TNPSC Thervupettagam

மனு ஸ்ம்ருதியில் பெண்கள்

November 4 , 2020 1362 days 679 0
  • 'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே' என்கிறது நன்னூல். பாரத தேசம் முழுவதும் தர்மம் பற்றி எத்தனையோ நூல்கள் ஒவ்வொரு காலத்திலும் எழுந்துள்ளன.
  • என்று எழுதப்பட்டது என்றே முடிவுக்கு வர இயலாத, ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்படும் நூல் இன்றும் அரசியலாக பார்க்கப்படுவதும் பேசப்படுவதும் சாதாரணமல்ல.
  •  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு நூல் ஏன் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? விமர்சனங்களுக்கு உள்ளாகிறது? இந்த விமர்சனங்களில் உண்மை இருக்கிறதா?
  • பெண்களை இழிவு படுத்தும் நூல் மனு என்று அரசியல் உலகில் ஒரு சாரார் விமர்சனம் செய்வதோடு அதனை சமயம் சார்ந்தும் எதிர்மறையாகப் பதிவு செய்கின்றனர். மனு ஸ்ம்ருதியை படித்தால் உண்மை வேறு விதமாய் இருப்பதை அறிய முடியும்.
  • "கணவன், மனைவி இருவரும் இறுதி வரை கற்பு நிலை பிறழாது இருக்க வேண்டும். இதுவே ஆண் பெண்ணுக்குரிய நலம் என்று அறிக' (9:101). இது, "கற்பு நெறி என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்' என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகின்றது.
  • இருவருக்கும் கற்பு நிலையைப் பொதுவில் வைத்து சமத்துவம் பேசும் நூலை, "பெண்ணை இழிவு படுத்தும் நூல்' என்பது சரிதானா?
  •  திருமணத்தில் வர்ணக்கலப்பை ஆதரிக்கிறது. சட்டப்படி அதற்கு அங்கீகாரம் உண்டு என்கிறது. "செம்புலப் பெயல் நீர் போல' என்ற சங்க இலக்கியம் போல "எந்தப் பெண்ணாயினும் மணம் முடிந்து இல்லறம் நடத்தும் பொழுது தான் சேர்ந்த இடத்தின் இயல்பைப் பெற்று மிளிர்கிறாள்' (9:22) என்று காதல் மணத்தை ஆதரிக்கிறது.
  • மணமின்றி உறவு கொள்வதைப் பாவம் என்கிறது. இதிலே இழிவான தன்மை என்று என்ன இருக்கிறது?
  •  ஒரு பெண்ணை எத்தகைய ஆணுக்கு மணம் செய்விக்கக் கூடாது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. "ஒரு பெண் கடைசி வரை கன்னியாகவே இருந்து விட்டாலும் குற்றமில்லை; குணமில்லாத ஆடவனுக்கு மட்டும் பெண்ணைக் கொடுக்கக் கூடாது (9: 89).
  • "இழி நடத்தைப் பரத்தையர் நட்பு நல்ல குணமின்மை. அதனை உடையவனாயினும் கற்பினளான பெண், தன் கணவனை தெய்வமாகப் பேணுக' (5:154). இது பதிவிரதையான பெண்ணிடம் வேண்டுகோள் வைப்பதாக அமைந்துள்ளது.
  • "ஆணிடம், தவறான வழியில் சென்றவளையும் அவளது கணவன் ஏற்று அவளுடன் கூடி வாழ்ந்து அவளைக் காக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொள்கிறது (9:20).
  •  குடும்ப அமைப்பில் பிளவு ஏற்படாமல் தவறு செய்த துணையை மன்னித்து ஏற்றுக்கொள்வது என்றுதான் இதனைப் பார்க்க வேண்டும்.
  • இருவரையும் சமமாகவே மனு சொல்கிறது என்பதற்கு இதற்கு மேலும் சான்று தேவையா?
  • அடுத்து, பெண்கள் பாதுகாப்பும், சுதந்திரமும் அற்று வாழ்ந்த அவலநிலை இருந்தது என்ற குற்றச்சாட்டு. இது ஆண்களின் கடமைகளை விவரிக்கும் இடத்தில் வருகிறது.
