TNPSC Thervupettagam

மருத்துவக் காப்பீடு: விலையும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்

May 1 , 2024 255 days 231 0
  • காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை ஒழுங்காற்று அமைப்பான காப்பீட்டு ஒழுங்காற்றுதல் மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI - இர்டாய்), 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும், மூத்த குடிமக்களுக்குப் பொருத்தமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
  • ‘இர்டாய்’ வெளியிட்ட காப்பீட்டு நிறுவன ஒழுங்குமுறைகள் 2024, பல சீர்திருத்த நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் மருத்துவக் காப்பீட்டுக்கான அதிகபட்ச நுழைவு வயதை அதிகரிப்பது கவனம் ஈர்த்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் முதியோர் மற்றும் மூத்த குடிமக்களின் (60 வயதுக்கு மேற்பட்டோர்) பங்கு கணிசமாக அதிகரித்துவருகிறது.
  • 2011க்குப் பிறகு அதிகார பூர்வ மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றாலும், ஐ.நா. மக்கள்தொகை நிதியம்-மக்கள்தொகை நிபுணர்களின் கணிப்பின்படி இந்திய மக்கள்தொகை, சீனாவின் மக்கள்தொகையை 2023இல் கடந்திருக்கக்கூடும்.
  • ஐ.நா கணிப்பின் அடிப்படையில் 2023இல் வெளியிடப்பட்ட இந்திய முதுமை அறிக்கையின்படி (Indian Ageing Report), இந்திய மக்கள்தொகையில் மூத்த குடிமக்களின் பங்கு 2022இல் 10%ஆக இருந்தது (14.9 கோடி); 2050இல் இது 30%ஆக அதிகரிக்கக்கூடும் (34.7 கோடி). இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம். இந்தப் பின்னணியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் மருத்துவக் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
  • வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றின் மக்கள்தொகையில் மூத்த குடிமக்களின் விகிதம் ஏற்கெனவே 16இலிருந்து 28% வரை உள்ளது. இந்த நாடுகளில் முதியோருக்கான தரமான மருத்துவ சேவை, மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வது, பராமரிப்புச் சேவைகள் ஆகியவை சவால்களாக முன்னிற்கின்றன. இத்தகைய பல நாடுகளில் புதிய மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஆனால், வயது அதிகரிப்பதற்கேற்பக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கு முன்பும் குறிப்பிட்ட சில காப்பீட்டு நிறுவனங்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீட்டை வழங்கிவந்தன. இப்போது வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் இதைப் பரவலாக்கக்கூடும். இதன் மூலம் காலப்போக்கில் அனைத்து நிறுவனங்களும் மருத்துவக் காப்பீட்டுக்கான நுழைவு வயதை 75 அல்லது 99ஆக மாற்றி அமைக்கும் சூழல் உருவாகலாம்.
  • 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்னும் இலக்கை இர்டாய் நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த அமைப்பு காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் பிரீமியம் தொகையில் தலையிடுவதில்லை. இதனால் உயர்ரக சிகிச்சைகளுக்கும் பொருந்தக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.
  • ஒருவர் பெயரில் எடுக்கப்படும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவரது பெற்றோர், இணையர், குழந்தைகள் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையிலான ‘ஃபேமிலி ஃப்ளோட்டர்’ திட்டங்களின் பிரீமியம் தொகை இந்திய மக்கள்தொகையில் ஒற்றை இலக்க விகிதத்தில் இருக்கும் பொருளாதார உயர் வர்க்கத்தினருக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும்.
  • 65 வயதுக்குள் காப்பீடு பெறத் தவறிவிட்டவர்களைக் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டுவரும் முயற்சியாக மட்டுமே இந்தப் புதிய ஒழுங்குமுறை சுருங்கிவிடக் கூடாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உகந்த மலிவு விலைக் காப்பீட்டுத் திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ‘அனைவருக்கும் காப்பீடு’ என்னும் இலக்கு முழுமையான அர்த்தத்தைப் பெறும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்