- இந்தியாவின் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவிப்புகளும், அரசின் செலவைக் குறைக்கும் முன்னெடுப்புகளும் இந்த பட்ஜெட்டில் அதிகம் தெரிகின்றன. அதே வேளையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுச்சமூகத்தின் ஆரோக்கியம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
- பொதுவாக, நாட்டில் பொதுச் சுகாதார வளர்ச்சி இல்லாமல் பொருளாதார வளர்ச்சியைக் காண்பது கடினம். இந்த ஆண்டின் பட்ஜெட், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மக்களின் ஆரோக்கியத்தை ஒரு முக்கிய முதலீடாக அங்கீகரிக்கும் என்றும், நாட்டின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மேம்பட்ட அளவில் நிதியைக் கொடுக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
- ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு நெம்புகோலாக இருக்கும் மருத்துவத் துறையைக் கட்டி எழுப்புவதற்கான பெரிய திட்டங்கள் எதுவும் இதில் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. ஏற்கெனவே, கோவிட்-19 தொற்றுநோய், இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்களையும், பொதுச் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதில் உள்ள பலவீனத்தையும் தெளிவாகக் காண்பித்துள்ளது. இதிலிருந்து இந்தியா இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது.
விரிவான அறிவிப்புகள் இல்லை!
- 2024 இடைக்கால பட்ஜெட்டில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9-14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு ‘ஹெச்பிவி’ (HPV) தடுப்பூசி போடுவதை அரசு ஊக்குவிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமான தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தைப் பரவலாக்க ‘யூ-வின்’ (U-WIN) தளத்தை உருவாக்கவும், ஆஷா (ASHA) பணியாளர்களையும் அங்கன்வாடிப் பணியாளர்களையும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாகச் சேர்க்கவும் அதில் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், புதிய பட்ஜெட்டில் இவை குறித்து விவரிக்கப்படவில்லை. இவற்றுக்கான நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
- நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அதிகம் திறக்கப்படும் என்று பொதுவாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அங்கு பல அடுக்கு சார்ந்த திறமையுள்ள மருத்துவ மனித வளத்தைப் பெருக்கவும், ஆய்வுக்கூட வசதிகளைக் கூட்டவும் வழிமுறைகள் சொல்லப்படவில்லை.
சுகாதாரப் பணிக்கான நிதியில் சரிவு:
- நாட்டில், பொதுச் சுகாதாரப் பலன்களை மேம்படுத்த ஆரம்பச் சுகாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. மார்ச் 2022இல், சுகாதாரம் - குடும்ப நலன் தொடர்பான நிலைக்குழு, தேசியச் சுகாதாரப் பணிகள் கழகத்தின் (National Health Mission) அதிக அளவிலான பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, ஆரம்பச் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்குப் பரிந்துரைத்தது.
- காரணம், பலதரப்பட்ட தேசியச் சுகாதாரத் திட்டங்கள் தேசியச் சுகாதாரப் பணிகள் கழகத்தின் கீழ்தான் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, 2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்கவும், குழந்தை இறப்பு விகிதம் (IMR), ரத்தசோகையின் பாதிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் இக்கழகம் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. அவற்றின் எல்லைகளைத் தொட இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் நிலையில், இந்த இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
- இக்கழகம் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 25க்கும் குறைவான இறப்புகளே இருக்க வேண்டும் என்னும் இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 28 இறப்புகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 5ஆவது தேசியக் குடும்பநல ஆய்வின்படி (NFHS-5) 2019-21இல் மட்டும் 15 முதல் 49 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 53% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பெண்களிடம் காணப்படும் ரத்தசோகையும், ஊட்டச்சத்துக் குறைவும் பொது ஆரோக்கியத்தின் முக்கியக் குறியீடுகளாகும். ஏனெனில், இவை பெண்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதைக் குறிக்கின்றன. இந்தப் பாதிப்புகளை ஆரம்பச் சுகாதார நிலையங்களில், முதன்மைப் பராமரிப்பிலேயே கவனித்துக் களைந்துவிட முடியும். போதுமான நிதியும் மருத்துவ வளமும் மட்டுமே தேவை!
