TNPSC Thervupettagam

மனு ஸ்மிருதி: கவலை தரும் பல்கலைக்கழகம்!

July 21 , 2024 175 days 187 0
  • டெல்லி பல்கலைக்கழக சட்ட பாடப்பிரிவில் இளங்கலை மாணவர்கள் பயில்வதற்கான பாடத்திட்டத்தில், ‘மனுஸ்மிருதி’ சேர்க்கப்படக் கூடாது என்று துணைவேந்தர் தடைசெய்துவிட்டார். இதற்காக, அவசர காலத்தில் பயன்படுத்தக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அது மட்டுமல்ல, இது தொடர்பான உத்தேச யோசனை பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவையில் (அகடமிக் கவுன்சில்) விவாதத்துக்குச் செல்வதைக்கூட தடுத்துவிட்டார். அதைக் காணொலி அறிக்கையாகவும் வெளியிட்டார்.
  • ‘மனுஸ்மிருதி’ என்பது இந்துக்களுக்கான நடைமுறை சட்டத் தொகுப்பு. அது சாதிகளுக்கு இடையிலும், ஆண் – பெண் பால்களுக்கு இடையிலும் மிகுந்த பாகுபாடு காட்டுவதற்காக இன்றளவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது தொடர்பான முடிவை டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தானாகவே எடுத்தாரா அல்லது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உத்தரவின்பேரில் எடுத்தாரா என்பது தெளிவில்லை. ஆனால், அப்படிச் சந்தேகப்படக் காரணம், தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக வெளியிட்ட ஓர் அறிக்கைதான்.
  • மனுஸ்மிருதியை சட்ட மாணவர்கள் படிப்பதற்காக பாடநூலில் சேர்க்கப்பட வேண்டும் என்று சிலர் கூறிய யோசனையால் சர்ச்சை உருவாகியுள்ளது. ‘சர்ச்சைக்குரிய எதையும்’ பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதான் திட்டவட்டமாக மறுத்தார். “இந்த உத்தேச யோசனை, கல்விப் பேரவையின் பரிசீலனைக்குச் செல்வதற்கு முன்னதாகவே கைவிடப்பட்டுவிட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்துள்ளார்” என்றும் பிரதான் குறிப்பிட்டார்.
  • “சமுதாயத்தில் ஒரு பிரிவினரின் மனதைப் புண்படுத்தும் எதையும் மாணவர்களுக்கு கற்றுத்தர பல்கலைக்கழகம் விரும்பவில்லை” என்று துணைவேந்தர் மேற்கொண்டு விளக்கியிருக்கிறார்.
  • மனுஸ்மிருதியைப் பாடமாக வைக்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள், அது சட்டக் கல்வித் துறையின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது, அது தொடர்பாக பூர்வாங்கமாக விவாதங்களும் நடந்தன. பிறகு கல்விப் பேரவையின் நிலைக்குழு விவாதிக்க அனுப்பப்பட்டது. அந்த நிலையில், யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

கட்டுரையின் நோக்கம்

  • மனுஸ்மிருதியைச் சட்ட மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இந்தக் கட்டுரை ஆதரிக்கவும் இல்லை, சேர்க்கக் கூடாது என்று எதிர்க்கவும் இல்லை. இந்தக் கட்டுரையின் நோக்கமெல்லாம், ஒரு சர்வகலா சாலையில் மாணவர்கள் படிப்பதற்கான பாடங்கள் எப்படி, யாரால், எதற்காக தேர்வுசெய்யப்படுகின்றன அல்லது நிராகரிக்கப்படுகின்றன என்ற நடைமுறை சரிதானா என்பது குறித்துத்தான்.
  • மனுஸ்மிருதியைப் பாடமாக வைக்கலாம் என்ற சிலரின் யோசனை எப்படிக் கவலையைத் தருகிறதோ அப்படித்தான் அதை நிராகரிக்கும் முடிவு எடுக்கப்பட்ட விதமும் கவலை தருகிறது.
  • டெல்லி பல்கலைக்கழகத்தில் தங்களுக்கான பாடத்திட்டங்களையும் படிப்பதற்கான நூல்களையும் தேர்வுசெய்துகொள்ளும் முழு அதிகாரம் அந்தந்தத் துறைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றின் யோசனைகள் அனைத்தும், அனைத்து பாடப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர்கள் பேரவைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. பிறகு அது பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவையின் நிலைக்குழு பரிசீலனைக்குச் செல்கிறது. இந்த நிலைக்குழுவிலும் எல்லா பாடப்பிரிவுகளையும் சேர்ந்த பேராசிரியர்கள் பிரதிநிதிகளாக இடம்பெறுவர்.
  • நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகே, கல்வி பேரவைக்குழு இந்த யோசனைகளை விவாதித்து ஏற்கும் அல்லது வேண்டாம் என்று நிராகரிக்கும்.
  • மனுஸ்மிருதி பாட விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரும் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரும் தலையிட்டு நடைமுறையை சீர்குலைத்துள்ளனர், அல்லது நடைமுறையை அப்பட்டமாக மீறியுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசு தலையிட விதிமுறைகளே இல்லை, அதிலும் எதைச் சொல்லித்தருவது என்பதைத் தீர்மானிக்க அரசுக்கு உரிமையில்லை. “இந்த விவகாரத்தில் என்னால் தலையிட முடியாது, பல்கலைக்கழகம்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றுதான் அமைச்சர் பிரதான் சொல்லியிருக்க வேண்டும்.

