும் மிகுந்த உற்சாகத்தோடும் பங்கெடுத்தனர். அந்தப் பொதுக்கூட்டத்தில் மறியல் போராட்டத்துக்கான அறைகூவல் விடப்பட்டது.
  • செப்.15 முதல் 28 வரை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 16,000 பேர் கைது செய்யப்பட்டனர்; தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,000  பேர் கைதானார்கள். 
  • திருச்சி, வேலூர் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. சிறைகளில் தண்ணீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. சுதந்திர இந்தியாவில் உரிமைக்காகப் போராடிய போராட்ட வீரர்களை, குற்றவாளிகளைப்போல் சிறைக்காவலர்கள் அடக்கி ஒடுக்கினர்.
  • இதை எதிர்த்து சிறைச் சாலையிலேயே கிளர்ச்சிகள் வெடித்தன. பிறகு தமிழக அரசு பணிந்தது. செப்-28-ல் மூன்று ஆண்டுகளுக்கு சாகுபடி நிலத்திலிருந்து வெளியேறாமல் இருக்க பாதுகாப்பு கொடுத்தது. இது விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
லெனின் கூறிய வார்த்தைகள்
  • தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டு மக்களைத் திரட்ட ஓய்வு உறக்கமின்றி உணவுக்கு உரிய நேரம்கூட ஒதுக்காமல் உழைத்திட்ட பி.சீனிவாச ராவை 1961-ம் ஆண்டு மரணம் சாய்த்தது.
  • "மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்காகப் போராடு' என்ற மாமேதை லெனின் கூறிய வார்த்தைகளின் பொருள் ஆழத்தை உணர்ந்து மொழி, இனம், மதம், ஜாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கை உயர்வுக்கு அவர் போராடினார்.
  • அவர் இறந்த பின்பு அவர் எந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடி விடுதலை பெற்றுத் தந்தாரோ அந்த மக்கள் அடர்த்தியாக வாழும் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள முள்ளியாற்றங்கரையில் அவர் விருப்பப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் இறுதி மரியாதையின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி  கதறி அழுதனர்.
  • எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, பார்வதி கிருஷ்ணன், கே.ரமணி, எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, பி.சீனிவாச ராவுக்கு புகழாரம் சூட்டினர். 
இடது சாரி இயக்கம்
  • இடதுசாரி இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக திருத்துறைப்பூண்டியில் பி. சீனிவாச ராவ் நினைவு மணிமண்டபத்தை கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது; அவருக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில்  நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
  • இந்திய விடுதலைக்கான ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தையும் கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார சமூகப் பிரச்னைகளுக்கான போராட்டத்தையும் இணைத்து நடத்தவேண்டிய அவசியம் குறித்து சுதந்திரப் போராட்ட வீரர்  சுர்ஜித் பலமுறை பேசியுள்ளார். அதனடிப்படையில் இதற்கு அடித்தளமிட்டவர்  பி.சீனிவாச ராவ் என்றால் மிகையாகாது.

நன்றி: தினமணி (30-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்