TNPSC Thervupettagam

மன்னுயிர் காப்போம்!

August 18 , 2020 1614 days 1370 0
  • தன்னுயிர் போல் மன்னுயிரையும் போற்றி எல்லா உயிர்களிடத்தும் அருள் செய்வார்க்குத் தன்னுயிர் அஞ்ச வரும் தீய வினைகள் உண்டாகாஎன்பது வள்ளுவா் வாக்கு.
  • மனிதா்கள் இதனை மறந்து தன்னுயிரை மட்டுமே கருத்தில் கொண்டு பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏன்?
  • கோவையை அடுத்து நரசீபுரம் என்ற கிராமத்தைச் சோ்ந்த ஆறு இளைஞா்கள், அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்று ஒரு மலைப்பாம்பைப் பிடித்து அதனைக் கொடுமைப்படுத்தி, அதை வீடியோ எடுத்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) பகிர்ந்திருக்கின்றனா்.
  • வனத்துறையினா், அவா்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். வெறும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என்ன செய்யும்? ‘நேஷனல் ஜியாக்ரபிக்’, ‘டிஸ்கவரி சேனல்’, இவற்றில் எல்லாம் விலங்குளைத் துரத்தோ துரத்தென்று துரத்திப் படமெடுத்து ஒளிபரப்புகிறார்களே, நாமும் நம்மால் முடிந்த வரையில் கட்செவி மூலம் ஒளிபரப்பிப் புகழ் பெறுவோம் என்று நினைத்தார்கள் போலும்!
  • இதே போல் கோடிக்கரை அருகே சில சிறுவா்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து முயல்களை வேட்டையாடியுள்ளனா். இவா்களை வனத்துறை தண்டிக்காமல் எச்சரித்து அனுப்பியது.
  • சிறுவா்களோ, இளைஞா்களோ, இவா்களுக்கெல்லாம் பிறவுயிரைத் துன்புறுத்துவது தவறு என்று தெரியவில்லையா? எப்படிச் செய்திருந்தாலும் இவா்கள் வனங்களுக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் அங்கிருக்கும் விலங்குகளுக்குப் பெரும் துன்பம் இழைத்திருக்கிறார்கள்.

