TNPSC Thervupettagam

மனோபாவ மாற்றமே எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும்

April 17 , 2022 842 days 432 0
  • காலநிலை மாற்றம் - இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய, ஒற்றைப் பிரச்சினை. 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் காலநிலை மாற்றத்தின் மிகச் சிறிய முன்னோட்டத்தை மட்டுமே இதுவரை நாம் பார்த்திருப்பதால், அதன் முழு வீச்சு குறித்து நமக்குத் தெரியவில்லை. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம் குறித்த தனது மதிப்பீட்டு அறிக்கைகளால் ஐ.பி.சி.சி. (காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) அறிவியல்ரீதியில் வெளிச்சம் பாய்ச்சிவருகிறது.
  • அந்த அமைப்பின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாகக் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான தனது பரிந்துரை அறிக்கையை மூன்றாவது ஆய்வுக் குழு கடந்த வாரம் வெளியிட்டது. காலநிலை மாற்றத்தைத் தடுத்துநிறுத்த முடியாவிட்டாலும், என்ன மாற்றங்களை மேற்கொண்டால் குறைந்தபட்சம் மட்டுப்படுத்தவாவது முடியும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-ல் பசுங்குடில் வாயுக்கள் 54% அதிகரித்திருந்தாலும், பசுங்குடில் வாயு வெளியீட்டின் வளர்ச்சி மட்டுப்பட்டுவருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தைத் தூண்டுவதற்கு அடிப்படைக் காரணமாகப் பசுங்குடில் வாயுக்கள் இருக்கின்றன. காடுகளை அழிப்பது, மின்சாரம் தயாரிக்க நிலக்கரியை எரிப்பது, வாகனப் போக்குவரத்துக்கான பெட்ரோலியப் பொருள் பயன்பாடு, தொழிற்சாலை இயந்திரங்கள் போன்ற மனிதச் செயல்பாடுகளால்தான் பசுங்குடில் வாயுக்கள் கட்டுமீறி அதிகரித்துவருகின்றன. பசுங்குடில் வாயுக்களில் முதன்மையானது கரியமில வாயு.
  • கார்பன் உமிழ்வைக் குறை: தொழிற்புரட்சிக்கு முந்தைய சராசரி ஆண்டு வெப்பநிலையைவிட அதிகமாகத் தற்போதைய சராசரி ஆண்டு வெப்பநிலை அதிகரித்துவருகிறது. இந்த உயர்வை நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
  • ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஐபிசிசி வெளியிட்ட ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் முதல் பகுதி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு மிக விரைவாகவே கடக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்தது. அப்படியானால் பாரிஸ் உடன்படிக்கை தோல்வியுற்றதாகிவிடும். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பிரச்சினைகளும் கைமீறிச் சென்றுவிடும். எனவே, பாரிஸ் உடன்படிக்கையின்படி கார்பன் உமிழ்வைக் குறைக்க நாடுகள் அளித்துள்ள வாக்குறுதிகள் போதாது என்பது இதிலிருந்து தெளிவாகிவிட்டது.
  • நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவையே கரியமில வாயு அதிகம் உமிழப்பட அடிப்படைக் காரணம். அப்படியானால், வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டும், ஒருவேளை கார்பன் உமிழ்வு ஓரளவு மட்டும் கையை மீறிச் சென்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஐபிசிசி மூன்றாவது ஆய்வுக் குழு கூறியுள்ளது.
  • 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பு தற்காலிகமாகக் கடக்கப்பட்டால், வளிமண்டலத்தில் கரியமில வாயுவைக் கிரகிக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். அதே நேரம் 2030-க்குள் உலகப் பசுங்குடில் வாயு வெளியீட்டை 43% குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இதே வகையில் 2050-ம் ஆண்டுக்குள் நிலக்கரி 95%, கச்சா எண்ணெய் 60%, இயற்கை எரிவாயு 45% என்கிற வகையில் பயன்பாடுகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பெட்ரோலியப் பொருட்களுக்கு விடைகொடு: காலநிலை மாற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தற்போது கிடைத்துவரும் வசதிகளைக் குறைத்துவிடுமோ அல்லது தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுமோ என்கிற சந்தேகத்தைப் பல நாட்டு அரசுகளும் தொழில் துறையினரும் முன்வைத்துவருகின்றனர். பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கும் வரியைக் கொண்டே பல நாட்டு அரசுகள் இயங்கிவருகின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களை மையமிட்டு உலகம் இயங்கிவருவது ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆபத்து என்பதை ஐபிசிசி மூன்றாவது ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
