- சிறுவயதில் இருந்தே நாம் எல்லாரும், ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்ற வாசகத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், மரம் எப்படி மழையைக் கொண்டுவரும்? மழையால் நீர்நிலைகள் உருவாகின்றன. இந்த நீர்நிலைகள் கடலில் சென்று கலக்கின்றன. பின் இந்தக் கடல்நீர் ஆவியாகி மேகமாகிறது. அதிலிருந்து மழை பெய்கிறது. இதுதான் நீர்சுழற்சி. இங்கே மரம் எங்கு வருகிறது? கடல்நீர்தான் ஆவியாகி மழையாக வருகிறது என்றால், மழை பெறுவதற்கு மரம் வளருங்கள் என்று ஏன் சொல்லவேண்டும்?
- மேகங்களை உருவாக்குவதில் மரங்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. மரங்கள் நீரூற்றுகள்போலச் செயல்படுகின்றன. நிலத்துக்கு அடியில் இருக்கும் நீரை வேர்களின் மூலம் உறிஞ்சி, தங்களது உடலின் எல்லாப் பாகங்களுக்கும் கொண்டு செல்கின்றன. பிறகு ஒளிச்சேர்க்கை நடைபெறும்போது மரங்களின் இலைகளில் உள்ள துளைகள் திறக்கின்றன. அப்போது மரத்தின் உள்ளே இருக்கும் நீர் வெளியேறுகிறது. இதை நீராவிப்போக்கு என்கிறோம். ஒரு பெரிய மரம் சராசரியாகத் தினமும் சுமார் 500 லிட்டர் நீரை இவ்வாறு வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.
- ஆனால், நாம் மோட்டார் மூலம் தண்ணீரைப் பூமியிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கே எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது. மரங்கள் எப்படி இதைச் செய்கின்றன? சூரிய வெப்பம்தான் அதற்கான ஆற்றலை மரங்களுக்குத் தருகிறது.
- ஆனால், நீர் ஆவியாகி மேலே செல்வதால் மட்டும் மழை வந்துவிடுமா என்றால், கிடையாது. வறண்ட நிலத்தில் உள்ள காற்றை எடுத்து ஆராய்ந்தால்கூட அதில் கோடிக்கணக்கில் நீரின் மூலக்கூறுகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அவை மட்டும் நீர்த்துளிகளாக மாறாது. அதற்கு மழை விதைகள் வேண்டும்.
- காற்றில் நிரம்பியிருக்கும் மாசுதாம் மழையை வரவழைக்கும் விதைகள். நீங்கள் ஒவ்வொரு மழைத்துளியையும் எடுத்து ஆராய்ந்தால், அதில் மாசுத் துகள்கள் நிறைந்திருக்கும். சிறிய அளவு தூசியில் இருந்து உப்பு, மகரந்தம், வேதிப்பொருள்கள் என ஏதாவது ஒரு மாசு இருக்கும். இவைதாம் உண்மையில் நீர்த்துளிகளை ஒன்றிணைத்து மேகங்களாக உருமாற்றுகின்றன.
- ஆவியாகி மேலே சென்ற நீரின் மூலக்கூறுகள் குளிர்ச்சி அடைந்து சுருங்கும்போது (Condensation) சிறு நீர்த்துளிகளாக மாறுகின்றன. இந்த நீர்த்துளிகள் வளிமண்டலத்தில் உள்ள மாசுத் துகள்களில் ஒட்டிக்கொள்கின்றன.
- இவ்வாறு கோடிக்கணக்கான நீர்த்துளிகள் இணைந்துதான் நாம் பார்க்கும் மேகங்கள் உருவாகும். ஒருகட்டத்தில் மேகங்கள் மிகப்பெரிதாக, கனமானதாக மாறும்போது, புவியீர்ப்பு விசையின் காரணமாகக் கீழே மழையாக விழுகின்றன.
- மேகங்களை உருவாக்குவதற்கான மாசுத் துகள்கள் எங்கிருந்து உருவாகின்றன? இதையும் மரங்களே செய்கின்றன. மரங்கள் ஐசோபிரீன், மானோட்டர்பீன்ஸ் போன்ற வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.
