- விளையாட்டில் விட்ட இடத்திலிருந்து பிடிப்பது என்பது சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் விட்ட பதக்கத்தை, பாரிஸ் ஒலிம்பிக்கில் பிடித்துப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் மனுபாகர். இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான 22 வயது மனு பாகர், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்கிற மகத்தான சாதனையையும் சேர்த்தே படைத்திருக்கிறார்!
இளம் வயதில் சாதனை:
- சிறு வயதில் பார்க்கிற, விளை யாடுகிற எல்லா விளையாட்டுகள் மீதும் ஈர்ப்பு ஏற்படும். மனு பாகரும் அதற்கு விதிவிலக்கல்ல. குத்துச்சண்டை, மல்யுத்தத்துக்குப் பெயர்போன ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் பிறந்த மனு, நீச்சல், கராத்தே, ஸ்கேட்டிங், குத்துச்சண்டை என ஒரு ரவுண்ட் அடித்தவர்தான். தற்காப்புக் கலைகளில் பங்கேற்று தேசிய அளவில் பதக்கங்களையும் வென்றவர்.
- 14 வயது வரை துப்பாக்கிச் சுடுதலில் அவருக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. பின்னர்தான் அவருக்குத் துப்பாக்கி மீது ஆர்வம் ஏற்பட்டது. தன் தந்தையிடம் விளையாட்டுத் துப்பாக்கியைக் கேட்டு வாங்கியிருக்கிறார். மகளின் ஆசைக்கு என்றுமே குறுக்கே இருந்திடாத ராம் கிஷண் பாகர், மகளின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். அதன் பிறகு மனு பாகர் துப்பாக்கிச் சுடுதலில் நிகழ்த்தியது எல்லாம் வரலாறு.
- முறையாகத் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிப் பெற்ற பிறகு 2017இல் தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் காலடி வைத்தது முதலே வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார் மனு. இந்தியாவின் சிறந்த வீராங்கனையும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஹீனா சித்துவை 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வீழ்த்திதான், தன்னுடைய வெற்றிக் கணக்கை மனு தொடங்கினார்.
- அதன் பிறகு மனு சுட்டதெல்லாம் பதக்கங்கள்தான். ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன் அன்னா கோரகாக்கி, மூன்று முறை ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை பதக்கம் வென்ற செலின் கோபர்விலி என ஜாம்பவான்களை ஓரங்கட்டி அறிமுகமான2018 உலகக் கோப்பை யிலேயே தங்கத்தைச் சுட்டு வந்தார் மனு. அப்போது அவருக்கு 16 வயது. இதன்மூலம் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இளம் இந்தியர் என்கிற பெருமையையும் மனு பெற்றார்.
சுட்டதெல்லாம் தங்கம்:
- 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக உலகக் கோப்பைப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப், ஜூனியர் உலகக் கோப்பை தொடர் என மனு சுட்டதெல்லாம் பதக்கங்களாக விழுந்தன. அந்த வகையில் 21 தங்கம், 2 வெள்ளி எனப் பதக்கங்களை வென்று அசுரப் பலத்துடன் உருவெடுத்தார்.
ஜஸ்பால் ராணா
- இதனால் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ஒலிம்பிக் போட்டி தொடங்க 3மாதங்கள் இருந்தபோது அவருக்கும் பயிற்சியாளரும் முன்னாள்சாம்பியனுமான ஜஸ்பால் ராணா வுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பயிற்சியாளருடன் முரண்:
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் பங்கேற்க மனுவும் இந்தியத் துப்பாக்கிச் சுடும் சங்கத்தினரும் முடிவு செய்தனர். ஆனால், இளம் வீராங்கனையான மனுவுக்கு அது அதிக சுமையாக இருக்கும் என்று ஜஸ்பால் ராணா முட்டுக்கட்டைப் போட்டார். 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் மட்டுமே பங்கேற்கும்படி அழுத்தம் கொடுத்தார்.
- இதனால், மனுவுக்கும் பயிற்சியாளர் ராணாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ராணாவின் பயிற்சியை மனு முறித்துக் கொண்டார். மனுவின் திறமைகளை வெளிக்கொணருவதில் முக்கியப் பங்காற்றிய பயிற்சியாளர் ராணாவுக்குப் பதிலாக வேறொரு பயிற்சியாளரின் கீழ் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் செல்ல நேர்ந்தது.
