TNPSC Thervupettagam

மருத்துவக் கழிவுகளில் கவனம் தேவை

August 7 , 2021 1091 days 512 0
  • கொள்ளை நோய்த்தொற்றால் உருவாகும் மருத்துவக் கழிவுகள் மூலம் ஆபத்து உண்டாகும் என்பதனால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்தக் கழிவுகளை "அபாயகரமான உயிரியல் மருத்துவக் கழிவுகள்' என வகைப்படுத்தியது.
  • மார்ச் 2020 முதல் அவ்வப்போது, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
  • மருத்துவமனைகள், சுகாதார முகாம்கள், பிணவறைகள், மருத்துவ ஆய்வகங்கள், பிற மருத்துவ நிறுவனங்கள் இவற்றிலிருந்து அபாயகரமான கொவைட் 19 மருத்துவக் கழிவுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் சேகரிக்கப்பட்டு, மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு செய்யப் படும் இடங்களுக்கு எடுத்துச்சென்று அகற்றப்படுவதனை உறுதி செய்யும் வகையில் இவ்வழிகாட்டு நெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டன.
  • கொவைட் 19 மருத்துவக் கழிவுகள் வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மருத்துவக் கழிவு மேலாண்மைக்கென ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது.
  • அந்தச் செயலியின் தரவு ஒன்று, 2020 மே மாதம் முதல் 2021 மே மாதம் வரையிலான ஓராண்டில் நாடு முழுவதும் சுமார் 46,000 டன் கொவைட் 19 கழிவுகள் உருவாகியுள்ளதாகக் கூறுகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்றின் முதல் அலை ஒரு நாளைக்கு 126 டன் கழிவுகளை உருவாக்கியுள்ளது.
  • இது நாடெங்கும் ஒருநாளில் உருவாகக்கூடிய மொத்த மருத்துவக் கழிவான 614 டன்னில் 20% ஆகும்.

செயல்திறனை விரைவுபடுத்துவோம்

  • இந்தியாவில் மொத்தம் 198 இடங்களில் மருத்துவக் கழிவை சுத்திகரிக்கவும், அதனை அகற்றவும் வசதி இருப்பதாகவும், இந்த இடங்களில் ஒருநாளில் 826 டன் மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்க முடியும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டு ஜனவரியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது.
  • 22 மாநிலங்களில் அவை கையாளக்கூடியதை விட அதிகமான மருத்துவக் கழிவுகள் உருவாவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021-ஆம் ஆண்டு ஜனவரி, மே மாத அறிக்கைகளின் பகுப்பாய்வு கூறுகிறது.
  • 2021-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது உற்பத்தியான மருத்துவக் கழிவுகளில் 33% கழிவுகள் கொவைட் 19 மருத்துவக் கழிவுகளே.
  • அதிகபட்சமாக ஹரியாணா மாநிலத்தில் மொத்த மருத்துவக் கழிவுகளில் 47% கழிவுகள் கொவைட் 19 மருத்துவக் கழிவுகளாக இருந்தன.
  • கொள்ளை நோய்த்தொற்றின் முதல் அலை உச்சம் பெற்றபோது ஒரு நாளில் உற்பத்தியான கொவைட் 19 கழிவுகள் 183 டன் என்றும், இரண்டாம் அலை உச்சம் பெற்ற போது அது 203 டன்னாக அதிகரித்தது என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
  • முதல் அலையுடன் ஒப்பிடும் போது இரண்டாவது அலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 சதவீதம் அதிகரித்த போதிலும், தனிநபர் கொவைட் 19 மருத்துவக் கழிவு உற்பத்தி (நோய்த்தொற்று பாதித்த நபரால் உருவாக்கப் படும் மருத்துவக் கழிவுகள்) முதல் அலையில் உருவானதைவிட நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் கூறுகின்றன.
  • 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2.09 கிலோவாக இருந்த தனிநபர் நோய்த்தொற்று மருத்துவக் கழிவு, 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் 0.49 கிலோவாகக் குறைந்து விட்டது.
  • முறையாகப் பிரிக்கப்பட்ட காரணத்தால் கொவைட் 19 மருத்துவக் கழிவு முதல் அலையுடன் ஒப்பிடும்போது வெகுவாக குறைந்ததாக மே 11, 2021 அன்று வெளியான கழிவு மேலாண்மை நிலை அறிக்கையினில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
  • கரோனா நோயாளிகளைக் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பற்றிய விவரங்களை மருத்துவக்கழிவு மேலாண்மை செயலியில் பதிவிட வேண்டும் என்பது விதி.
  • 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகபட்சமாக 1,00,000 குடும்பங்கள் பற்றிய தரவுகள் பதிவிடப் பட்டன. உலகின் புதிய கரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோரை இந்தியா கொண்டிருந்த மே 2021-இல் 5,084 பேரின் தரவுகள் மட்டுமே இச்செயலியில் பதிவிடப் பட்டிருந்தன.
  • மருத்துவக் கழிவுகள் வண்ணக் குறியீடுகள் கொண்ட பைகளில் பிரிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மையத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
  • சுத்திகரிப்பிற்குப் பின் சிவப்பு, நீலம், வெள்ளை நிறப் பைகளில் வரும் கழிவுகள் தொற்று நீக்க செயல்பாடுகளுக்குப் பிறகு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
  • மருத்துவக் கழிவுகளில் மஞ்சள் பைகளில் நிரப்பப்பட்டிருக்கும் நோயியல், ஆய்வகக் கழிவுகள் மட்டுமே எரிக்கப்படுகின்றன.
  • கொவைட் 19 கழிவுகளை அகற்றும் போது மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதி நெறிமுறையை மருத்துவமனைகள் பின்பற்றுகின்றன.
  • ஆனால் கொவைட் 19 நோயாளிகள் வீட்டினில் தனிமைப்படுத்தப்படும்போது மருத்துவக் கழிவுகள் பிரிக்கப்படுவதில்லை.
  • 2021 ஜூன் வரை 28.9 கோடி இந்தியர்கள் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளனர். இது ஒரு நல்ல செய்தி என்றாலும், தடுப்பூசி வகையைப் பொருத்து ஒவ்வொரு 10 அல்லது 20 தடுப்பூசிகளுக்கு ஒரு கண்ணாடி குப்பியும், ஊசியும் மருத்துவக் கழிவுகளாக உருவாகின்றன.
  • இந்த ஆண்டு இறுதியில், நம் நாட்டில் 130 கோடிக்கும் அதிகமான பயன்படுத்தப்பட்ட ஊசிகளும் 100 கோடிக்கும் அதிகமான கண்ணாடி குப்பிகளும் உருவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த மருத்துவக் கழிவுகளை எரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இவற்றை மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கு முன்பு தொற்றுநீக்கம் செய்யப்பட வேண்டியது கட்டாயம்.
  • 1,06,600-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகளைக் கணக்கிட இன்னும் பழைய நடைமுறைகளே கையாளப் படுகின்றன.
  • மருத்துவக் கழிவு குறித்த தரவுகளை மருத்துவக்கழிவு மேலாண்மைச் செயலியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • இதன் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான செயல்திறனை விரைவுபடுத்த இயலும்.

நன்றி: தினமணி  (07 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்