TNPSC Thervupettagam

மனுஸ்மிருதி எதிர்ப்பு வரலாறும் இன்றைய தேவையும்

September 20 , 2023 480 days 441 0
  • நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவனின் சமீபத்திய அரசியல் முன்னெடுப்புகளில் நான் முக்கியமாகக் கருதுவது சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தைத்தான். அது வெறும் அரசியல் முன்னெடுப்பு அல்ல, அது ஒரு தீவிரமான சமூகப் போராட்டமும் கூட.
  • சனாதன எதிர்ப்பின் கூர்முனை மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம், ஏனெனில் மனுஸ்மிருதி சனாதனத்தின் அடிப்படை. ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு பெருநிலத்தின் பண்பாட்டு தளத்தில் ஊடாடும் நூல் மனுஸ்மிருதி; இன்றும் அந்த ஊடாட்டத்தின் கசையடிகளால் உண்டாகும் காயங்களைச் சுமப்பவர்கள் தலித்துகளே. மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்தை ஒரு சாதி சார்ந்த செயல்பாடாகக் குறுக்குவதும் நியாயமல்ல; ஏனென்றால் அப்போராட்டதின் குறிக்கோள் எல்லோருக்குமான சமத்துவச் சமூகம்.
  • திருமாவளவன் மனுஸ்மிருதியினை எதிர்த்து போராட்டம் தொடங்கியபோது பல்முனை தாக்குதல்களைச் சந்தித்தார். முற்போக்காளர்கள்கூட மனுஸ்மிருதி  வழக்கொழிந்துபோன நூல் அதனை எதிர்ப்பது அரசியல் விவேகமாகாது மாறாக சனாதன சக்திகளுக்கு இப்போராட்டங்கள் வலுசேர்க்கும் என்றார்கள். இக்கட்டுரையின் வாயிலாக சுருக்கமாக மனுஸ்மிருதியின் வரலாற்றையும் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் வாசகருக்கு சுட்டிக் காட்டி திருமாவளவன் போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்க முற்பட்டிருக்கிறேன். 

மனுஸ்மிருதியின் நோக்கமும் தோற்றமும் வளர்ச்சியும்

  • பேட்ரிக் ஒலிவெல்லின் (Patrick Olivelle) ‘த லா ஆஃப் மனு’ (The Law Code of Manu) மனுஸ்மிருதியை ஆங்கிலத்தில் அளிக்கும் முக்கியமான நூல். நூலாசிரியர் மனுஸ்மிருதியின் வரலாற்றைச் சுருக்கமாக வாசகனுக்கு அறிமுகம் செய்கிறார்.
  • வரலாற்றாய்வாளர்கள் மனுஸ்மிருதி பொது யுகத்துக்கு முன்பான கடைசி நூற்றாண்டுக்கும் பொது யுகத்துக்கின் பின்பான முதல் நூற்றாண்டுக்கும் இடையே எழுதப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று சான்றுகளின் அடிப்படையில் யூகிக்கின்றனர். “மூன்றாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டின்போதே மனுஸ்மிருதி செல்வாக்குப் பெற்றுவிட்டது என மற்ற நூல்கள் மனுஸ்மிருதியைக் குறிப்பதலிருந்து தெரிகிறது” என்கிறார் ஒலிவெல். மேலும், ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கருதப்பட்ட பிருஹஸ்பதியின் சாஸ்திரம் மனு ஸ்மிருதிக்கு மாறாக எந்தக் கூற்றையும் முன்வைக்கும் சாஸ்திரமும் ஏற்புடையதல்ல என்று சொல்வதன் மூலம் மனுவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
  • மனுஸ்மிருதியின் தாக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தளராமலிருந்தது. வேறெந்த தர்ம சாஸ்திரத்தைவிடவும் மனுஸ்மிருதி மீதுதான், கிட்டத்தட்ட ஒன்பது உரைகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம். ஒரு சில அம்சங்களில் வேறு சில சாஸ்திரங்கள் முக்கியத்துவம் பெற்றாலும் இடைக்கால வரலாறு நெடுக சட்ட சாஸ்திரங்கள் மீண்டும் மீண்டும் மனுஸ்மிருதியையே சுட்டிக்காட்டுகின்றன.