- இந்த நிலையில், சுகாதாரம் - குடும்ப நலன் தொடர்பான நிலைக்குழுவின் பரிந்துரையைப் பரிசீலிக்காமல், இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்தச் சுகாதாரத் துறை அமைச்சகத்துக்குக் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கியதைவிட 1.98 சதவீதமும், தேசியச் சுகாதாரப் பணிகள் கழகத்துக்கு 1.16 சதவீதமும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்துக்கு 1.4 சதவீதமும்தான் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்றும், PMJAYயின் நோக்கத்தின்படி, ஒவ்வொரு இந்தியரும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாது என்றும் மருத்துவத் துறைத் திட்டப் பணி ஆளுமைகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன?
- இந்த பட்ஜெட்டில் வரவேற்கப்பட வேண்டிய அம்சம், டிரஸ்டுஜுமாப் (Trastuzumab), துர்வாலுமாப் (Durvalumab), ஒசிமெர்டினிப் (Osimertinib) ஆகிய மூன்று முக்கியப் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருப்பதுதான். டிரஸ்டுஜுமாப் மருந்தின் ஆண்டு வருவாய் ரூ.276 கோடி.
- துர்வாலுமாபின் ஆண்டு வருவாய் ரூ.28.8 கோடி. ஒசிமெர்டினிபின் ஆண்டு வருவாய் ரூ.52.26 கோடி. இந்த அளவுக்கு அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது ஓர் ஆக்கபூர்வமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கான மருந்துச் செலவு பல லட்சங்களைத் தாண்டுகிறது. ஆண்டுக்குச் சுமார் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் தேவைப்படுகின்றன.
- இந்தச் சூழலில் ஒரு மருந்துக் குப்பிக்கு ரூ.16,000 வரை விலை குறைகிறது என்பது பயனாளிகளுக்குப் பொருளாதாரச் சுமையைக் கொஞ்சமாவது குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. புற்றுநோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு இது உதவக்கூடும்.
- மேலும், மருந்துத் தொழிலுக்கு ரூ.2,143 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி - இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டமும் (Production Linked Incentive Scheme – PLI) அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு மருந்து உற்பத்தித் திறன்களை மேம்படுத்த உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அடுத்ததாக, எக்ஸ்ரே குழாய்கள், அவற்றின் பாகங்கள் மீதான தனிப் பயன் வரி விகிதங்களும் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தப்பட்ட வரி விகிதங்கள், மலிவு விலையில் எக்ஸ்ரே குழாய்ப் பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய சாத்தியம் உண்டு. இது எக்ஸ்ரே இயந்திரத் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- மேலும், இந்த மாற்றம் உள்நாட்டு மருத்துவச் சாதனங்களின் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கும், பயனாளியின் சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவலாம். இது போன்ற விலைக் குறைப்பு நடவடிக்கைகள் இன்னும் பலதரப்பட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கும் நவீன மருத்துவச் சாதனங்களுக்கும் தேவைப்படுகின்றன என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
என்ன செய்யலாம்?
- பொதுச் சுகாதாரத்துக்கான அரசின் ஒட்டுமொத்த செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 2.5% ஆக இருக்க வேண்டும் என்று தேசியச் சுகாதாரக் கொள்கை - 2017 முன்மொழிந்தது.
- இது இன்னும் எட்டப்படவில்லை என்பது பெருங்குறை. ‘லான்செட்’ அறிவிப்பின்படி, அமெரிக்கா (22.4%), இங்கிலாந்து (19.7%), ஜெர்மனி (20.1%), ரஷ்யா (10.2%), பிரேசில் (10.5%), தென்னாப்ரிக்கா (15.3%), மலேசியா (8.5%) போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு (1.2%) மிகமிகக் குறைவு.
- பசித்து அழும் குழந்தைக்குச் சோறு தர வேண்டுமே தவிர, சோளப்பொரி கொடுத்தால் பிரச்சினை தீராது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பட்ஜெட்டில் அரசின் மருத்துவச் செலவினத்தை உயர்த்துவது, முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மருத்துவத் துறையினர் உடனடியாக எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2024)