- இன்றைய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து பல கோயில்கள் அரசு செலவில் கட்டப்பட்டவை. ஆயினும் பொதுமக்களின் பங்களிப்பும் உண்டென்பது கல்வெட்டுக்களின் கூற்று.
ஆலயங்கள் தந்த பலன்கள்
- கோயில்களில் அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு என அனைத்தும் மன்னர் - மக்கள் கொடையால் சுடரொளி பரப்பின. அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கைப் பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றை, கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களின் ஆடு மேய்ப்போரிடம் கொடுத்து, பதிலாக நாள்தோறும் ஒரு ஆழாக்கு நெய் பெற்றனர்.
- இந்த விகிதத்தில், ஆயிரக்கணக்கான தீபங்களுக்காக விடப்பட்ட ஆடுகளும், அவற்றின் மேய்ப்பரும் பயனடைந்தனர். இந்தத் தீபங்களை ஏற்றும் பணி மேற்கொண்டோரின் வாழ்வாதாரம் கோயிலின் கொடை வழி வந்ததே.
- கோயிலுக்கு வரும் நெய், நெல், பழம், காய்கறி, பூமாலை, அபிஷேகப் பொருள்களை அளக்கும் - எண்ணும் பணியினாலும் எண்ணற்றோர் பலன் பெற்றனர். நெல்லைக் குத்தவும், தரம் பிரிக்கவும் நூற்றுக்கணக்கானோர் தேவைப்பட்டனர்.
- கோயில் நந்தவனங்களைப் பராமரிக்க, பூக்களைப் பறிக்க, மலர் மாலைகளைத் தொடுக்க எனப் பலரும் செயல்பட்டனர். தினமும் ஆறு வேளை பூஜைகள் நடந்தமையால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கோயில் தானத்தால் பலன்பெற்றன.
வேலைவாய்ப்பு
- கோயில் மூர்த்திகள், கொடிக் கம்பங்களுக்கான துணியைப் பற்பல குடும்பங்கள் நெய்தன. பொற்கொல்லர், கொல்லர், தச்சர், தையல்காரர், ஆடையில் முத்துமணி உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களைப் பதிப்பவர், துப்புரவுப் பணி செய்பவர், காவல் காப்போர் என ஒரு சமுதாயமே பணியாற்றி, பயன் அளித்தும் பெற்றும் வந்தது. கோயில் நிலங்களில் வேளாண்மை நடந்தது.
- தானங்களை நிர்வகிப்பவர், கோயிலை அழகுபடுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், பாட்டுப் பாடுபவர், நடனமாடுபவர் எனக் கலைஞர்கள் பலரும் பணியாற்றினர். கோயில்களின் நாற்புற வாசல்களிலும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- இதில் உள்ள பானைகளில் எந்நேரமும் தண்ணீரை நிரப்பி வைக்கவும், அருந்துவதற்கு எடுத்துக் கொடுக்கும் பணிகளிலும் பலர் அமர்த்தப்பட்டனர். இந்தப் பணிகள் அனைத்தும் செய்பவர்களைக் கண்காணிக்க மேற்பார்வையாளர்களும் உண்டு. பெரிய அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பினைத் தந்த அமைப்பாக அன்றைய கோயில்கள் இருந்துள்ளன.
- தானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றைக் கிராம சபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடன் உதவி செய்து, நவீன கால வங்கிகள் போல் செயல்பட்டன கோயில்கள். இயற்கைச் சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்வுக்காகவும் கோயில் சொத்துகள் பயன்பட்டன.
பழங்கால நடைமுறைக்கு மாறலாம்
- கோயில்களின் பரந்த இடம் கல்வி நிலையங்களாயின. இவை பாகூர், திருபுவனி, எண்ணாயிரம், திருமுக்கூடல், திருவாவடுதுறை மற்றும் திருவற்றியூர் ஆகிய ஆறு இடங்களில் உயர் கல்விக்கூடங்கள் இருந்ததாகவும், அவற்றின் மாணவர், ஆசிரியர், இவர்களது ஊதிய, உதவித்தொகை குறித்தும் கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
- விழாக் காலங்களில் கோயில்கள் நாடகம், நடனம், பாட்டு எனப் பயனுள்ள பொழுதுபோக்கிடங்களாகவும், கலைகளை வளர்க்கும் கூடங்களாகவும் செயல் பட்டன. இல்லாதோருக்கு உணவும், உறைவிடமும் அளிக்கப்பட்டன. வெளியூர் பயணிகளுக்குத் தங்கவும் இடம் கிடைத்தது.
- அக்காலங்களில், கோயில்களின் சொத்துக் களையும் வரவு - செலவுகளையும் நிர்வாகம் செய்தோர், வேறு பல ஊர்களையும் குடியிருப்பு களையும் சேர்ந்தவர்களே. இவர்களுடன் கோயில் பணிகளைச் செய்பவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
- ஊழலைத் தடுப்பதற்காகவே கோயில் பணியாளர்களையும், கணக்கு மேற்பார்வையாளர்களையும் சோழர்கள் தனித்தனியே வைத்துள்ளனர். தற்போது கோயில் நிர்வாகம் அரசிடம் இருக்க வேண்டுமா... பக்தர்களிடம் இருக்க வேண்டுமா என்னும் விவாதம் நடக்கிறது. அதைத் தவிர்த்து, கோயில்களில் வேலைவாய்ப்பை அளித்த பழங்கால நடைமுறைக்கு முயற்சிக்கலாமே!
நன்றி: இந்து தமிழ் திசை (17 - 10 – 2023)