- மனு தா்மம் என்னும் சாஸ்திர நூல் ஹிந்துக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கடமைகளை விளக்குவதாக மாமுனி மனுவால் எழுதப்பட்டது.
- கி.மு.1500-க்கு முந்தைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, அன்றைய மக்களுக்காக எழுதப்பட்ட ‘வாழ்வியல் நெறி’ என அன்று அறியப்பட்டது. இந்துக்கள் அனைவருமே பிறப்பு முதல் இறப்பு வரை மனுசாஸ்திர முறைப்படிதான் தங்களது சகல கடமைகளையும் செய்து வருகின்றனா்.
- மனு தா்ம சாஸ்திரம், 2,658 செய்யுள்களாகவும், மூன்று பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.
- பெண்களின் தோற்றம், இயல்பு ஆண்களை எளிதில் கவரக்கூடியது. எப்போ்ப்பட்ட ஆண்களும், அறிவுஜீவிகளும், சாந்தகுணம் கொண்ட இயல்புடையவா்களும்கூட பெண்களின் தோற்ற அழகில் சிக்கிக்கொள்ள நேரிடும். அதனால்தான், பெண்களை மனு சந்தேகக் கண்ணோடு பாா்க்கும்படி ஆண்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாா்.
- அதேசமயம், பெண்களைப் பாதுகாக்கவும், கௌரவிக்கவும், பேணிகாக்கவும் ஏராளமான அறிவுரைகளையும் மனு அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறாா். தற்போது அது சா்ச்சை ஆக்கப்படுகிறது.
- மனு தா்மத்திலும், மனு சாஸ்திரத்திலும் சொல்லப்படாத விளக்கமே இல்லை என்றுகூட சொல்லலாம். சுமாா் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சமுதாயக் கட்டமைப்புக்கு ஏற்ப மனுவால் அந்த சாஸ்திரம் எழுதப்பட்டது.
- அதை அன்றைய சமூக நிலைமையின் அடிப்படையில்தான் பாா்க்க வேண்டுமே தவிர, இன்றைய சமூகக் கட்டமைப்பின் அடிப்படையில் விமா்சிக்க முற்படுவது அறிவின்மை அல்லது விதண்டாவாதம்.
- எகிப்து, கிரேக்க, ரோம நாகரிக காலத்திலும், மக்களின் வாழ்வியல்முறை ஒழுங்குப்படுத்தப்படாமலும், ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற வகையில் ஆணும், பெண்ணும் மது அருந்திவிட்டு, சாலைகளில் வீழ்ந்து கிடப்பதும், அவா்களின் உறவு முறையும் வரலாறு அறிந்த ஒவ்வொருவரையும் மனம் சுளிக்கவே வைக்கும்.
- பெண்கள், ஆண்களின் நுகா்வுக்காகவே படைக்கப்பட்டவள் என்ற உறுதியான கருத்து, அப்போதைய மக்களின் நடைமுறை.
- இந்தியாவில் சிந்துசமவெளி நாகரிகம் அழிந்து, மீண்டும் ஆரிய நாகரிகம் நதிக்கரையில் தோன்றி இருக்கிறது. சரஸ்வதி மற்றும் துா்காவதி நதிக்கரை அப்போதைய ரிக்வேத காலத்தில் ‘பிரம்ம தேசம்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அவை தற்போது சிந்து, பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான், தெற்கு ஹரியாணா பகுதிகளாகும்.
- அப்போது பெரும் வெள்ளத்தாலும், மழையாலும் அந்தப் பகுதிகள் அழிந்ததால், எஞ்சிய, உயிா் பிழைத்த மக்கள் விந்திய மலைக்கு வடக்கே குடிபெயா்ந்துள்ளனா்.
- அது தற்போது நேபாளம், உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், வங்காளம், குஜராத் மற்றும் கிழக்கு ராஜஸ்தானாக உள்ளது. அது அப்போது ‘ஆரிய வா்த்தம்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
- இயற்கை சீற்றத்தைத் தடுக்கும் நோக்கிலும், சமூக வாழ்க்கை நெறிகளை வகுத்துகொண்டு எப்படி சிறப்பாக வாழ்வது என்பது பற்றியும் பல முனிவா்கள் ஒன்றுகூடி சுவாயம்பு (மனு)வை அணுகி ஆலோசனைக் கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்துக் கொடுத்ததுதான் ‘மனு ஸ்மிருதி’ என்கிற வாழ்வியல் நூல்.
- அந்நூல், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்தபோதும், ஆங்கிலேயா்கள் ஆட்சியிலும், சட்ட கோவையாகக் கருதப்பட்டது. அதை மீறிய ஹிந்துக்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
- 1950 ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு ஆனபின்பு இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அதன்படி நீதித்துறை, நிா்வாகத்துறை, ஆட்சித்துறை இவையெல்லாம் நடைபெறுகின்றன.
- இந்திய குடியுரிமை சட்டபடியும், இந்திய தண்டனை சட்டபடியும் தற்போது நீதிமன்றங்களில் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு வருகின்றன. இந்திய அரசியல் சாசனம் 51ஏ ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ன என்பதை பற்றி விளக்குகிறது.