  • பிராமணர்களுக்கும் அரசர்களுக்குமான கடமைகளையும் அந்த இரு வகுப்பினருக்குமான உறவுகளைப் பற்றிய நியமங்களே மனுஸ்மிருதியின் பெரும்பான்மையை ஆக்கிரமிக்கிறது. வைஸ்யர்களுக்கு எட்டு சுலோகங்களும் சூத்திரர்களுக்கு இரண்டு சுலோகங்களும் மட்டுமே உள்ளன.
  • இந்தச் சமமின்மையைப் பற்றி ஓர் யூகத்தை ஒலிவெல் சொல்கிறார். “மனுஸ்மிருதி உருவான காலத்தில், பொது யுகம் முதல் நூற்றாண்டை ஒட்டி, மௌரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பிராமணர்களுக்கும் ராஜ வம்சத்துக்கும் உறவுகள் உரசல் நிறைந்ததாக இருந்தது; அதனைச் சமன்படுத்தவில்லை என்றால், ஆதிக்கச் சாதியினருக்கு ஆபத்து ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்துவரும் என்று யூகித்து பிராமண-ஷத்திரிய உறவுக்கே மனு முக்கியத்துவம் கொடுத்தார் என முடிவுசெய்யலாம்” என்கிறார் ஒலிவெல்.  “சாஸ்திரங்கள் எந்தளவு சமூகத்தில் பின்பற்றப்பட்டன என்கிற புள்ளியில் பல விவாதங்கள் உள்நோக்கோடு நடைபெறுகின்றன. சாஸ்திரங்களால் சமூகத்தில் நிலவிய பிளவுகளும் அப்பிளவுகளின் ஆதிக்க அமைப்பையும் குறைத்துப் பேசுவது இன்று சனாதன சக்திகள் கையாளும் தந்திரம். தர்ம சாஸ்திரங்கள் அன்றாட வழக்கங்களின் பதிவுகள் மட்டுமல்ல; அவை நீதிப் பரிபாலனத்தின் முக்கியமான அங்கம்.
  • எல்லோரும் மனு சாஸ்திரத்தைப் படித்தறிந்தே அவ்வாறு வாழ்கின்றனர் என்று சொல்ல முடியாது எனினும் சாஸ்திர ஞானம் இன்றி அன்றாட வாழ்வில் சில வழக்கங்களை மக்கள் கைக்கொள்வதுண்டு என்று வாத்ஸ்யாயனாரை மேற்கோள் காட்டி சாஸ்திரங்களின் செல்வாக்கை ஒலிவெல் நிறுவுகிறார்.
  • தீண்டாமையைக் கை கொள்ளும் படிப்பறியாத கிராமத்து ஏழையும் மனு சாஸ்திரத்தின் நிழல் படிந்தவரே. "மனுஸ்மிருதி போன்ற சாஸ்திரம் நேரடியாக அன்றாட வாழ்வில் நேரடியாக ஈடுபடாமல் அதனைப் பயின்று நீதியமைப்புகளில் அமர்ந்த பிராமணர்கள் வாயிலாக இடம்பெறும்” என்கிறார் ஒலிவெல்.
  • மேலே விவரித்த வரலாறு ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் சமீப காலமாக இந்துத்துவ வரலாற்று திரிபாளர்கள் சாதியம் இறுகி வரையறுக்கப்பட்டதே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கணக்கெடுப்பு, சட்டமாக்கல் மூலமாக மட்டுமே என்று நிறுவுகிறார்கள். அதில் ஓரளவே உண்மை இருக்கிறது; ஆனால் ஒட்டுமொத்தமாக அது மட்டுமே காரணமன்று. பற்பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் ஊடும் பாவுமாக மனுஸ்மிருதி இருந்திருக்கிறது. அந்த அடித்தளத்தின் மீதே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் சட்ட அமைப்பைக் கட்டினார்கள். அத்தகைய சட்ட அமைப்புக்கான அதிகபட்ச விலையைக் கொடுத்ததும் தலித்துகளே. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ஸ்மிருதி சட்டமான காலமும் சமூக உரசல்களும்

  • இந்தியாவின் முதல் கவர்னர் ஜென்ரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் தங்கள் ஆட்சி நடத்துவதற்குத் தேவையான சட்ட அமைப்புக்கு இஸ்லாமியருக்கு அவர்களின் மதம் சார்ந்த சட்டங்களும் இந்துக்களுக்கு அவர்கள் மரபிலான சட்டங்களும் நீதிமன்ற சட்டங்களாகும் என்று முடிவெடுத்தார். இந்துக்களின் சட்டத்துக்கு 11 பண்டிதர்களின் உதவியோடு தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையிலான சட்ட வரைவு 1775இல் எழுதி முடிக்கப்பட்டது, இதன் ஆங்கில வடிவம் (The Code of Gentoo Laws) 1776இல் வெளிவந்தது. இச்சட்டங்கள் அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்த வங்காளத்தில் அமலானது.