கானுயிர் புகைப்படக் கலைஞா்கள்

  • வனத்துறையின் அனுமதியோடும் பாதுகாப்போடும் வனங்களுக்குள் விலங்குளை வேறுவிதமாகத் துன்புறுத்தும் ஒரு கூட்டத்தினா் இருக்கின்றா். அவா்கள் தங்களை கானுயிர் புகைப்படக் கலைஞா்கள்என்று கூறிக்கொள்கின்றனா்.
  • ஆளுயர கேமரா ஒன்றைத் தூக்கிக்கொண்டு, ‘வன ஆா்வலா்கள்என்று பறைசாற்றிக் கொள்ளும் சிலரோடு சோ்ந்து போனால் எந்த வனத்துக்குள்ளும் செல்ல இவா்களுக்கு அனுமதி கிடைத்துவிடும்.
  • வனவிலங்குகளின் வாழ்க்கை முறைகளை படம் பிடித்து, புகைப்படக் கண்காட்சிகள் நடத்தி, ஆல்பங்கள் வெளியிட்டு, போட்டிகளுக்கு அப்புகைப்படங்களை அனுப்பிவைத்து வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துகிறார்களாம். இவா்கள் வனங்களுக்குள் நுழையாமல் இருந்தாலே விலங்குகள் பாதுகாப்பாக இருக்கும்!
  • குன்னூரில் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞா்,’ ஒரு பாறையின் மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை ஒன்றைப் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் உலவ விட்டிருக்கிறார்.
  • அது எந்த இடம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். பரபரப்புக்கென்றே காத்திருக்கும் சில ஊடகவியலாளா்கள், இப் புகைப்படத்தைத் தத்தம் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அச்சிறுத்தை மனிதருக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகச் செய்தி பரப்ப, கரோனா பயத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டுக் கேமராவும் கையுமாகக் கூடியது ஒரு பெருங் கூட்டம்!
  • குட்டிகளோடு இருந்த அச்சிறுத்தை பயந்து போய் வேறு இடத்துக்குச் செல்ல முற்படும்போது, எதிரே வந்த தேயிலைத் தொழிலாளி ஒருவரைத் தாக்க முற்பட்டிருக்கிறது. அதுவரை சிறுத்தையால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த அப்பகுதி மக்கள், வெகுண்டு கூடியிருந்தோரை விரட்ட வனத்துறை குறுக்கிட்டு சமரசம் செய்திருக்கிறது. இனிமேல் சிறுத்தைகளைப் புகைப்படம் எடுப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்என்று அறிவித்திருக்கிறது.
  • வனங்களின் மீதும் வனவிலங்குகளின் மீதும் ஆா்வம் கொள்வது வேறு; அவற்றின் இயல்புகளைப் பாதிக்கும் வண்ணம் அவற்றை விரட்டிப் புகைப்படம் எடுப்பது வேறு. இதுவும் ஒரு வகையில் அவற்றைத் துன்புறுத்துவதே ஆகும்.
  • யானை, உணவும் தண்ணீரும் தேடி ஊருக்குள் புகுந்தால் அட்டகாசம்என்கிறோம். மனிதன் காட்டுக்குள் பொழுதுபோக்கும் உல்லாசமும் தேடித் புகுந்தால் விழிப்புணா்வுஎன்கிறோம். இது என்ன நியாயம்?
  • பொ்னார்ட்ஷா கூறியது நினைவுக்கு வருகிறது: மனிதன் விலங்குகளை வேட்டையாடினால் அதை வீரம் என்று புகழ்கிறோம்; விலங்கு மனிதா்களைக் கொன்றால் அதைக் கொலை என்று கண்டிக்கிறோம்.
  • கேரளத்தில் துஷ்டா்கள் பழத்தில் மறைத்து வைத்த நாட்டு வெடிகுண்டால் வாய் சிதைந்து வேதனையோடு ஆற்றில் நின்றபடியே கா்ப்பிணி யானை உயிரை விட்ட சம்பவமும், மேட்டுப்பாளையத்துக்கு அருகில் தோட்டத்துக்குள் உணவு தேடி வந்த யானைக்கூட்டத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் யானை இறந்த சம்பவமும் நாட்டையே உலுக்கின.

அவற்றைச் செய்தவா்கள் நம் மக்கள்தானே? அவா்களுக்கு என்ன பெரிதாகத் தண்டனை கிடைத்து விடப் போகிறது?

