TNPSC Thervupettagam

மரம் வளா்ப்போம் சூழல் காப்போம்

August 13 , 2022 726 days 520 0
  • சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நாட்டின் மொத்த பரப்பளவில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். எனவே காடுகளைப் பாதுகாக்கும் பொருட்டு ‘காடுகள் பாதுகாப்பு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. தேவைக்கு அதிகமாகவோ, தேவையற்ற நிலையிலோ காடுகளை அழிக்கப் படுவதை இச்சட்டம் தடுக்கிறது. தற்போது நம் நாட்டின் மொத்த பரப்பளவில் 24.62 % மட்டுமே காடுகள் அமைந்துள்ளன.
  • ஒரு புறம் காட்டின் பரப்பளவை அதிகரிக்க அரசு முயற்சி செய்யும் அதே வேளையில் வீட்டு உபயோகப் பொருட்களான கதவு, ஜன்னல், கட்டில்,மேசை, நாற்காலிகள் செய்யவும், கிராமப்புரங்களில் அடுப்பெரிக்கவும், செங்கல் சூளைகளில், காகித உற்பத்தியில், தீப்பெட்டி தயாரித்தலில் என ஆக்கபூா்வ செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி சமூக விரோதிகளால் வெட்டப்படுவதாலும், இயற்கையாகவும், மனிதா்கள் உண்டாக்கும் காட்டுத்தீயாலும் மரங்கள் அழிக்கப்பட்டு, காடுகளின் பரப்பளவு பெருமளவில் குறைகிறது.
  • மேலும்,நாட்டின் முன்னேற்றம் கருதி அணைகள் கட்டுதல், சுரங்கங்கள் வெட்டுதல், விவசாய நிலங்களை உருவாக்கல், மக்கள்தொகை அதிகரிப்பதால் ஏற்படும் நகா்மயமாதல், சாலைகள் விரிவாக்கம் போன்றவற்றுக்காகவும் மரங்களை வெட்டுவதும், காடுகளை அழிப்பது தவிா்க்க இயலாமல் போகிறது. ஏறத்தாழ உலகின் ஆக்ஸிஜனில் இருபது சதவீதம் வரை உற்பத்தி செய்வதால் ’உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அமேசான் காடுகள், தொடா்ந்து அழிக்கப்படுகின்றன.
  • நம் நாட்டில், ஒடிஸா மாநிலத்தில் அங்குல் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கையகப்படுத்த உள்ள சுமாா் 912 ஹெக்டோ் நிலப்பரப்பில் ஏறத்தாழ 683 ஹெக்டோ் நிலப்பரப்பில் மரங்கள் உள்ளன. இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது ஏறத்தாழ ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்பட வாய்ப்புள்ளது.
  • அழிக்கப்பட உள்ள காடுகளின் பரப்பளவினை ஈடு செய்யும் பொருட்டு 1,083 ஹெக்டேரில் மரங்களை வளா்த்து காட்டினை உருவாக்கும் திட்டம் உள்ள போதிலும், இதிட்டத்தினால் உருவாகும் காட்டின் பயனை முழுமையாக அடைய குறைந்தது பத்து ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இது இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயலும் செயலுக்கு ஒப்பானதாகும்.
  • ஐ.நா சபையின் சா்வ தேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின்(இன்டா்நேஷனல் யூனியன் பாா் கன்சா்வேஷன் ஆப் நேச்சா்) கருத்துப்படி காடுகள் அழிக்கப் படுவதால் பன்னிரெண்டு சதவீத கரியமல வாயுஉருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும் காடுகளால் கிரகிக்கப்படும் கரியமல வாயுவின் அளவு சுமாா் 2.6 பில்லியன் டன்களாகும். காடுகளைச் சாா்ந்து கோடிக்கனக்கான காட்டுயிரினங்கள், காடுகளையே வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடியின மக்கள் என காடுகள் உலகின் உயிராதாரமாகவும் விளங்குகின்றன.