  • தர்ம சாஸ்திரங்கள் அடிப்படையிலான சட்டம் சொத்துரிமையைப் பெரும்பாலும் சாஸ்திர ரீதியில் மூத்த ஆண் மகனுக்கு உரியதாக்கின, அதேபோல் பெண்களின், விதவைகளின் உரிமைகளும் அதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன. இவ்வாறு வரையறுக்கும்போது சாஸ்திரங்கள் அளித்த சில நெகிழ்வுகளும் நிராகரிக்கப்பட்டன.
  • நேரடிச் சட்டத்தில் மனுஸ்மிருதி செலுத்திய தாக்கத்தைவிட இந்திய சாஸ்திரங்களுக்குத் தொடர்ச்சியாக காலனி ஆட்சி கொடுத்த முக்கியத்துவம் அந்த ஆட்சியில் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. சில உதாரணங்களைப் பார்ப்போம். 1841இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னோடியான ‘மெட்றாஸ் ஹை ஸ்கூல்’ (Madras HIgh School) தொடங்கப்பட்டபோது மாணவர்கள் சேர்க்கை எல்லோருக்கும் பொது என்றாலும், “எந்த வகுப்பினரின் மத உணர்வுகளும் பாதிக்கப்படாத வகையில்” சேர்க்கை நடைபெறும் என்று சொல்லப்பட்டது.
  • பள்ளியின் கட்டணம் நான்கு ரூபாய் (1841இல்) என்று நிர்ணயிக்கப்பட்டதே “கீழ் சாதியினர் அதிகமாக சேர்வதை” தடுக்கவும் அதனால் “கவுரவமான குடும்பத்துப் பிள்ளைகள்” படிக்க வகைச் செய்வதற்காகவும் தான். 1851இல் முதல் தலித் மாணவர் சேர்ந்தபோது சில உயர்சாதி மாணவர்கள் வெளியேறினர். இத்தகையச் சிக்கல் அதே காலத்தில் இயங்கிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் நடந்தது. பச்சையப்பன் கல்லூரியிலும் தலித்துகள் வெக காலம், 80 ஆண்டுகள், விலக்கி வைக்கப்பட்டனர். ஆக, நவீன கல்வி அறிமுகமாகி முதல் சில தலைமுறைகள் முற்பட்ட சாதியினரே, குறிப்பாக பிராமணர்களே கல்வி பெற்றனர். அக்கல்விப் பயின்றோரே அடுத்து அதிகார பீடங்களிலும் மிக முக்கியமான காலகட்டத்தில் அமர்ந்தனர்.
  • சமூகத்தில் நிலவிய சாதியத்துக்கு காலனி ஆட்சியாளர்கள் பெரும்பாலும் அங்கீகாரம் அளித்தே எதையும் செய்தனர். தலித் மாணவர்கள் கல்வியில் சிறக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று மிஷனரிகளின் பதிவுகளைக் குறிப்பிட்டு எல்பின்ஸ்டோன் அச்சத்துடன் சொல்கிறார், “நம் கல்வி முறை அத்தகையவர்களுள் வேரூன்றினால் மற்றவர்கள் விலக நேருவதோடு எல்லா சாதியினரும் (முற்பட்ட சாதிகளைக் குறிப்பிடுகிறார்) வெறுக்கும் இந்தச் சாதியினர் கல்வியினால் சிறந்து மேலோங்கி இருப்பார்கள், அது விரும்பத்தக்க நிலையல்ல” என்கிறார்.
  • 1898இல் வெளிவந்த ஓர் அறிக்கை சொன்னது நகரக் கல்வி போர்டுகள் தலித் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை வகுப்பினுள் உட்கார வைத்து அளிக்கத் தேவையில்லை, வெயிலும் மழையும் படாதவாறு வெராண்டாவில் அமர்ந்து பாடம் கேட்கட்டும் என்று விதியேற்படுத்துகிறார்கள்.
