- மரண தண்டனை வழங்கப்படக்கூடிய வழக்குகளில் தமக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிரான காரணங்களையும் சூழ்நிலைகளையும் முன்வைப்பதற்கான வாய்ப்பு குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணையின் எந்த நிலையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும் விவகாரம் ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மரண தண்டனைத் தவிர்ப்புக்கான சூழ்நிலைகள் குறித்த நெறிமுறைகளை வகுப்பதற்கான ரிட் மனுவைத் தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
- பொதுவாக விசாரணை நீதிமன்றங்களில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்குப் பெரும்பாலும் தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலேயே மரண தண்டனை வழங்கப்படுகிறது. குற்றவாளி தனக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிரான வாதங்களை முன்வைக்கும் வாய்ப்பு எப்போது வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பான சில வழக்குகளில் முரணான தீர்ப்புகள் முன்பு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலேயே மரண தண்டனை வழங்கும் நடைமுறையை எதிர்த்துள்ளார்.
- குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் ஏன் மரண தண்டனைக்குரியவர் என்பதை விளக்குவதற்கு அரசுத் தரப்புக்குப் போதுமான வாய்ப்பிருக்கும் நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு தனக்கு மரண தண்டனை ஏன் வழங்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களை முன்வைக்க குற்றவாளிக்குப் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை. எனவே இந்த விஷயத்தில் குற்றவாளி தரப்பு தம் வாதத்தை முன்வைப்பதற்கான அசலான, அர்த்தம்மிக்க, பயனுள்ள வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து அரசமைப்பு அமர்வு தெளிவுபடுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
- இந்தியாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. அரிதிலும் அரிதான குற்றம் எது என்பது குற்றத்தின் தன்மையை மட்டும் வைத்து முடிவெடுக்கப்படக் கூடாது என்பதையும் குற்றவாளியின் சமூகப் பொருளாதார பின்னணி, அவருடைய மனநிலை உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பிந்தைய தீர்ப்புகளில் உறுதிசெய்துள்ளது.
- இந்தப் பின்னணியில் இந்திய நீதிமன்றங்களின் தண்டனை வழங்கும் செயல்முறையை மேலும் மனிதநேயம் மிக்கதாக மாற்றும் முயற்சியாக உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பார்க்கலாம். மரண தண்டனை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு குற்றவாளி வளர்ந்த சூழல், கல்வி, சமூக-பொருளாதார சூழ்நிலைகள் போன்ற விஷயங்களை விசாரணை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசமைப்பு அமர்வு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- இந்திய தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனைக்கு இடமிருந்தாலும் அதைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய நீதி அமைப்பு எடுத்துவருகிறது. மரண தண்டனையை நீடிக்க வேண்டுமா நீக்கப்பட வேண்டுமா என்கிற வாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால், மரண தண்டனை முற்றிலும் தேவைப்படாத சூழலை உருவாக்கும் பொறுப்பு சட்டத்துக்கு மட்டுமில்லை சமூகத்துக்கும் உள்ளது.
நன்றி: தி இந்து (25 – 09 – 2022)