சுயாதிகாரத்தில் தலையீடா?

  • பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நிர்வாகம் தொடர்பாக அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டுள்ளன. விதிவிலக்கான தருணங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய ‘அவசரகால’ அதிகாரத்தை இப்படிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக எடுத்திருப்பது அந்தத் துறையின் சுயாதிகாரத்தில் – செயல்பாட்டில் தலையிடுவதாகும்.
  • சட்டத் துறை பேராசிரியர்கள் மனுஸ்மிருதியை ஏன் பாடப்புத்தகத்தில் சேர்க்க விரும்பினார்கள், அதை ஏன் நிலைக்குழு ஏற்றது என்பதையும் நாம் அறிய வேண்டும். அந்த யோசனையை சட்டக் கல்வித் துறையில் அல்லது நிலைக்குழுவில் எவருமே முதலில் ஏன் எதிர்க்கவில்லை என்பதும் வியப்பை அளிக்கிறது. இவ்வாறு நடைபெறும் ஆலோசனைகள், விவாதங்கள் ஏதேனும் நடவடிக்கைக் குறிப்புகளில் இடம்பெறுவது வழக்கமா? விவாதம் ஏதுமின்றி இது யோசனையாகக் கூறப்பட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டதா?
  • சட்டத் துறையில் நீண்ட காலமாக பணிபுரிந்துவரும் நிபுணர்களான பேராசிரியர்களும் உதவிப் பேராசிரியர்களும் தங்களுடைய மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் உரிமை பெற்றவர்கள். எந்தெந்த நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும், எந்தெந்த ஆய்வுக் கட்டுரைகள் அவர்களுக்குப் பயன்படும் என்பதையெல்லாம் முடிவுசெய்யும் கடமையும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. அவர்களுடைய யோசனைகளைப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவைதான் இறுதிசெய்ய வேண்டும். மனுஸ்மிருதி பாட விவகாரத்தில் கல்விப் பேரவையின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. வெளியில் எழுந்த எதிர்க்குரல், விவாதிக்கப்பட்டிருந்தால் கல்விப் பேரவைக்குள்ளும் நிச்சயம் எழுந்திருக்கும்.
  • இந்தப் கல்விப் பேரவையின் தலைவர் என்ற வகையில் கூட்டத்தில் துணைவேந்தரும் பங்கு கொண்டிருக்கலாம். இப்படிப் பாடமாக சேர்ப்பது கூடாது என்று அவர் கருதினால் அதற்கான காரணங்களை அந்த விவாதத்தின்போது அவரும் தெரிவித்திருக்கலாம்.
  • ஆனால், துணைவேந்தரின் அறிக்கையைப் படிக்கும்போது, இந்த விவகாரத்தில் அவருக்கென்று எந்தக் கருத்தும் இருப்பதைப் போலத் தெரியவில்லை. சர்ச்சையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கல்வி என்பதன் அடிப்படை நோக்கமே சர்ச்சைகளை ஏற்படுத்துவது, கேள்விகளைக் கேட்க வைப்பதுதான். ஒரு பாட புத்தகமோ, கருத்தோ சமூகத்தின் ஒரு பிரிவினருடைய மனதைப் புண்படுத்துமோ என்றெல்லாம் பார்க்கக் கூடாது.