  • 1858 சிப்பாய் கலகத்துக்குப் பின் உள்ளூர் சமூக வழக்கங்களில் தலையிடுவதில்லை என்ற முடிவின் காரணமாக இந்து சமூகத்தின் சாதிய வழக்கங்களுக்கு மாறாக உரிமைகளைத் தலித்துகள் கோரியப் பல நேரங்களில் நீதிமன்றங்கள் செவி சாய்க்காதிருந்திருக்கின்றன. இதனை குறிப்பாக மதம் மாறிய தலித்துகள் புது உரிமைகளைக் கோரியபோது அதேபோல் மதம் மாறிய, கிறிஸ்தவத்தில், ஆதிக்கச் சாதியினர் அவ்வுரிமைக் கோரலுக்கு எதிராக வழக்குகள் மேற்கொண்டு வெற்றியும் பெற்ற வரலாறுகள் உண்டு.
  • மெக்காலேவின் குற்றவியல் நீதி அமைப்பு மனுஸ்மிருதி சாராது எனினும் நீதிமன்றங்களிலும் மனுவின் நிழல் தீர்க்கமாகவே இருந்தது. சாட்சி சொல்வோர் உறுதிப் பிரமாணம் செய்வது சாதிக்கு ஒரு வகையாக இருந்தது, சிறையில் அளிக்கப்படும் பணிகள் சாதிரீதியாகத்தான் நிர்ணயம் செய்யப்பட்டன அதில் தலித்துகளுக்கு பெரும்பாலும் துப்புரவு வேலை ஒதுக்கப் படும்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையிலான தென்னிந்திய கிறிஸ்தவர்களின் சமூக வாழ்வுக் குறித்து எழுதும் ஆய்வாளர் சந்திரா மல்லம்பள்ளியின் புத்தகம் மதம் மாறுபவர்கள் தங்கள் சாதி இழப்பதாகவும் அதனால் பிதுரார்ஜித சொத்துகளுக்கு உரிமையற்றவர்களாகவும் மாறுகிறார்கள் என சாஸ்திர அடிப்படையிலான சட்டத்தைக் காரணம் காட்டி பலரின் சொத்து இழப்புக்கும் அஞ்சி மதம் மாறாமல் இருப்பதற்கு நிர்பந்தித்தனர். மீண்டும் மீண்டும் இந்து மதத்தின் சாதி அமைப்புக்குக் காலனி ஆட்சி மதிப்பளித்தது.
  • காலனி ஆட்சிக்காலத்தில் தலித்துகள் பல முன்னேற்றங்கள் கண்டாலும் எப்போதும் அந்த முன்னேற்றங்களுக்கு ஓர் எல்லை இருந்தது. சாதி இந்துக்களின் ஏகோபித்த எதிர்ப்புகள் வரும் என்று அஞ்சியபோதெல்லாம் அரசு தலித்துகளின் நலன்களை காவுகொடுத்தது. காலனி காலத்திய சட்டங்கள் பலவும் சுதந்திர இந்தியாவிலும் பல வகைகளில் தொடர்ந்தது சீரிய விவாதத்துக்கும் ஆய்வுக்கும் உரியது. அந்தச் சாதி அமைப்பின் அடித்தளம் மனுஸ்மிருதி.
  • காலனி ஆட்சிக்காலத்தில் இந்தியா எங்கும் எழுந்த தலித் பேரெழுச்சி சாதியத்துக்கு எதிரான யுத்தத்தில் மனுஸ்மிருதியை வீழ்த்துவது முக்கியம் என்று கண்டறிந்தது. எங்கு திரும்பினும் மனுவின் நிழல் தங்கள் குதிங்கால்களில் கடிப்பதை தலித்துகள் கண்டனர், வெகுண்டனர் மனு ஸ்மிரிதியை தீயினுக்கு தின்னக் கொடுப்போம் என்று குரல்கள் ஓங்கின.

மனுஸ்மிருதியை எரிப்போம்: வரலாற்றில் எழுந்த கலகக் குரல்கள்

  • இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1900களில்) தலித் கவிஞர் கொண்டிராம் (Kondiram) மனுஸ்மிருதியைக் கடுமையாகச் சாடியும் மனுஸ்மிருதியினால் தலித்துகள் வாழ நிர்பந்திக்கப்பட்ட கொடுமையானச் சூழலை வர்ணித்தும் கவிதைகள் புனைந்தார். தலித் இலக்கிய ஆய்வாளர் எஸ்.பி.புனலேகர், கொண்டிராம்தான் மனுஸ்மிருதியை எரிக்க வேண்டும் என்று முதலில் சொன்னவராக இருக்கலாம் என்கிறார்.