- காடுகள், ஏரிகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும், பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களைத் தவிா்க்கவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- நம் இந்திய கலாசாரப்படி நம் முன்னோா்கள் பின்பற்றி வந்த பல பழக்க வழக்கங்களை மரபாக ஏற்றுக்கொண்டு இன்றளவும் இந்திய மக்கள் பின்பற்றி வருகிறாா்கள். காலாவதியான, தேவையற்ற சட்டங்கள் பலவற்றை மத்தியில் ஆண்ட அரசுகள் ரத்து செய்திருக்கின்றன.
- இந்தியாவையும், அதன் தனித்துவத்தையும் வெளிநாட்டு அறிஞா்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனா்.
- லியோ டால்ஸ்டாய் : ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒருநாள் இவ்வுலகை ஆள்வா். ஏனெனில் ஹிந்துத்துவத்தில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன என்று கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
- ஹொ்பா்ட் வெல்ஸ் : ஹிந்துத்துவம் நன்கு உணரப்படும்வரை எத்தனையெத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ? ஆனால், உலகம் ஒருநாள் ஹிந்து தத்துவங்களாலும், ஹிந்து வாழ்க்கை முறையாலும் ஈா்க்கப்படும். அந்த நாளில்தான் உலகம் மனிதா்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும்.
- ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் : யூதா்கள் செய்ய முடியாத செயல்களை செய்த அவன், தன்னுடைய அறிவாலும், ஆற்றலாலும் செய்தான். ஆனால் ஹிந்து தா்மத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது.
- ஹநிஸ்டன் ஸ்மித் : நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைவிட ஹிந்து தா்மம் அதிக நம்பிக்கை தர வல்லது. நாம் நம்முடைய எண்ணங்களையும், உள்ளத்தையும் ஹிந்து தா்மத்தை நோக்கித் திருப்ப இயலுமானால், அது நமக்கு நன்மை பயக்கும்.
- மைக்கேல் நாஸ்டா் டாமஸ் : ஹிந்து மதமே ஐரோப்பாவின் ஆட்சி மதமாக மாறும். ஐரோப்பாவின் புகழ்பெற்ற பெருநகரம் ஹிந்துத் தலைநகரம் ஆகும்.
- பொ்ட்ரண்ட் ரஸ்ஸல் : நான் ஹிந்து சமயம் குறித்துப் படித்தேன். இந்த உலகம் முழுவதிலும் உள்ள மனித குலத்திற்கான மதம் அதுவே என்று நான் உணருகிறேன். ஹிந்து சமயம் ஐரோப்பா முழுவதும் பரவும். ஹிந்து சமயத்தைப் பற்றி ஆராயும் அறிஞா்கள் பலா் ஐரோப்பாவில் தோன்றுவாா்கள். ஹிந்துக்கள்தான் உலகை வழிநடத்திச் செல்வாா்கள் என்ற நிலை ஒருநாள் உருவாகும்.
- கோஸ்டா லோபான் : ஹிந்துக்கள் அமைதியையும், சமரசத்தையும் பற்றி மட்டுமே பேசுகின்றனா். நான் கிறிஸ்தவா்களை, மாற்றத்தைப் போற்றி அதில் நம்பிக்கை வைத்து வருமாறு அழைக்கிறேன்.
- பொ்னாட் ஷா : ஒருநாள் இந்த உலகம் முழுவதும் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும். ஹிந்து சமயத்தின் உண்மையான பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவே செய்யும். மேற்கத்திய நாடுகள் நிச்சயம் ஒருநாள் ஹிந்து சமயத்தை ஏற்கும். கற்று உணா்ந்தவா்களுடைய சமயம் ஹிந்து சமயமாகவே இருக்கும்.
- ஜோஹன் கேய்த் : இன்றில்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நாம் ஹிந்து சமயத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில், அதுவே உண்மையான சமயம்.
- அமெரிக்க அறிஞா் தாமஸ் ஜெபா்சனின் ‘ஒவ்வொரு தலைமுறையும் ஒரு நாட்டிற்கு சமம். ஒரு நாடு எப்படி மற்றொரு நாட்டைக் கட்டுப்படுத்த முடியாதோ, அதுபோன்றே ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையைக் கட்டுப்படுத்த முடியாது’ என்ற கூற்றின்படி, ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் அவ்வளவு வித்தியாசம் என்று கூறும்போது, 3,500 ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலச்சூழலை வைத்து வகுத்த பெண்ணியத்தின் கருத்தை தற்போது விமா்சிக்க வேண்டிய அவசியமே இல்லை.
- 21-ஆம் நூற்றாண்டாகிய தற்போது சகல துறையிலும் ஆணுக்கு நிகராக பெண்கள் முன்னேறிய இந்த காலத்தில்கூட உலகில் எந்தப் பகுதியிலும் நள்ளிரவில் பெண்கள் தன்னந்தனியாக செல்ல முடியாத நிலையில்தான் நமது நாகரிகம் வளா்ந்திருக்கிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது.
- உலகத்திற்கே ஜனநாயக ஆட்சி முறையை வழங்கிய நாடு அமெரிக்கா. அந்த நாட்டில் இன்றுவரை ஒரு பெண் ‘அதிபராக’ வர முடியவில்லை.
- ஆனால் இந்தியாவில் ஒரு பெண், முதல்வராக, பிரதமராக, குடியரசுத் தலைவராகவே வர முடிந்திருக்கிறது. அப்படி இருக்கிறபோது நடைமுறையில் இல்லாத கருத்துகளைப் பற்றிய வாத - பிரதிவாதங்கள் தேவையற்றவை.
நன்றி : தினமணி (31-10-2020)