- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் நாட்டில் சட்டப்பேரவைத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கும் மக்களாட்சியின் உயிர்நாடியாகவும் அதன் மாட்சிமையைத் தாங்கி நிற்கக்கூடிய தூண்களாகவும் திகழ்கின்றன.
ஊடகங்கள்
- இவற்றுள் வலிமை மிக்க ஒன்றாகவும், சமூக, பொருளாதார நடவடிக்கைகள், அரசியல் சார்ந்த நிகழ்வுகள், அறிவியல் வளர்ச்சி போன்றவற்றை தினமும் மக்களிடையே கொண்டு சேர்த்தல், சமூகத்தில் நிலவும் அநீதிகளை அடையாளப்படுத்தி நீதியை நிலைநாட்டக் குரல் கொடுத்தல் மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டுதல் போன்ற அளப்பரிய பணிகளை மேற்கொள்ளும் சாதனங்களாக ஊடகங்கள் மக்களால் மதித்துப் போற்றப்படுகின்றன.
- அந்நியர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு ஒவ்வொருவரின் மனதிலும் மலர, முப்பது கோடி முகம் உடையாள்-உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதியார் பாடியதோடு மட்டுமல்லாமல் இவ்வாறான சுதந்திர வேட்கையூட்டும் கருத்தாக்கம் கொண்ட கட்டுரைகளையும், அன்றைய சமூகத்தில் நிலவி வந்த அறியாமை இருளை அகற்றிட சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, ஞானபாநு போன்ற பல பத்திரிகைகளில் பதிவு செய்து, சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தார்.
- பத்திரிகையின் வாயிலாக மக்களை விழிப்படையச் செய்து, அந்நியர்களிடமிருந்து நம் தேசத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் ஜி.சுப்பிரமணி ஐயர், ராம்நாத் கோயங்கா, எ.ரங்கசாமி ஐயங்கார், பி.வைத்தியநாதையர், சுப்பிரமணிய சிவா, நஞ்சுண்டராவ், எஸ்.என். திருமலாச்சாரியார், மண்டயம் எஸ்.சீனிவாச்சாரியார் போன்றோர் தமிழ் பத்திரிகை உலகில் புகழ் முத்திரை பதித்தனர்.
- இவ்வாறான பத்திரிகை உலகின் லட்சிய வரலாறுகளை இன்றைய இளம் பத்திரிகையாளர்களும், பெருகிவிட்ட செய்தி ஊடகங்களும், சமூக வலைதளங்களில் ஈடுபட்டுள்ளோரும் ஆழ்ந்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
காரணம்
- காரணம், இன்று பெரும்பாலான செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் நம்பகத்தன்மையற்ற செய்திகள் பெருமளவு உலா வருகின்றன.
- இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் 4 மாநில இடைத் தேர்தலின் போது, ஏப்ரல் மாதம் வெளியான செய்திகளில் 40 சதவீதம் ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
- இதே போன்று சமூக வலைதளங்களில் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பகிரப்படும் கருத்துகளைத் தடுத்து நிறுத்த ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- மேலும், மனித நேயப் பண்பு என்பதன் மீதே செய்திகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நெறிமுறையையும் செய்தியாளர்கள் உணர வேண்டும். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக, பத்திரிகை உலக வரலாற்றில் இடம்பெற்ற பிணம் தின்னிக் கழுகும் ஒரு சிறுமியும் என்ற மனதை வதைத்த செய்தியைக் குறிப்பிடலாம்.
தென்னாப்பிரிக்கா
- தென்னாப்பிரிக்கா ஜோஹன்னஸ்பர்க்கைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் கெவின் கார்ட்டர் கடும் பஞ்சத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சூடான் நாட்டுக்கு 1993-ஆம் ஆண்டு செய்தி சேகரிக்க சக பத்திரிகையாளர்களுடன் சென்றார். சூடானின் தென் பகுதிக்குச் சென்ற கெவின், உண்ண உணவும் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி மக்கள் பரிதவிப்பதைக் கண்டார்.
- கெவினின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர் கண்முன்னே ஓர் அவலக் காட்சி. அதாவது, எலும்புக் கூடு தோற்றத்துடன் ஒரு சிறுமி நடந்து செல்வதற்குக்கூட தெம்பின்றி, தரையிலே தவழ்ந்தபடி தன் பசியைத் தீர்த்துக்கொள்ள தொலைவில் ஐ.நா.சபை சார்பில் உணவு வழங்கும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தரையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்த அந்தச் சிறுமியால் மேலும் முன்னேறிச் செல்ல இயலாமல் தலையைக் கவிழ்ந்தபடி மயக்க நிலையில் நின்று விட்டார்.
கெவின் தன் கேமராவில் அந்தச் சிறுமியைப் படம் பிடிப்பதற்குக் கோணம் பார்க்க, சிறுமியின் பின்னே ஒரு பிணம் தின்னிக் கழுகு நின்றபடி சிறுமியை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தது. சி
- றுமியின் முனகும் சப்தம் காற்றில் மெல்லக் கரைந்து கொண்டிருக்க, அவளின் உயிர் பிரியும் தருணத்தை அந்தக் கழுகு எதிர்நோக்கிக் காத்திருந்தது. அந்தக் காட்சியை கெவின் தன் கேமராவில் பதிவு செய்துகொண்டு, தன் நோக்கம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து சென்றார்.
பஞ்சம்
- அந்தப் புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கெவின் விற்க, 1993 மார்ச் திங்கள் 26-ஆம் நாள் அந்தப் புகைப்படம் வெளியானது. சூடானின் கொடூர பஞ்சத்தை உணர்த்திய கெவினின் அந்தப் புகைப்படம் உலகை உலுக்கியது. அரிதான அந்தப் புகைப்படத்தை எடுத்த கெவின் கார்ட்டருக்கு 1994-ஆம் ஆண்டு புலிட்சர் விருது கிடைத்தது.
- பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த கெவினுக்கு எதிராக உலகெங்கிலும் இருந்து விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்தன.
- உயிருக்குப் போராடும் நிலையில் இருந்த அந்தச் சிறுமியை கெவின் காப்பாற்றத் தவறியது ஏன்? மனிதாபிமானம் இல்லாத புகைப்படச் செய்தியாளர் கெவினுக்கும் அந்தப் பிணம் தின்னிக் கழுகுக்கும் என்ன வேறுபாடு? போன்ற குற்றச்சாட்டுகள் கூரிய அம்புகளாய் கெவின் மீது பாய்ந்தன.
- தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உணர்ந்தார் கெவின். அவரை மனசாட்சி வாட்டியது. நாள்கள் உருண்டோட கெவின் தற்கொலை செய்து கொண்டார். மனிதநேயப் பண்பு என்பதன் மீதே செய்திகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நெறிமுறைக்குக் கெவினின் மரணம் ஒரு சாட்சியாய் அமைந்து விட்டது.
- பத்திரிகை உலகின் வரலாற்றில் பதிந்த கெவினின் செய்தியை ஒரு பாடமாகக் கொண்டு இன்றைய செய்தி ஊடகங்களும், சமூக வலைதங்களும் மனிதநேயப் பண்பு செழிக்க, சமூகப் பொறுப்போடு செய்திகளை வழங்கி, சமூக நலனைக் காக்க இனிதே நடை போடட்டும்.
நன்றி: தினமணி (06-07-2019)