  • மனுஸ்மிருதியைச் சாடி எழுதிய மற்ற தலித் கவிஞர்களுள் வாமன் நிம்பல்கரையும் சஷிகாந்த் லோகண்டே ஆகியோரை புனலேகர் அடையாளப்படுத்துகிறார். மற்ற எந்தச் சமூகத்தையும் விட மனுஸ்மிருதியை விமர்சிப்பதும் எதிர்ப்பதும் தலித்துகள் இடையேதான் முக்கிய சிந்தனை மரபாக இருந்திருக்கிறது.
  • பெருந்தலைவர் எம்.சி.ராஜா, 1927 அக்டோபர் 17 அன்று காட்பாடியில் ஆதிதிராவிட மகாநாட்டில் ஆற்றிய பேருரையை ‘குடியரசு’ பத்திரிகை 30ஆம் தேதி, ‘மநுதர்ம சாஸ்திரம் சாம்பலாக வேண்டும்’ என்று தலைப்பிட்டு வெளியிட்டது. அவ்வுரையில் மகாத்மா காந்தியை விமர்சித்த எம்.சி.ராஜா, “அந்த மனு அதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையிலும் நம் ஜனங்களும் முன்னுக்கு வர மாட்டார்கள். இந்தியாவும் ஒரு நாளும் விருத்தியாகாது. ஆனபடியினால் இந்த புஸ்தகத்தை அடியோடு துலைக்க வேண்டிய முயற்சி நாம் செய்ய வேண்டியது அவசியம். இம்மகாநாட்டில் கவர்மெண்டார் இந்த மனுதர்ம சாஸ்திர புஸ்தகங்களை எல்லாம் உடனே கைப்பற்றிக்கொண்டு அவைகளை எல்லாம் நெருப்பில் தகனம் செய்து அந்தச் சாம்பலைக்கூட இந்தியாவில் வைக்காமல் சமுத்திரத்தில் கலக்கிவிட வேண்டுமென்று ஒரு தீர்மானம் செய்ய வேண்டும். இது அத்தியாஅவசியம். இது செய்யாவிட்டால் நம் ஜனங்களுக்கும் இந்திய மாதாவுக்கும் விமோசனமே கிடையாது” என்றார்.
  • எம்.சி.ராஜா பேசுவதற்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானங்களை 27ஆம் தேதியன்று ‘தமிழன்’ பத்திரிகை வெளியிட்டது. பச்சையப்பன் கல்லூரியில் நிலவும் சாதியம் பற்றி எச்சரிக்கை விடுத்தப் பின், 11வது கோரிக்கையாக மாநாட்டு தீர்மானம் சொன்னது, “மனுவின் சட்டம் உள்ளளவும் ஒடுக்கப்பட்டவரின் முன்னேற்றத்துக்கு முக்கிய தடையாய் இருப்பதுடன் பூர்வகுடிகளாகிய ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்துவதற்கேதுவாயும், இந்து தேசத்துக்கே கெடுதலாய் இருப்பதாக இம்மகாநாடு மதிக்கிறபடியால் இச்சட்ட புத்தக பிரதிகளைப் பறிமுதல் செய்து தீயில் சுட்டெரித்து சாம்பலை வங்காள விரிகுடாக் கடலில் சமுத்திர அடக்கம் செய்யும்படி இம்மகாநாடு கவர்மெண்டாரைக் கேட்டுக்கொள்கிறது.”
  • எம்.சி.ராஜாவும் தமிழக தலித் அமைப்பும் மனுஸ்மிருதியை எரிக்கச் சொல்லும் முன்னரே பாபாசாகேப் அம்பேத்கர் சாஸ்திரங்களை எரிக்க வேண்டும் என்று கொந்தளித்தார். 1925இல் மும்பை ஒடுக்கப்பட்டோர் கூட்டரங்கில் மகாத்மா காந்தியின் (‘மகாத்மா’ என்றே அம்பேத்கர் குறிப்பிட்டார்) வைக்கம் சத்தியாகிரகத்தின்போது பிராமணர்கள் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தங்கள் தீண்டாமைக்கு ஆதரவுத் திரட்டியதைச் சுட்டிக்காட்டி அம்பேத்கர், “இந்த சாஸ்திரங்களை நாம் எரிக்க வேண்டும் அல்லது தீண்டாமைப் பற்றிய அவற்றின் கருத்துகளை ஆராய்ந்தறிய வேண்டும்; அவைப் பொய்யல்ல என்று கண்டால் நாம் இனி ஆண்டாண்டு காலம் தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்க நேரிடும். இந்த சாஸ்திரங்கள் மக்களுக்கு ஓர் அவமானம். அரசு இதனை எப்போது பிடுங்கியிருக்க வேண்டும்” என்றார்.
