TNPSC Thervupettagam

மனைவியின் மாண்பு

August 24 , 2019 1966 days 1125 0
  • அன்பு என்ற சொல்லின் முழுமையான பொருள்  மனைவி.  ஓர் ஆணுக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கும், மரியாதைக்கும் மனைவி காரணம்.
    அதிலும், பணிக்குச் சென்று குடும்பச் சுமையை தோளில் சுமக்கும் பெண்கள் உண்டு. உடலிலும், மனதிலும் வலிமை கொண்டு கணவனையும் கவனித்து குழந்தைகளிடமும் அக்கறை கொண்டு, பணியிலும் தன்னை அர்ப்பணித்து வாழ்நாளின் ஒவ்வொரு நிமிஷத்தையும் குடும்பத்தின் நலனுக்காக செலவிடுகிறார் மனைவி.
  • கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்தியபோது, உங்களுக்குப் பிடித்த ஏதாவது பத்து உறவு முறைகளை கரும்பலகையில் வந்து எழுதுங்கள் என்று மாணவர்களிடம் கூறினார். தந்தை, தாய்,  மகன், மகள், சகோதரன், மனைவி  என்று அத்தனை உறவு முறைகளையும் கரும்பலகையில் மாணவர் எழுதினார். 
  • தொடர்ந்து அதில் ஒவ்வொரு பெயராக அழிக்கச் சொன்னார் பேராசிரியர். ஒவ்வொரு உறவின் பெயரையும் அழித்துக் கொண்டே வந்தார் மாணவர்; இறுதியில் மகன், மகள், மனைவி ஆகியோரின் பெயர்கள் மட்டும் இருந்தன.  அனைவரும் அந்த மாணவர் அடுத்து யார் பெயரை அழிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர்.  வரிசையாக தந்தை, தாய், மகன், மகள் ஆகிய அனைவரையும் அந்த மாணவர் அழித்துவிட்டு மனைவியின் பெயரை மட்டும் அழிக்காமல் இருந்தார்.

உதாரணம்

  • ஏன் மனைவியின் பெயரை மட்டும் அழிக்கவில்லை என்று அந்த மாணவரிடம் பேராசிரியர் கேட்டார். முதுமை அடைந்த பிறகு, பெற்றோர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவர்; திருமணமானவுடன் கணவர் வீட்டுக்கு மகள் சென்று விடுவார்; திருமணமானவுடன் தன் மனைவியுடன் மகன் வாழச் சென்று விடுவார்; இறுதி வரை மனைவி மட்டுமே உடன் இருந்து கவனித்துக் கொள்வார்; அதனால்தான் அந்தப் பெயரை அழிக்கவில்லை என்றார் மாணவர்.
  • ஒவ்வொரு பெண்ணும் தனது பெற்றோரின் வீட்டில் இளவரசியாகத்தான் வாழ்கின்றனர்.  ஆனால், மணம் முடிந்த வீட்டில் மகாராணியாக வாழ்வதில்லை. திருமணமான சில நாள்களிலேயே தன் தந்தையின் முன்னெழுத்தை நீக்கிவிட்டு கணவனின் முன்னெழுத்தை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்ட நொடியிலேயே தியாகத்திற்கு தயாராகிறாள். அதன் பின்பு தாயாராகிறாள். காலப்போக்கில் அன்பு என்ற மழையில் கணவனையும், குழந்தைகளையும் நனைக்கிறாள். 
    சில நபர்கள் தான் எடுக்கும் முடிவு சரியானது; தனது மனைவி எடுக்கும் முடிவு தவறானது என்று கருதுகின்றனர்.

முடிவுகள் 

  • மனைவி எடுக்கும் முடிவுகள் தவறு என்று நினைத்தால், நம்மைத் தேர்ந்தெடுத்ததும் மனைவிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முடிவு சரியானது என்று நினைத்தால், மனைவியைத் தேர்ந்தெடுத்தது நாம்தான் என்பதை நினைக்க வேண்டும்.
  • புத்தர் ஞானம் பெற்றதும், தன் மனைவி, குழந்தையைப் பார்க்க வீட்டுக்குச் சென்றார்.  அவரது மனைவி யசோதரா  அவரைப் பார்த்து இவ்வாறு கேட்டார்: என்னை விட்டுப்போனதுகூடப் பரவாயில்லை; ஆனால், என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாமே;  நான் ஒன்றும் தடுத்திருக்க மாட்டேன்; நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனை காலமும் நோகடித்து விட்டது.  என்னை ஏன் காயப்படுத்தினீர்கள் என்றார்.