- இந்த வேதிப்பொருள்கள்தாம் காந்தம் போலச் செயல்பட்டு, மரங்கள் ஆவியாக்கும் நீரைப் பிடித்து வைக்கின்றன. இந்த வேதிப்பொருள்களை மாசுத்துகள்கள் என்று குறிப்பிட்டாலும் இவற்றால் சுற்றுச் சூழலுக்கு எந்தக் கெடுதலும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலையை நிர்ணயிப்பதில் இந்த வேதிப்பொருள்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
- மழை குறைவான இடங்களில் உள்ள காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் மட்டுமல்ல, இந்த மாசுத் துகள்கள் மிகக் குறைவாகவோ அதிகமாக இருப்பதும்கூடக் காரணமாக அமையலாம்.
- காற்றில் அதிகப்படியான மாசுத்துகள்கள் இருந்தால் அதிக மழைதான் வர வேண்டும் அல்லவா? அது எப்படி மழை குறைவுக்குக் காரணமாக இருக்கிறது? அதிகத் துகள்கள் வளிமண்டலத்தில் இருந்தால் நீர்த்துளிகளைப் பிரித்துவிடும். இதனால், அவை ஒன்று சேர்ந்து கனத்த மேகங்கள் உருவாவது பாதிக்கப்படும் என்பதால் மழை பொழிவதற்கான வாய்ப்பும் குறைவு.
- மரங்கள் வெளியிடும் துகள்கள் அல்ல, மனிதர்கள் செயற்கையாக உருவாக்கும் மாசுத் துகள்களும் வளிமண்டலத்தில் ஏராளமாகக் கலக்கின்றன அல்லவா? அவைதாம் மழைப் பொழிவைக் குறைக் கின்றன.
- ஆனால், ஆச்சரியமூட்டும் வகையில்,மரங்கள் இந்தத் துகள்களை வெளியிடும் போது தமக்கு வேண்டிய மழையின் அளவைப் பொறுத்து எவ்வளவு துகள்களை, எந்த வகையான துகள்களை வெளியிட வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றன.
- மரங்கள் வெளியிடும் நீராவி குளிரும்போது அருகே நிலவும் காற்றின் அழுத்ததைக் குறைக்கிறது. அப்போது அழுத்தம் அதிகம் உள்ள இடத்திலிருந்து காற்றின் மூலக்கூறுகள் நகர்ந்து வரும்போது, காற்று உருவாகி இந்த மேகங்களைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று மழை பொழிய வைக்கிறது. இப்படித்தான் பூமி முழுவதும் மழை பெய்வதற்குக் கோடிக்கணக்கான மரங்கள் காரணமாக இருக்கின்றன.
- ஆனால், மரங்கள் தனியாக இருப்பதை விடக் கூட்டாக இருப்பது விரைவாகமேகங்களை உருவாக்கி, விரைவாக மழையைப் பெற உதவும். அதற்கு வேண்டியவை நிலத்தடி நீரும் சூரியவெப்பமும். இவை இரண்டும் இருப்பதால்தான்மழைக்காடுகள் மழையைப் பெறுவதில் அதிகம் பங்கு வகிக்கின்றன.
- பூமியின் தொடக்கக் காலத்தில் திறந்த விதைத் தாவரங்கள் (Gymnosperms) என்கிற வகையைச் சேர்ந்த மரங்களே இருந்தன. இந்த மரங்கள் குறைந்த அளவு நீரையே வெளியேற்றக்கூடியவை. ஆனால், 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூடியவிதைத் தாவரங்கள் (Angiosperms) எனும் புதிய வகைத் தாவரங்கள் தோன்றின. இந்த வகையைச் சேர்ந்த மரங்கள் உருவான பிறகுதான் வெப்பமண்டல மழைக்காடுகள் உருவாகி மழைப்பொழிவும் அதிகமானது.
- இப்படித்தான் இன்று நம் பூமி மழையைப் பெறுகிறது. இதற்காகப் பரிணாம வளர்ச்சி ஒரு தேர்ந்த பொறியாளரைப் போல மரங்களையும் மழைக்காடுகளையும் உருவாக்கியுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 01 – 2024)