  • 1927இல் மஹத் சத்தியாகிரகத்தின்போது மனுஸ்மிருதி சந்தனக் குச்சிகளிடையே ஒரு குழியில் இடப்பட்டு எரிக்கப்பட்டது. “அந்த நிகழ்வு சாதி இந்துக்கள் இடையே சில தீவிர முற்போக்காளர்களைத் தவிர பல மிதவாதிகளை விலகிச் செல்ல வைத்தது” என்கிறார் எலினோர் ஸெல்லியட் (Eleanor Zelliot).  இன்றும் மனுஸ்மிருதியை எரிக்க சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுக்கூட பிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
  • அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து அக்டோபர் 2020இல் ஒரு இணையக் கருத்தரங்கில் பெரியார் பற்றி உரையாற்றிய திருமாவளவன் மனுஸ்மிருதி பற்றிச் சில வரிகளே பேசினார், பெண்கள் அடிமைகளுக்கு ஒப்ப இருந்த நிலைப் பற்றியது அவை, வெடித்தது சர்ச்சை, எரிமலையாக எதிர்ப்பு கிளம்பியது. “மனு இன்று வழக்கில் இல்லை, ஏன் பேசுவானேன்?”, “இந்து மத விரோதி” என்று கூக்குரல்கள் திசையெங்கும் எழுந்தன. குற்றச்சாட்டுகளில் சாரமுண்டா, திருமாவளவன் மனுஸ்மிருதியை எரிக்க முற்பட்டது இந்து விரோதமா?
  • அடுத்து காண்போம்.

தொடர்ந்துவரும் மனுவின் நிழலும் எதிர்ப்பின் அவசியமும்

  • மனுஸ்மிருதியை எதிர்ப்பது என்பது மனுஸ்மிருதி எனும் ஒரு நூலினை மட்டும் எதிர்க்கும் குறுகிய நோக்கமல்ல. மனுஸ்மிருதியை எதிர்ப்பது என்பது சமூகத்தில் புற்றுநோயாகப் பரவியிருக்கும் சாதியத்தையும் அதன் அடிப்படையான தீண்டாமையையும் எதிர்ப்பதே. இங்கே ‘மனுஸ்மிருதி’ என்பது ஒரு குறியீடு. சமூகத்தில் நிலவும் சாதியத்தின் முக்கியமான காரணி மனுஸ்மிருதி எனும்போது என்னமோ மக்கள் எல்லோரும் அன்றாடம் அதனை படித்தறிந்து அதன் மூலம் பெற்ற சிந்தனையிலாயே சாதியத்தைக் கைக்கொள்வதாக எளிமைப் படுத்திக் கொள்ளக் கூடாது.
  • சாஸ்திரங்களின் ஞானம் சமூகத்தில் பரவும் வகை நேரடியானது அல்ல என்றும் சாஸ்திரத்தை நேரடியாக அறியாமலேயே அன்றாட வாழ்வியலில் அதனைப் பின்பற்றுதல் சாத்தியமே என்று முன்பே விளக்கினேன். அப்படி இன்றும் இந்தியர்களின் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தும் கருத்தியல்தான் ‘மனுஸ்மிருதி’.
  • திருக்குமரன் கணேசனின் ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்: சாதியினாற் சுட்ட வடு’ நூல் சாதாரணர்கள் வெகு இயல்பாக கை கொள்ளும் சாதிய வெளிப்பாடுகள் பற்றியது. பரிவுடன் உபசரிக்கும் நண்பனின் தாய் உணவுப் பரிமாறிக்கொண்டே தன் பையன் தலித் தோழர்களோடு பழகுவது பற்றி திருக்குமரனிடமே, அவர் யாரென்று அறியாமல், சாதிய வசைச் சொல்லைக் கொண்டு குறிப்பிட்டு வருத்தப்படுகிறார்.