  • "மகளைப் பேணிக் காப்பது தந்தையின் கடமை. மனைவியைக் குறையின்றிக் காப்பது கணவனின் தர்மம். கணவனை இழந்த தன் தாயை மகன் போற்றிப் பாதுகாக்க வேண்டும், அப்படி பெற்றவளைக் காக்காத பிள்ளை நரகமே அடைவான்' - இதனை ஆண் பெண்ணைப் பாதுகாப்பது என்று புரிந்து கொள்ளாமல், பெண்ணை அடிமையாய் தனக்கு கீழ் வைத்துக்கொள்வது என்று புரிந்து கொண்டால், அது புரிந்துகொண்டோரின் அறியாமை, மனநிலை இவற்றைக் காட்டுமே அன்றி மனுவின் குற்றமாகுமா?
  • "பெண்களைக் காப்பது ஆணின் முதன்மையான தர்மம். அவன் அங்கஹீனம் உள்ளவனோ தரித்திரனோ ஆனாலும் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் (9:6). மனைவியால்தான் வம்சம் விருத்தி அடைகிறது. அவளின் நற்குணங்களால்தான் வம்சத்தின் நற்பெயர் நிலைநாட்டப்படுகிறது. மனைவி உடனிருந்து தர்மத்தை நடத்துவதால்தான் ஒருவன் மேன்மை அடைகிறான்' (9:7).
  •  "செல்வத்தை சேர்த்து வைக்கவும், தேவையான பொழுது செலவிடவும் அவளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பத்தில் மனைவி தான் பிரதானமானவள். அவளே செல்வத்தைக் கையாளும் உரிமை பெற்றவளாக இருக்க வேண்டும்' (9:11) - இப்படியான கருத்துகள் பெண்ணுக்கு எதிரானவையா?
  • பொங்கல் சீர் என்று முதுமையிலும் கூட உடன்பிறந்தவளுக்குத் தருவது தமிழர் மரபு. மணமுடித்துக் கொடுத்த பெண் மனம் நொந்தோ, கண்ணீர் விட்டோ சொல்லும் சொல் குடும்பத்திற்கு ஆகாது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மனுவின் மூன்றாம் அத்தியாயத்தில் இது பேசப்படுகிறது.
  •  "ஐஸ்வர்யத்தை விரும்புவோர் உத்ஸவம், விவாகம் முதலான சுப காலங்களிலும் உடன்பிறந்த சகோதரிகளுக்கு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் கொடுத்து சந்தோஷப் படுத்த வேண்டும்'. " உடன்பிறந்த பெண்ணொருத்திக்கு உடையும் அணியும் இல்லாது அவளை வருத்தமடையச் செய்யும் குலம் நசியும்'. "தன்னை நன்றாய் நடத்தாத பிறந்தகத்தை மனம் நொந்து ஒரு பெண் எண்ணுவாளாயின் அக்குலத்திற்கு அது சாபமாய் சேரும்'.
  • வேள்வி போன்ற தெய்வ காரியங்களை மனைவியின்றிச் செய்ய இயலாது. விருந்தோம்பல் முதல் கூடி சுகித்தல் வரை மனைவியே இப்பிறவியின் அனைத்து இன்பங்களுக்கும் ஆதாரமாகிறாள். தென்புலத்தாருக்கான கடன்களை ஆற்றுவதும் அவளின்றி ஆகாது. இதனால் குலத்தின் முன்னோர்கள் மறுமை இன்பத்தை அடைவதற்கும் அவளே காரணமாகிறாள்.
  • இப்படி, குடும்பத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருபவளாய் இருப்பதே மனைவியின் மாண்பு என்கிறது மனு தர்மம்.
  •  குடும்பத்தினர், அவளை எப்படி நடத்த வேண்டும்? இதோ மனுவின் கூற்று. "மூத்த சகோதரனின் மனைவி குரு பத்தினிக்கு இணையானவள். அவளை அன்றாடம் விழுந்து வணங்க வேண்டும். இளைய சகோதரனின் மனையாள் மருமகளுக்கு இணையானவள்'(9:57).
  • "ஈன்று புரந்து விருந்தோம்பி இல்லம் பேணி குடும்பம் காத்தல் மாதரால் மட்டுமே இயலும். ஆதலால் நாம் கடைத்தேற அவளைப் போற்றுவோம்' (9:27). இந்த நம்பிக்கையா பெண்களுக்கு எதிரானது?
  • பெண்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் மனு எப்படி உறுதிப்படுத்துகிறது? முதலில் பொதுவில் பெண்களின் சிறப்பை சொல்கிறது. அடுத்து, பெண்களின் இயல்புகளை இரு வகையாகப் பிரித்து, தன்னைத்தானே காத்துக்கொள்ளும் மனவலிமை கொண்ட பெண்களின் மேன்மைகளை பெருமைப்படுத்துகிறது.