புத்தர்

  • அதற்கு புத்தர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, தான் பயந்தது தன்னை நினைத்துத்தான் என்றார். மனைவி, குழந்தைகள் முகம் பார்த்து உறுதி குலைந்து இங்கேயே தங்கி விடுவோமோ என்று பயந்ததால்தான் சொல்லாமல் சென்று விட்டேன் என்றார் புத்தர்.
    அடுத்து,  நீங்கள் இந்த அரண்மனையை விட்டுப் போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற முடியாதா என்று கேட்டார் யசோதரா. தாராளமாகக் கிடைத்திருக்கும்; அதை இங்கிருந்து செல்லும்போது  நான் அறிந்திருக்கவில்லை என்றார் புத்தர்.
    புத்தரைப் போற்றுவதுபோல நாம் யசோதராவைப் போற்றுவது இல்லை. புத்தரைப் போல யசோதரா சென்றிருந்தால் இந்த உலகம் பழித்திருக்கும். எல்லாவற்றையும் துறந்து தொல்லையில்லாமல் துறவியானார் புத்தர். 
  • எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு துயரை அனுபவித்து துறவியாய் வாழ்ந்தார் யசோதரா. அப்படிப்பட்ட மனவலிமை கொண்டவர்கள் பெண்கள்.  ஆண்களோடு பெண்களை ஒப்பிடும்போது கூடுதல் மனவலிமை கொண்டவர்கள் பெண்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
  • கணவனுக்கும் மனைவிக்கும் ஜாதக ரீதியாக பொருத்தங்கள் சரியாக இருந்தாலும், முக்கியமான பொருத்தம் மனப் பொருத்தம்தான்.  இருவருக்கும் இடையே நல்ல கருத்தொற்றுமை, அன்பு முதலானவை  மேம்படும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
    குடும்பங்களில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. பிரச்னை சிறிதாக இருக்கும்போதே அதைச் சரி செய்துவிட வேண்டும்.  வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் அவசரப்படக் கூடாது. இன்று பல திருமணங்கள் காவல் நிலையத்தில் நடைபெறுகின்றன, நீதிமன்றத்தில் விடை பெறுகின்றன.  காவல் நிலையமும், நீதிமன்றமும் கணவன்-மனைவி உறவைத் தீர்மானிப்பதற்கும், தீர்த்து வைப்பதற்கும் உரிய இடம் அல்ல.

வெளிப்படைத்தன்மை

  • கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வெளிப்படைத்தன்மை வேண்டும். மனைவிக்குத் தெரியாமல் கணவன் எந்த ஒரு செயலும் செய்யக் கூடாது.  மனைவியின் கருத்துகளுக்கும், உணர்வுகளுக்கும் கணவர் மதிப்பளிக்க வேண்டும். எப்போதும்  மனைவியை கெளரவமாக நடத்த வேண்டும். குழந்தைகள் முன்னிலையிலோ, மற்றவர்கள் முன்னிலையிலோ மனைவியை குறைவாகப் பேசக் கூடாது. 
  • மனைவியின் சிறப்பான செயல்பாடுகளை மனம் விட்டுப் பாராட்டுங்கள்; மற்றவர்கள் முன்பு பாராட்டுங்கள்.  சிறிய குறைகள் மனைவியிடம் இருந்தால் அதைப் பெரிதுபடுத்தாதீர்கள்.  அன்பாகச் சொல்லித் திருத்துங்கள். எத்தனை அலுவல்கள் இருந்தாலும் மனைவியிடம் மனம் விட்டுப் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.   
    மனைவியை இரண்டாவது தாயாகப் பார்ப்பவர்தான் சிறந்த கணவர்.  கணவரை முதல் குழந்தையாக பார்ப்பவர்தான் சிறந்த மனைவி.

நன்றி: தினமணி (24-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்