- அதன் தாக்கமோ என்னமோ டோக்கியோ ஒலிம்பிக்கில் மனுவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முக்கியமான போட்டியில் அவருடைய துப்பாக்கிச் சரியாக வேலை செய்யாமல் போனது. அதனால் போட்டியிலிருந்து தோல்வி முகத்துடன் வெளியேற நேர்ந்தது.
- மற்றப் போட்டிகளிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. அதற்கு முன்புவரை குறி வைத்தால் பதக்கம் என்கிற நிலையிலிருந்த மனு பாகருக்கு டோக்கியோ ஒலிம்பிக் கசப்பான அனுபவத்தையே தந்தது. இதனால் மனம் உடைந்து போனார். எப்போதும் தவறிலிருந்து பாடம் கற்பது நல் விளைவுகளையே தோற்றுவிக்கும் அல்லவா? மனு பாகருக்கும் அதுதான் நடந்தது.
மீண்டும் இணைந்த கைகள்:
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் பங்கேற்றது சுமையாக மாறியதை உணர்ந்த மனு, மீண்டும் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா உதவியை நாடினார். 2023 முதல் அவருடைய பயிற்சியின் கீழ் விளையாடத் தொடங்கிய மனு, அழுத்தமான தருணங்களில் தன்னம்பிக்கையுடன் போட்டிகளை எதிர்கொள்ளும் கலையையும் சேர்த்தே கற்றுக்கொண்டார்.
- பலவித அனுபவங்களைப் பெற்ற மனு, பாரிஸ் ஒலிம்பிக்கில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது போலவே மூன்று பிரிவுகளில் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது. அதில் தனி நபர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவு என முதல் இரண்டு போட்டிகளிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்திருக்கிறார்.
- இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்கிற மகத்தான சாதனையையும் மனு படைத்துள்ளார். இன்று (ஆக.2) நடைபெற உள்ள 25 மீ. ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் சாதிப்பார் என எதிர்பாக்கலாம்!
அறிமுகத்தில் அமர்க்களம்!
- டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியத் துப்பாக்கிச் சுடும் அணி ஏமாற்றிய நிலையில், பாரிஸில் பதக்க வேட்டையில் முந்திக்கொண்டு செல்கிறது. மூன்றாவது வெண்கலப் பதக்கம் ஸ்வப்னில் குசாலே மூலம் கிடைத்திருக்கிறது. ஆடவர் 50 மீ. ஏர் ரைபிள் (3 பொசிஷன்) பிரிவில் 451.4 புள்ளிகள் குவித்து பதக்கத்தை இவர் உறுதிசெய்தார்.
- இப்பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் இவர். 2012 முதல் இவர் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும் ஒலிம்பிக்கில் அறிமுகமாக 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனியைப் போல இவரும் ரயில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றியவர்.
கிங் ஆன சிங்!
- இந்த முறை தடகளத்துக்குப் பிறகு அதிக வீரர், வீராங்கனைகள் (21 பேர்) துப்பாக்கிச் சுடுதலில்தான் பங்கேற்கின்றனர். இந்தியாவுக்கு எப்போதுமே பதக்க வாய்ப்புள்ள ஒரு விளையாட்டு இது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை மனு பாகர் வென்றிருந்தாலும், அதில் ஒன்று 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வென்றது.
- ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதிச் சுற்றோடு வெளியேறிய சரப்ஜோத் சிங், கலப்புப் பிரிவில் மனு பாக்கருடன் இணைந்து களமிறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 12 வயதிலேயே துப்பாக்கியைப் பிடிக்கத் தொடங்கிய சரப்ஜோத் சிங், 2019லிருந்து சர்வதேசத் தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
- 2019இல் ஜூனியர் உலகக் கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முத்திரைப் பதித்து திரும்பிப் பார்க்க வைத்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் அணியில் தங்கமும், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் வெள்ளியும் வென்று அசத்தியவர். தொடர்ந்து 2023 உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றவர். படிப்படியாக முன்னேறி வரும் சரப்ஜோத் சிங், ஒலிம்பிக்கிலும் முத்திரை பதித்து அசத்தியிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)