முன்பொரு சம்பவம்

  • இந்திய பல்கலைக்கழகங்களில் இப்படி வெளித் தலையீடுகள் ஏற்படுவதை தவறாகவோ தீங்காகவோ பார்க்கும் வழக்கமே இல்லை. முன்னுதாரணமாக, 2011இல் ஏ.கே.ராமானுஜத்தின், ‘மூன்னூறு ராமாயணங்கள்’ என்ற கட்டுரையை வரலாற்றுத் துறையின் இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுடைய பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சங்க பரிவாரங்கள் பெரிய எதிர்ப்பைக் கிளப்பின. டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர்கூட தாக்கப்பட்டார்.
  • இதையடுத்து ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு ஒன்று இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ராமானுஜத்தின் கட்டுரை இடம்பெற வேண்டுமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்க நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘கட்டுரை இடம்பெறலாம், தவறில்லை’ என்று நிபுணர் குழு கூறிவிட்டது. ஆனால், பிறகு நடந்த கல்விப் பேரவை கூட்டத்தில், “நிபுணர்கள் குழு கூறியிருந்தாலும் சர்ச்சையைத் தவிர்க்க அந்தக் கட்டுரையை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடலாம்” என்று துணைவேந்தர் கூறினார். அந்த விவகாரத்தில் குறைந்தபட்சம், ஏற்கக்கூடிய ஒரு நடைமுறையாவது பின்பற்றப்பட்டது. ராமானுஜன் கட்டுரை விவகாரத்தில், “எங்களால் தலையிட முடியாது” என்ற நீதிமன்றம் கூறியிருக்கலாம். ஆனால், அது முடிவெடுக்கும் பொறுப்பை, பல்கலைக்கழகத்தின் மீதே திணித்துவிட்டது.
  • இந்த விவகாரம் உணர்த்தும் இன்னொரு பாடம் என்னவென்றால் பெரும்பாலான பல்கலைக்கழக பேராசிரியர்கள், தேவையின்றி சர்ச்சையிலும் விவகாரத்திலும் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை. இப்படியிருந்தால் மாணவர்களுடைய அறிவு எப்படி விரிவடையும்?

அனுமதி என்பது அங்கீகாரம் அல்ல!

  • ஒரு புத்தகத்தையோ, கட்டுரையையோ படிப்பதற்கு அனுமதிப்பதால் அதை அந்தப் பல்கலைக்கழகம் அங்கீகரிப்பதாகவோ, ஏற்பதாகவோ பொருள் அல்ல. அதைக் கவனமாகப் படித்து அதில் உள்ள குறைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் பாடமாக வைக்க வேண்டும்; கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை (கம்யூனிஸ்ட் மேனிஃபஸ்டோ) பாடமாக வைத்தால், கம்யூனிசத்தை ஆதரிப்பதாக ஆகிவிடாது. ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பாடமாக இருந்தால் காந்தியைப் புகழ்வதோ அவரைப் பின்பற்ற வேண்டும் என்று மாணவர்களை ஊக்குவிப்பதோ ஆகாது. மனுஸ்மிருதி தொடர்பாகவும் அதே அணுகுமுறைதான் இருந்திருக்க வேண்டும்.
  • மனுஸ்மிருதியைப் பாடமாக படிப்பது குறித்து துணைவேந்தர் ஒரு கருத்தையும் சொல்லவில்லை. மனுஸ்மிருதி குறித்து பாபா சாஹேப் அம்பேத்கர் எழுதிய கண்டன ஆய்வுக் கட்டுரையையும் உடன் சேர்த்து பாடமாக வைக்க வேண்டும் என்று கூறப்பட்டதா? அல்லது அதைப் பற்றி ஆய்வுசெய்யாமல், புராதன இந்தியாவின் கருத்து என்பதால் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கில் பாடமாக வைக்கப்பட்டதா?
  • இவையெல்லாம் கல்வி வட்டாரத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால், கல்வி அமைச்சரும் துணைவேந்தரும் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி மிக முக்கியமான விவாதத்தைத் தடுத்துவிட்டார்கள். பல்கலைக்கழகம் நல்லதொரு விவாதக் களத்தையும் வாய்ப்பையும் இழந்துவிட்டது.

கொஞ்சம் துணிச்சலும் வேண்டும்!

  • பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறவர்களுக்கு அதற்கான தலைமைத்துவப் பண்பு இருக்கிறதா என்பதும் இதைப் போன்ற தருணங்களில் தெரிந்துவிடுகிறது. 2011இல் எடுக்கப்பட்ட முடிவைப் போலத்தான் இப்போதும் என்னும்போது, கல்வித் துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் - அறிவாளிகளுக்கு இருக்க வேண்டிய சுதந்திரமும் துணிச்சலும் இல்லாதவர்களாக இருப்பது அம்பலமாகிறது.
  • கருத்து வேறுபாடுகளுக்காக மனிதர்கள் நேருக்கு நேர் சண்டையிடுவதைவிட, பேசித் தீர்ப்பது விரும்பத்தக்கது. இப்படிப்பட்ட கருத்து மோதல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தங்களுக்கில்லை என்று அமைச்சரும் துணைவேந்தரும் நினைக்கின்றனர். எனவேதான், போர் தொடங்கும் முன்னதாகவே களத்தைவிட்டு ஓடிவிட்டனர். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டனர், ஆனால் பல்கலைக்கழகத்தின் சுயாட்சியும் பெருமையும் சேதம் அடைந்துவிட்டது.

நன்றி: அருஞ்சொல் (21 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்