  • அதற்குப் பதிலாகக் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் முதலீடு செய்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதால் நீண்ட காலத்தில் கிடைக்கும் பலன்கள், அதற்காகச் செய்யப்படும் தொடக்க காலச் செலவுகளைவிட மேம்பட்டதாகவும் இருக்கும்.
  • காலநிலை மாற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு, சராசரி ஆண்டு வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் தடுத்துநிறுத்துவது எனும் இலக்கை அடைய, பல அமைப்புகளைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் உருமாற்றங்கள் தேவை. ஒவ்வொரு துறையிலும் கார்பன் உமிழ்வை முற்றிலும் தவிர்த்த அல்லது மிகக் குறைந்த அளவு கார்பனை வெளியிடக்கூடிய நடைமுறைகளை வளர்த்தெடுத்தாக வேண்டும். இதற்கு, கட்டுப்படியாகக்கூடிய செலவில் ஏராளமான தீர்வுகள் உள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
  • 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, குறைந்த அளவு கார்பனை உமிழும் தொழில்நுட்பங்களுக்கான செலவு தொடர்ச்சியாகக் குறைந்துவந்துள்ளது. சூரிய மின்னாற்றல் உற்பத்திச் செலவு 85 சதவீதமும், காற்றாலை மின்சார உற்பத்திச் செலவு 55 சதவீதமும், லித்தியம் அயன் மின்கலங்களின் விலை 85 சதவீதமும் குறைந்திருக்கிறது.
  • சூரிய மின்னாற்றல், காற்றாலை மின்சாரம், நகர்ப்புறப் போக்குவரத்து வசதிகளை மின்மயமாக்குவது, நகர்ப்புறப் பசுமைக் கட்டுமானங்களை அதிகரிப்பது, மின்னாற்றலைத் திறம்படப் பயன்படுத்துவது, காட்டுப் பரப்பை அதிகரிப்பது, பயிர்-புல்வெளிகளை மேம்பட்ட வகையில் நிர்வகிப்பது, உணவு வீணாவதைக் குறைப்பது – தடுப்பது போன்றவை சாத்தியப்படக்கூடிய மாற்றங்களே. இவற்றில் பெரும்பாலானவை செலவு குறைவானவை. மக்களால் பரவலாக ஆதரிக்கப்படக்கூடியவையும்கூட. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதில் இந்தச் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கக்கூடியவையாக உள்ளன என்று தற்போதைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • தேவை மனோபாவ மாற்றம்: இவை மட்டுமல்லாமல் தனிநபர்களாக, குடும்பங்களாக, அலுவலகங்களில், மக்கள் கூடுமிடங்களில் முன்னெடுக்கப்படக்கூடிய மாற்றங்களும் உள்ளன. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அடிப்படைப் பழக்கவழக்க மாற்றங்கள் பெரும் பங்களிக்கும்.
  • தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவை அதிகம் உட்கொள்வது, எரிசக்தியைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக நடந்துசெல்வது, சைக்கிள் பயணம் போன்றவையும் பயனளிக்கும். இந்த மாற்றங்களை ஒருசிலர் மட்டும் மேற்கொள்வதால் பயனில்லை. அதே நேரம், பெருமளவு மக்கள் மேற்கொண்டால் 2050-ல் மக்களின் நேரடிப் பயன்பாட்டுப் பிரிவுகள் சார்ந்து 40-70 சதவீதப் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
  • இது போன்ற மாற்றங்களுடன், காலநிலை மாற்றத்துக்கு உலகம் தகவமைத்துக்கொள்வதற்கான அடிப்படைத் தேவை, பரவலான மக்களிடையே மனோபாவ மாற்றம். நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும் அமெரிக்க வாழ்க்கை சார்ந்த கனவுகளையும் சொகுசு வாழ்க்கைக் கனவுகளையும் இனிமேலும் பழையபடியே தொடர முடியாது. உலகின் இருப்புக்கும், மனித வாழ்க்கைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்தச் செயல்பாடுகளை அவர்கள் கைவிடத் தொடங்க வேண்டும். எப்படி ஆயிரம் மைல்களைக் கடக்க முதலடியை உறுதியாக எடுத்துவைத்தாக வேண்டுமோ, அதுபோல் உலகைக் காப்பதற்கான ஒட்டுமொத்த மாற்றம் என்பது இன்றைக்கு சொகுசு வசதிகளை அனுபவித்துவரும் ஒவ்வொரு தனிநபரிடமும் இருந்தே தொடங்கியாக வேண்டும்.

நன்றி: தி இந்து (17 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்