TNPSC Thervupettagam

மயன்மார் உள்நாட்டுப் போர்

December 1 , 2023 406 days 324 0
  • பொதுவாகவே இந்தியாவின் எல்லைப் பிரச்சினை என்றால் சீனா, பாகிஸ்தான்தொடர்பாகத்தான் அதிகமாகப் பேசப்படுகிறது. கெடுவாய்ப்பாக, அந்த வரிசையில்இப்போது மயன்மாரும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவையும் மயன்மாரையும் பிரிக்கும்எல்லைக்கோடு நீளமானது, 1,643 கி.மீ. அது மிசோரம், நாகாலந்து, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மயன்மாருக்குச் சீனாவோடும் 2,129 கி.மீ.நீண்ட எல்லை இருக்கிறது.
  • கடந்த சில மாதங்களாக மயன்மார் ராணுவ அரசின் படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. களம்: இந்தியாவையும் சீனாவையும் தொட்டு நிற்கும் மயன்மாரின் எல்லைப்புற மாநிலங்கள். இந்தப் போரில் சமீப காலமாகப் போராட்டக் குழுக்களின் கரம் ஓங்கி வருகிறது.
  • மயன்மாரின் ராணுவம், சொந்த மக்களின்மீது யாதொரு கருணையுமின்றி ஆட்சி புரிந்துவருகிறது. பல மேலை நாடுகளின் தண்டனைத் தடைகளாலும் (sanctions) கீழை நாடுகளின் கண்டனங்களாலும் அது தனிமைப்பட்டிருக்கிறது. இப்போதைய எதிர்ப்புரட்சியால்ராணுவ ஆட்சி பலவீனடையுமா? இதனால் இந்தியாவுக்கு எவ்விதமான பிரச்சினைகள் வரும்? அவற்றை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

வரலாறு நெடுகிலும் ராணுவம்

  • இந்தக் கேள்விகளுக்கான விடைகளை 1948ஆம் ஆண்டிலிருந்து தொடங்கலாம். அந்த ஆண்டுதான் பர்மா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்தது. அப்போது பர்மா என்றுதான் பெயர்; மயன்மார் எனும் பெயர் மாற்றம்நிகழ 40 ஆண்டுகளாகின. பர்மாவின் வரலாறு மிகுதியும் ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது.
  • 1962இல் ஜனநாயகக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அடுத்த50 ஆண்டுகளுக்கு அது தனது பிடியை இளக்கவில்லை. 2012இல் ஜனநாயக விடிவெள்ளியாகக் கொண்டாடப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் (National League of Democracy - NLD) எதிர்க்கட்சி ஆனது.2015இல் அதுவே ஆளுங்கட்சியும் ஆனது. ராணுவத்தின் மேலாதிக்கத்துடன்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சிதான் நடந்தது. என்.எல்.டி ராணுவத்துக்கு இசைவாகத்தான் ஆட்சி நடத்தியது. என்றாலும் வெகுமக்களின் ஒரே பற்றுக்கோடாக அந்தக் கட்சிதான் இருந்தது. அதனால் 2020 தேர்தலில் அது மீண்டும் வெற்றி பெற்றது.
  • மக்களிடம் என்.எல்.டி-க்கு இருந்த செல்வாக்கு ராணுவத்துக்கு உவப்பாக இல்லை. ஆகவே பிப்ரவரி 2021இல் அது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. உடனடியாக ஆங் சான் சூச்சியும் அவரது கட்சி முன்னணியினரும் சிறை வைக்கப்பட்டனர். மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிவருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 130 ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இதுகாறும் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அகிம்சைப் போராட்டங்களால் ஆட்சியாளர்களிடம் சிறு அசைவைக்கூட உண்டாக்க முடியவில்லை.