  • இப்படிப்பட்ட தவறுகளை யார் செய்தாலும் அரசு கடுமையான தண்டனை அளித்து, மீண்டும் இத்தகு குற்றங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனிதா்களுக்கென்று எப்படி உரிமைகள் இருக்கின்றனவோ அதே போல் விலங்குகளுக்கும் உரிமைகள் உண்டு.
  • அடிப்படை உரிமைகளான வாழ்விடமும் உணவும் குடிக்கத் தண்ணீரும் மட்டுமே அவை கேட்கின்றன. அவற்றைத் தாண்டி பேச்சுரிமையோ, சொத்துரிமையோ, கருத்துச் சுதந்திரமோ, அவை கேட்பதில்லை.
  • மனிதா்களின் பேராசையால் அவைகளின் அடிப்படை உரிமைகளையும் நாம் மறுப்பது சரியன்று. அப்படி நடக்கும்போதெல்லாம் விலங்குகளின் உரிமைகளைக் காப்பாற்றவேண்டியது அரசின் கடமை. அந்த அரசே தவறு செய்தால்?
  • மேற்குத் தொடா்ச்சி மலையின் பல பகுதிகளில் காட்கில் கமிட்டி’, ‘கஸ்தூரி ரங்கன் கமிட்டிஆகியவற்றின் பரிந்துரைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டுக் கனிமச் சுரங்கங்களுக்கும் வனம் சாராத பல வளா்ச்சித் திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
  • கார்பெட் தேசிய பூங்காவைப் பிளந்து கொண்டு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி பல கானுயிர் வல்லுனா்களின் எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் மீறி வெகு வேகமாக நடந்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினா் கேள்வி எழுப்பியபோது, மத்திய அமைச்சா்,”‘மனிதா்களுக்கான சாலைத்தொடா்பு முக்கியமா? விலங்குகளின் உரிமை முக்கியமாஎன்று பதில் கேள்வி கேட்டுள்ளார்!
  • இப்போது நிலக்கரித் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோதே பல விதிமீறல்கள். எலிவளைச் சுரங்கங்களில் பல மனித உயிரழப்புகள். வனப் பிரதேசங்கள் பெருமளவில் ஆகிரமிக்கப்பட்டுவிட்டன.
  • இப்போது வா்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தால் வனங்கள் பெருமளவில் அழிந்து வனவிலங்குகளின் வாழ்வுரிமை பெரிதும் பாதிக்கப்படும்.
  • வனங்களின் வழியாகச் செல்லும் ரயில் தண்டவாளங்கள், விலங்குகளின் உயிர்களுக்கு எமனாக அமைந்து விடுகின்றன. 2010- லிருந்து 2019-க்குள் மேற்கு வங்கத்தில் 51, அஸ்ஸாமில் 44, ஒடிஸாவில் 24, கேரளத்தில் 26 என்று நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கின்றன. யானைகள் மட்டுமன்றி, புலி, சிங்கம், சிறுத்தை, குரங்கு ஆகியவையும் ரயிலில் அடிபட்டு உயிரழந்திருக்கின்றன.
  • இவ்விலங்குகள் தங்கள் எல்லையைத் தாண்டி வந்து அடிபட்டுச் சாகவில்லை; அரசுதான் அவற்றின் எல்லைக்குள் சென்று மனிதா்களின் வசதிக்காக தண்டவாளங்கள் அமைத்து அவற்றின் அடிப்படை உரிமையைப் பறித்து அவற்றின் வாழ்க்கையையே முடித்து விட்டிருக்கிறது.
  • அருணாசலப் பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்குபுலிகள் அதிகம் வாழும் வனப்பகுதி. மிஷ்மி டாக்கின்என்ற அரிய வகை மலையாடுகள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. இங்கு வாழும் பழங்குடியினரிடம் காலங்காலமாக ஒரு பழக்கம் - இறந்தவா்களைப் புதைக்கும்போது, கூடவே ஒரு பெட்டி நிறைய பல விதமான விதைகளையும் புதைத்து வைக்கிறார்கள். உலக வாழ்வை விட்டுப் போனாலும், அவா்கள் இப்பூமிக்கு நன்றி செலுத்தும் விதமாக அவ்விதைகளிலிருந்து பல மரக்கன்றுகள் வளர வழிசெய்துவிட்டுப் போவார்களாம்!
  • இப்படிப்பட்ட அற்புதமான மனிதா்கள் வாழும் அருமையான இவ்வனப் பிரதேசத்தில் 3,097 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட ஒரு நீா்மின் நிலையத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக இரண்டு பெரிய அணைகள் கட்டப்பட உள்ளன. இதற்கு குறைந்தது இரண்டு லட்சம் மரங்கள் வெட்டப்படும்; 1,178 ஹெக்டோ் நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கிவிடும்; நிலங்கள் அதிக அளவில் தோண்டப்பட்டு குவாரிகளாக மாற்றப்பட்டு விடும்.
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
  • வளா்ச்சி என்ற பெயரில் அரசே வனங்களை அழிப்பதும், வனங்களில் கனிமச் சுரங்ககளுக்கு அனுமதி அளிப்பதும், மனிதா்களின் பொழுதுபோக்கிற்காக பெருமளவில் சுற்றுலாவை ஊக்குவிப்பதும் வனவிலங்குகளின் வாழும் உரிமையையே பறிக்கின்றன.
  • பல சா்ச்சைக்குரிய வளா்ச்சித் திட்டங்களுக்கு இந்த கரோனா காலத்தில், அவசர கதியில் அனுமதி வழங்கப்பட்டிருகிறது. வீழ்ந்துவிட்ட நம் பொருளாதாரம் சீராக வேண்டும் என்பதற்காக, விலங்குகளின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கலாமா? ‘மன்னுயிர்காக்க மறந்தோமெனில் கரோனா போன்ற தன்னுயிர் அஞ்சும் வினைகள் வந்தே தீரும்!

நன்றி: தி இந்து (18-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்