  • மீண்டும், மீண்டும் அத்தகைய நிகழ்வுகள் புத்தகம் முழுவதும் விவரிக்கப்படுகின்றன. பலரும் சாதாரணர்கள், சராசரி நண்பர்கள், ஆசிரியர்கள் முதலானோர். சாதிய நோக்குடையவர்கள் ஒன்றும் எல்லா நேரமும் எல்லோருடமும் வெறுப்புடன் இருப்பவர்கள் அல்லர். அதுதான் அவர்களின் சாதியத்தை இன்னும் குரூரமாக்குகிறது. அந்தக் குரூரத்தை மேலும் பன்மடங்காக்குவது அவர்கள் சாதியத்தை வெகு சாதாரண இயல்பாக தங்கள் மனத்தில் இடமளித்து பாதுகாத்து வைத்திருப்பதே. இதுதான் மனுஸ்மிருதியின் வெற்றி.
  • தமிழ்நாட்டில் 1938இல் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் தலித்துகள் ஈமச் சடங்கின்போது ஆதிக்கச் சாதியினரின் கால்களில் விழ நிர்பந்திக்கப்படுவதை நிறுத்தக் கோருகின்றனர். ஆனால், நீதிமன்றம் “இப்படியான உருப்படியில்லாத வழக்குகளைத் தொடராதீர், உடையார்கள் தாமாக முன்வந்துவிட்டு கொடுத்தால் நீதிமன்றம் தலையிடாது” என்றது. 1980களில் இளையபெருமாள் முன்னெடுத்த ‘இழித் தொழில் மறுப்பு’ போராட்டங்களை எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தன் ‘எழுதாக் கிளவி’ நூலில் விவரித்திருப்பது இவ்வகை இழிவுகளின் தொடர்கதையைச் சொல்லும்.
  • தேசத்தின் நீதிமன்றங்களேகூட, உச்ச நீதிமன்றம் உள்பட, அவ்வப்போது மனுஸ்மிரிதியை மேற்கோள் காட்டியிருக்கின்றன. 2009-2019 வரை 26 முறை மனுஸ்மிருதி மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. 1989-2019 வரை 7 முறை உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புக்கு உதவியாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது.
  • அமெரிக்காவில் கறுப்பினத்தவர் வெள்ளைக்காரர்களுக்குச் சமமாக பேருந்துகளில் உட்கார பெரும் போராட்டம் நடத்தியது பலர் அறிந்தது, ஆனால் நம்மவர்கள் அறியாதது எண்பதுகளில் தமிழகத்திலேயே தலித்துகள் சில ஊர்களில் பேருந்துகளில் அமர முடியாத நிலை இருந்தது. அப்படியான அடக்குமுறைக்கு எதிராகத்தான் மீனாட்சிபுரத்தில் 180 குடும்பங்கள் மதம் மாறின. மீனாட்சிபுரத்தில் நிலவிய சாதியம் பற்றியும் தேசம் எங்கும் அதிர்வலைகள் எழுப்பிய அந்த மதமாற்றம் குறித்தும் தன் முனைவர் பட்ட ஆய்வறிக்கையாக திருமாவளவன் எழுதிய நூல் முக்கியமான ஆவணம்.
  • மக்கள் இடையே புழங்கும் சாதியம் இன்று இந்துத்துவத்தால் அரசியல் ஆயுதமாகி இருக்கிறது. இந்திய அரசியலில் சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது வழமை. இந்துத்துவக் கருத்தியலாளர்கள் அதிலிருந்து சில படிகள் மேலேறி மனுவும் சாதியமும் வெறுக்கத்தக்கது அல்ல என்றும் அவை சமூகம் உரசலின்றி இயங்க உதவுபவை என்றும் நிறுவ முயல்கின்றனர். அத்தரப்பு அடிக்கடி இந்தியா தர்மத்தின் அடிப்படையிலான தேசம் என்றும் நாம் மேற்குலகம் போல் உரிமைகளின் அடிப்படையிலான தேசமாக மாறியது நம் பண்பாட்டைச் சீரழித்தது என்ற கருத்தையும் பரப்புரை செய்கிறது. இதற்கு எதிராகத்தான் திருமாவளவன் “சனாதனத்தை எதிர்போம்” என்று சன்னதம் செய்கிறார்.
  • திருமாவளவன் ‘சனாதனத்தை எதிர்போம்’ என்று முழங்கும்போது அவர் இந்து மதத்தை மொத்தமாக குறிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ‘சனாதனம்’ என்று திருமாவளவன் குறிப்பது இந்து மதத்தின் சாதிய ஆசாரவாதத்தை மட்டுமே.