விடுதலைக் குழுக்கள்

  • இந்தச் சூழலில்தான் ஒரு புதிய கூட்டணி உருவானது. மயன்மார் பல தேசியஇனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’ எனப்படும் பெரும்பான்மை பர்மீய சமூகத்தினர் ஐராவதி நதி பாயும்வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கிறார்கள். இவர்கள் பௌத்த மதத்தினர்.
  • மயன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இவர்களில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் ஆகியோர் முதன்மையானவர்கள். இவர்களில் பிரிவினை கோரும் பல ஆயுதக் குழுக்களும் உண்டு. பெரும்பான்மை பாமா இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் எப்போதும் இணக்கம் இருந்ததில்லை. எனில், இப்போது முதல் முறையாகப் பொது எதிரியான ராணுவ ஆட்சிக்கு எதிராக இரு சாராரின் அமைப்புகளும் இணைந்திருக்கின்றன. இந்தக் கூட்டணிதான் தேசிய ஐக்கிய முன்னணி (National United Front - NUF). இது மயன்மாருக்கு வெளியே ஓர் அரசாங்கத்தை நிறுவியிருக்கிறது. தங்கள் விடுதலைக்கு மயன்மார் மக்கள் பலரும் இப்போது என்.யு.எஃப் கூட்டணியைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
  • என்.யு.எஃப் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற - மூன்று சிறுபான்மை இனத்தவரின் விடுதலைக் குழுக்கள் ஒன்றிணைந்து அக்டோபர் 27 அன்று மயன்மார் அரச படைகளை எதிர்கொண்டன; வெற்றியும்பெற்றன. பல ராணுவத் தளங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றின. இதற்குத் ‘தாக்குதல் 1027’ என்றுபெயர். தொடர்ந்து நவம்பர் 11 அன்று நடந்த ‘தாக்குதல்1111’-இலும் போராட்டக் குழுக்களுக்கே வெற்றி கிடைத்தது.
  • சிறுபான்மையினர் வசிக்கும் எல்லையோர மாநிலங்களில்தான் போராட்டக் குழுக்கள் தங்கள் கொடிகளை நாட்டி வருகின்றன. பெரும்பான்மை பாமா இனத்தவர் வசிக்கும் மையப் பகுதிகளும் தென் பகுதிகளும் ராணுவ ஆட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எனில், படிப்படியாக அங்கேயும் அரச படைகளை வீழ்த்துவதற்கு என்.யு.எஃப் வியூகம் வகுத்துவருகிறது. இது நடந்தால், அடுத்து வரும் காலத்தில் மயன்மாரின் உள்நாட்டுப் போர் உக்கிரமடையும்.

இந்தியாவின் நிலைப்பாடு

  • இந்தச் சூழலில் இந்தியா எடுக்கும் மூன்று கொள்கை முடிவுகள் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை: ராணுவ ஆட்சியுடனான உறவு, என்.யு.எஃப் கூட்டணியுடனான உறவு, அகதிகள் குறித்த நிலைப்பாடு.
  • முதலாவதாக, மயன்மாரின் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாகத்தான் இந்தியா இருந்து வந்திருக்கிறது. மயன்மாருக்குப் பல்வேறு பொருள்களும் ஆயுதங்களும் வழங்கிவருகிறது. அதேவேளையில், சமீபகாலமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் கருத்து திரண்டுவருகிறது. இந்த நிலையில்தான், கடந்த இரண்டு மாதங்களாக இந்திய-மயன்மார் எல்லையோர மாநிலங்களில் நடந்துவரும் உள்நாட்டுப் போரைப் பற்றி இந்தியா கவலை தெரிவித்திருக்கிறது. வன்முறையை நிறுத்தவேண்டுமென்று இரு தரப்பையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ராணுவ ஆட்சி தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா மறுபரிசீலனை செய்யுமா என்பது வரும் காலத்தில் தெரியவரும்.
  • அடுத்த கொள்கை முடிவு போராட்டக் குழுக்கள் தொடர்பானது. இந்தியா, என்.யு.எஃப்-உடனோ விடுதலைக் குழுக்களுடனோ தொடர்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சீனா இந்த விஷயத்தில் வேறுவிதமாகச் செயல்படுகிறது. மயன்மாரின் ராணுவ ஆட்சிக்குப் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் ராணுவத் தளவாடங்களையும் சீனா வாரி வழங்கியிருக்கிறது. அதேவேளையில் விடுதலைக் குழுக்களுடனும் தொடர்பில் இருக்கிறது. ‘தாக்குதல் 1027’ சீனாவின் ஆசிர்வாதமின்றி நடந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்தியா என்.யு.எஃப்-உடனும் விடுதலைக் குழுக்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து ஆலோசிக்கலாம். அது போர்த் தந்திரமாக அமையும். தார்மிகரீதியிலான நடவடிக்கையாகவும் இருக்கும் என சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
  • மூன்றாவது கொள்கை முடிவு அகதிகள் தொடர்பானது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த மாதமே எல்லைப்புறச் சின் இன மக்கள் மிசோரமுக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பதுதான் மத்திய அரசின் கருத்தாக இருந்தது. ஆனால், புகலிடம் தேடிவந்த மயன்மாரின் சின் இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். திபெத்-பர்மீய வம்சாவளியினர். இப்போதும் மண உறவுகளால் பிணைக்கப்பட்டவர்கள். ஆதலால் மிசோரம் அரசால் அனுமதி மறுக்க முடியவில்லை. போர்ச் சூழலால் நவம்பர் மாதமும் மீண்டும் அகதிகள் வந்தனர். சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் அண்டை நாட்டுக்குப் புகலிடம் தேடி வரும் அகதிகளின்பால் மத்திய அரசு பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.
  • மயன்மாரின் ராணுவ ஆட்சியில் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான பாதைகள் அடைபட்டுவிட்டன. இந்திய-சீன எல்லைப்புற மாநிலங்களில் விடுதலைக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளிடையே என்.யு.எஃப். பரவலான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடுகள் அறம் சார்ந்தும் ராஜீய சாதுரியத்துடனும் அமைய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்