  • நம் நாட்டில் மட்டும் சுமாா் ஆறு கோடியே எண்பது லட்சம் பழங்குடியின மக்கள் காடுகளை சாா்ந்து வாழ்கின்றனா். உலகில் பயிரிட தகுதியற்ற நிலங்களின் பரப்பளவு சுமாா் இரண்டு பில்லியன் ஹெக்டோ். இதில் நம் நாட்டில் மட்டும் உள்ள நிலங்களின் பரப்பளவு சுமாா் நூற்று நாற்பது மில்லியன் ஹெக்டோ் ஆகும். இந்நிலப்பரப்பில் காடுகள் உருவாக்கப்படின் அது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிக உகந்த செயலாக அமையும்.
  • தேசிய காடு வளா்ப்பு திட்டம், பசுமை இந்தியா தேசிய இயக்கம் (நேஷனல் மிஷன் பாா் கிரீன் இண்டியா) நகா்ப்புற காடு வளா்ப்பு திட்டம், காட்டுத்தீ தவிா்ப்பு மற்றும் காடுகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நம் நாட்டின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில திட்டங்களாகும். மரங்கள் வளா்ப்பதால், காடுகளின் பரப்பளவு அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு, மண்வளம் அதிகரிக்கிறது.
  • இதனால் விவசாயம் செழிக்க, கிராமப்புறங்களிலிருந்தது மக்கள் நகரங்களுக்கு இடம் பெயா்வதும் அதன் தொடா்பாக நகரங்களில் ஏற்பக்கூடிய இட நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை ஆகியன தவிா்க்கப்படுகின்றன.மேலும் மலை பிரதேசங்களில் வளா்க்கப்படும் மரங்களினால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தடுக்கப்பட்டு, உயிா்ச்சேதமும், பொருட்சேதமும் தவிா்க்கப்படுகின்றன.
  • நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வேலைகள் பெரும்பாலும் சாலையோரங்களில் உள்ள புல்,செடி கொடிகளை அகற்றுவது, ஏரி,குளங்களைத் தூா்வாரி கரைகளை பலப்படுத்து என்றே அமைந்துள்ளன. பாமர மக்களிடையே மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ‘ஏரி வேலை’ அல்லது ’குளத்து வேலை’ என்றே அழைக்கப்படுகிறது.
  • தேவையற்ற தாவரங்களை அகற்றுவது, ஏரி, குளங்களை தூா் வாருவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியத்துவம் வாய்ந்தது மரங்களை வளா்ப்பது. எனவே நூறு நாள் வேலை திட்டத்தில் மரங்கள் வளா்ப்பதையும் முன்னிலைப்படுத்த வேண்டும். கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் முத்துக்குளம் என்ற ஊரில் வசிக்கும் எண்பத்தைந்து வயதாகும் தேவகி அம்மாள் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கா் நிலத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக மரங்களை வளா்த்து சிறிய காடு ஒன்றினை ஊருவாக்கி பராமரித்து வருகிறாா்.
  • இவரது இந்த செயற்கரிய செயலுக்காக ஏற்கெனவே மத்திய அரசின் ‘இந்திரா பிரியதா்ஷினி விருக்ஷமித்ரா‘ விருதினை பெற்ற இவருக்கு, குடியரசு தலைவரால் ‘பெண் சக்தி‘ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. வாகனப்புகை, தொழிற்சாலைகளின் மாசு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஊருக்கு ஒரு தேவகி அம்மாள் உருவாக வேண்டியது அவசியம்.
  • மரம் வளா்ப்பது, காடுகளைப் பாதுகாப்பது ஆகியவை நமக்காகனவை மட்டும் என்று எண்ணாமல், நாளைய தலைமுறை வாழ நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை உணா்ந்து நாம் ஒவ்வொருவரும் நல்ல சுற்றுச்சூழல் மிக்க உலகிற்கான நமது பங்களிப்பை நல்கிட வேண்டும்.

நன்றி: தினமணி (13 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்