  • அமெரிக்காவில் நிறவெறிச் சட்டங்கள் கொண்டு நிறுவப்பட்டது, இந்தியாவில் எழுதப்படாத சட்டமாகவே சாதியம் நிலைப்பெற்றது. முன்னதைவிட பின்னதை அவ்வளவு எளிதாக முறித்துவிட முடியாது. சாஸ்திரங்கள் நம் அன்றாட வாழ்வில் அதனைப் படித்து அறியாதவர்களிடையேயும் புழக்கத்தில் இருப்பதைப் பார்த்தோம். இவ்விரண்டு கருத்துகளையும் திருமாவளவனும் மனுஸ்மிருதி சர்ச்சைத் தொடர்பாக அளித்த ஒரு பேட்டியில் அடிக்கோட்டிருக்கிறார்.
  • ஹஃபிங்க்டன் போஸ்டுக்கு அக்டோபர் 2020இல் அளித்தப் பேட்டியில் திருமாவளவன் சொல்கிறார், “நாம் பைபிள், கீதை, குரான் முதலான மத நூல்களைப் படிக்காவிடினும் அவற்றின் விழுமியங்களை நம் வாழ்வில் பின்பற்றுகிறோம். அந்நூல்கள் உயிர்ப்புடன் இருப்பது நாம் அவற்றின் விழுமியங்களை பின்பற்றுவதால். அதேபோல் மனு யாரென்று தெரியாமல், மனுஸ்மிருதி படிக்காமல் அதன் விழுமியங்களைப் பின்பற்றுவோர் அநேகர், அவ்விழுமியங்கள் நம் சமூக வழக்கங்களில் கடைப்பிடிக்கிறோம்... மனுவின் சாஸ்திரங்கள் சட்ட அமைப்பில் இடம்பெறாவிடினும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் அதன் தாக்கத்தைப் பார்க்கிறோம்.”
  • இந்தியச் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று வரையறுத்தாலும் பல இருப்பிடங்கள் சாதிய வேற்றுமைகளை பின்பற்றியதைத் திருமாவளவன் சுட்டிக்காட்டுகிறார். 1950களிலும்கூட, தீண்டாமையைச் சட்டம் இயற்றிக் குற்றம் என நிறுவியப் பின்பும், கும்பாபேட்டை அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் பிரவேசிக்க முடியாது. வேறு சில அக்ரஹாரங்களில் 1980கள் வரைகூட பிராமணரல்லாதார் வீடு வாங்க இயலாது.
  • ஆக, சட்டம் வேறு; நடைமுறை வேறு. 1954இல் சென்னை சட்டசபையில் பேசிய பி.ஜி.மாணிக்கம் சொல்கிறார், “கோயம்புத்தூர் ஜில்லாவில் 119 சேரிகளில் கிணறுகள் கிடையாது. 316 சேரிகளிலுள்ள கிணறுகள் சுத்தம் செய்யப்படவில்லை. இச்சுதந்திர இந்தியாவில் ஹரிஜனங்கள் குடிதண்ணீர்கூட இல்லாமல் கஷ்டபடுகிறார்கள்.”
  • பேருந்து நிலையம் பெறுவதற்கும், உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கும், தேர்தலில் விசிகவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காகவும், தேர்தல் வாக்கு சேகரிக்கவும் என்று அநேக குடியுரிமைகளைப் பெறவோ உரிமையைப் பயன்படுத்துவதோ தலித்துகளின் உயிர்களுக்கே பாதகம் விளைவிக்கக்கூடியது. எல்லா அரசியல் கட்சியும் கொடிக் கம்பம் நிறுவவது அன்றாட நிகழ்வு, விசிகவுக்கோ அதுவே போராட்டம்தான்.
  • இந்துத்துவமும் ஏற்கெனவே சமூகத்தில் நிலவும் சாதியமும் ஒன்றுடன் ஒன்று இயைந்து புதிய பேராபத்தாக மீண்டும் வலு பெறுவதை  மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு அதற்கு எதிரான போராட்டத்தை சமகாலத் தமிழகத்தில் மீண்டும் ஆரம்பித்தவர் திருமாவளவன். அவர் தொடங்கிய மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம் ஏதோ புராணக் கதைக்கு எதிரான வாக்கு அரசியல் போராட்டம் அல்ல; அது நம் நாளைய சமூகம் எத்தகைய சமூகமாக இருக்க வேண்டும், எத்தகைய சமூகமாக இருக்கக் கூடாது என்று தீர்மானிக்கும் அறப் போராட்டம்!

நன்றி: அருஞ்சொல் (20 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்