  •  "ஒரு பெண்ணை அடைத்து வைத்துக் காக்க முடியாது. அவள் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் தகைமை கொண்டவள்' (9:12). இவ்விடத்தில் "சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மாதர் நிறை காக்கும் காப்பே தலை " என்னும் குறள் நினைவுகூரத்தக்கது.
  • வலிமையற்ற சலன மனம் கொண்ட பெண்களின் இயல்புகளை விளக்கி, அவர்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இப்போதும் பாதுகாப்பது பற்றித் தான் கூறுகிறது. அடிமைப் படுத்துவது பற்றிப் பேசவில்லை.
  • அடிமைப்படுத்துவதோ அடைத்து வைப்பதோ உதவாது என்றே சொல்லப் பட்டிருக்கிறது. இதெல்லாம் பெண்களை இழிவு படுத்துவதாகுமா?
  • முதலில் பெண் தானே தன் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை கொண்டவள். அவளது சொத்தில் கணவனுக்கும் உரிமை இல்லை. அது அவளுக்கு மட்டுமே சொந்தம். அதை அவள் விருப்பம் போல நிர்வகிக்கும் உரிமை பெற்றவள் என்பதோடு அவள் சந்ததிகள் அவளுக்குப் பின் அதற்கு உரியவர்கள் என்று சொத்துரிமை பெற்றுள்ளதைப் பார்க்கிறோம். இதையெல்லாம் பெண்ணுக்கு விரோதமானது என்றா தள்ளப் போகிறோம்?
  • அடுத்து, பாதுகாப்பு விஷயங்களுக்கு வருவோம். எட்டாம் அத்தியாயத்தில், "பிறன்மனை விளைய முற்படுவோனின் உதடு மூக்கு முதலியவற்றைக் கொய்து அவனை ஊரை விட்டே விரட்ட வேண்டும்' (8:351). "மற்றவன் மனைவியை வன்புணர்வு செய்தவனை உயிர் போகும் வரை தண்டிக்க வேண்டும்' (8:358). "ஒரு பெண்ணைக் காப்பதற்காகக் கொலை செய்தாலும் அது அதர்மம் ஆகாது' (8:348).
  •  தன் குலத்தவளே ஆனாலும் விருப்பமில்லாத கன்னிப் பெண்ணை வன்புணர்வு செய்வோனை அவனது ஆண் குறியை அறுத்துக் கொல்ல வேண்டும்' (8:363). சிறுமிகள் பாதிக்கப்படும்போது தண்டனை இத்தனை கடுமையாக இருப்பதை, பெண்ணை அவமதிப்பது என்றா சொல்லப்போகிறோம்?
  •  "பெண்ணின் மர்ம ஸ்தானத்தைத் தீண்டி துன்புறுத்துவோனுடைய இரண்டு விரல்களை வெட்டி நூறு பணம் தண்டமும் விதிக்க வேண்டும்' (8:366). விரும்பி இணங்கும் பெண்ணை சேர்வோனுக்கு தண்டனை இல்லை.
  • பெண்ணின் விருப்பம் இந்த விஷயத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கூறும் நூலை பெண்ணுக்கு எதிரானது என்றா தள்ளுவது? பகுத்தறிவும், நாகரிகமும் வளர்ந்து விட்ட இன்றைக்குக்கூட, இந்த அளவுக்குப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டநடைமுறைகள் இருக்கின்றனவா?
  • "ஆணுக்கு சந்ததி இல்லாமல் மோக்ஷம் இல்லை' என்று சொல்லும் மனு, "பெண் சந்ததி அற்றவளாயினும் நேர்மையுடன் வாழ்ந்திருப்பாளாயின் மோக்ஷம் அடைகிறாள்' என்று நம்பிக்கையிலும் பெண்ணை ஒருபடி மேலே உயர்த்தியே பிடிக்கிறது.
  • காதலோடு ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் எல்லாக் காலத்திலும் மனித சமூகத்தின் விருப்பம். "ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் இணை பிரியாமல் இல்லறம் நடத்த வேண்டும்' (9 :102). "கணவனும் மனைவியும் அன்யோன்யமாக மரணம் வரை வாழ்வதே மேலான தர்மம்' (9:101) என்றும் கூறுகிறது.
  • "காமாலைக் கண்களுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள்' என்பதுபோல, நாம் பார்க்கும் பார்வையில் நமது மனமும் தரமும் வெளிப்படும். இதனால் "மனு ஸ்ம்ருதி' என்ற நூலுக்குக் களங்கமில்லை.

நன்றி : தினமணி (04-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்