TNPSC Thervupettagam

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்

June 22 , 2020 1669 days 723 0
  • தமிழகத்தில் மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் கோரப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  • இந்த விவகாரத்தில் வழக்குகளைக் காரணம் காட்டியும், வெவ்வேறு யோசனைகளை முன்வைத்தும் நடத்தப்படும் விவாதங்களானவை இடஒதுக்கீட்டை இழுத்தடிப்பதாக அமையுமே அன்றி, பாதிக்கப்படும் மாணவர்களுக்கு எந்த வகையிலும் நியாயம் அளிக்காது.
  • அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று மருத்துவக் கல்வி மேற்படிப்பு ஒழுங்குமுறைகள் 2018 தெரிவித்தது.
  • அந்த ஒழுங்குமுறையைப் பின்பற்றி, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் பலவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
  • இவ்வழக்கில், பதில் மனு தாக்கல் செய்துள்ள சுகாதார அமைச்சகத்தின் வாதங்கள் குழப்பத்தை உண்டாக்குவனவாக இருக்கின்றன. ஒருபுறம், பிற்படுத்தப்பட்டோருக்கு மாநிலங்கள் அளிக்கும் இடஒதுக்கீட்டை, மொத்த இடஒதுக்கீட்டில் 50%-க்கு மிகாமல் அளிப்பதற்கு முன்வருவதாகச் சொல்லி, சிக்கலான ‘ரோஸ்டர் முறை’யை அது பேசுகிறது.
  • மறுபுறம், மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதைக் காரணம் காட்டி, அவ்வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறது.
  • எப்படியும் நடப்புக் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக இடங்கள் நிரப்பப்பட்டுவிட்ட நிலையில், இனிமேல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அளிப்பது சாத்தியமல்ல என்று அது கூறுகிறது.

இதில் தாமதம் கூடாது

  • இது ஏற்புடையது அல்ல. மேற்படி வழக்கு நிலுவையைக் காரணம் காட்டியே, அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
  • அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறையானது மதிக்கப்பட வேண்டும்.
  • இரண்டு சுற்றுகளாக மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன என்றாலும், இடஒதுக்கீட்டுக்கு இந்த ஆண்டிலேயே வாய்ப்பளிக்கும் விதமாகக் கூடுதல் இடங்களை உருவாக்கலாம். சமூக நீதியை எதன் பெயராலும் நிராகரிக்கக் கூடாது.
  • அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையின் கீழாக தமிழகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பிலும் அனுமதிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அவற்றை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். இதில் எந்தத் தாமதமும் கூடாது!

நன்றி: தி இந்து  (22-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்