TNPSC Thervupettagam

மருத்துவர்களும் மறந்த கொலஸ்ட்ரால்

September 30 , 2023 469 days 345 0
  • அண்மைக் காலமாகப் பிரபலங்கள் பலர் மாரடைப்பால் திடீரென இறந்துவிடுகிறார்கள். இளம் வயதினர், மருத்துவர்கள்கூட 30-40 வயதுகளில் மாரடைப்பால் திடீரென இறக்கிறார்கள். தினமும் வந்தடையும் இத்தகைய மாரடைப்புச் செய்திகள், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • மாரடைப்பால் இறப்பவர்களுக்கு எந்த நோயும், கெட்ட பழக்கமும் இல்லையே என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். இன்னும் சிலர், 'கோவிட் தடுப்பூசி' போட்டதன் விளைவு என்று புரளியை வேறு கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இம்மாதிரியான ஊகங்களில் உண்மை இல்லை என்பது, சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏன்

  •  ‘இதயம் சார்ந்த திடீர் இறப்புகள்’ (Sudden Cardiac Death) ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மரபணு / பிறவி இதயக் கோளாறுகள், இதயத்தசை பிரச்சினைகள், சீரில்லாத இதயத்துடிப்பை உண்டாக்கும் நோய்கள்,பிறவி இதயத் தமனி நோய்கள் / இதயத் தமனிச் சுருக்க - அடைப்பு நோய்கள், இதய வால்வு நோய்கள், நுரையீரல் ரத்தநாள அடைப்பு பாதிப்பு, தாங்க முடியாத திடீர் மன அழுத்தம் ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

கொலஸ்ட்ரால் பரிசோதனைகள்

  • கொலஸ்ட்ரால் பரிசோதனை என்றால், உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவை மட்டுமே பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
  • அதன் பின்னர் நல்ல கொலஸ்ட்ரால் (HDL), கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என்று ஆரம்பித்து விஎல்டிஎல், டிரைகிளிசரைடு, அபோலிபோ புரோட்டீன் வரை பரிசோதனை செய்யத் தொடங்கினோம்.
  • இந்தப் பரிசோதனைகளில் பிரச்சினை என்னவென்றால், லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ராலை மட்டும் மருத்துவர்களே பரிசோதனைக்கு அவ்வளவாகப் பரிந்துரைப்பது கிடையாது. இதனால், நோயாளிகளுக்கும் இது குறித்துத் தெரிவதில்லை.
  • லிபோபுரோட்டீன் (a) என்பதைச் சுருக்கமாக Lp(a) என்று அழைப்பார்கள். இவை மரபணுரீதியாக நமக்குக் கடத்தப்படுகின்றன. லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ரால் என்பது எல்டிஎல் (LDL) கொலஸ்ட்ரால் போலவே கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். இவை கல்லீரலில் உருவாகின்றன.

லிபோபுரோட்டீன் பரிசோதனை ஏன் அவசியம் 

  • ஆர்தர் ஆஷ் என்கிற சிறந்த டென்னிஸ் வீரருக்கு 36 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டது. ஆர்தர் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன் முறையான உடற்பயிற்சிகளையும் செய்பவர். எந்த நோய்க்கும் ஆளாகாமல் இருந்தபோதுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை ஆராய்ச்சி செய்ததில் அவருக்கு லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்ததே காரணம் எனக் கண்டறியப்பட்டது.
  • இளம் வயதினருக்கு இந்த கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருந்தால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
  • லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 முதல் 4 மடங்கு சாத்தியம் அதிமாக உள்ளது.
  • நமது நாட்டில் சுமார் 25% மக்களுக்கு இவ்வகை கொலஸ்ட்ரால் 50 மிகி/டெ.லி அளவிற்கும் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
  • எரியும் எண்ணெய்யில் நெய்யை ஊற்றியது போல, நாம் ஏற்கெனவே நீரிழிவு தொடங்கி பல்வேறு இணை நோய்களைக் கொண்டு, தொற்றா நோய்களுக்கு இருப்பிடமாகி உள்ளோம். இதற்கிடையில் இதய நோய்க்கான காரணிகளையும் அதிகமாகக் கொண்டிருக்கிறோம்.

லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ரால் அதிகரிப்பது எதனால் 

  • இந்த கொலஸ்ட்ராலின் அளவு மரபணுவை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். அதாவது நமது உடலிலுள்ள சில மரபணுக்கள் இதன் அளவை தீர்மானிக்கின்றன. ஜப்பான், சீனா ஆகிய நாட்டு மக்களின் ரத்தத்தில் லிபோபுரோட்டீன் (a) அளவு குறைவாக இருக்கிறது.
  • ஆப்பிரிக்க இன மக்களின் ரத்தத்தில் இது அதிகமாக இருக்கிறது. மரபணுவால் ரத்தத்தில் அதிக அளவுள்ள இந்த கொலஸ்ட்ரால் வாழ்நாள் முழுவதும் மாறாது.
  • ஆனால் மரபணு காரணமில்லாமல் வேறு பல உடல் நோய்களால் இதன் அளவு அதிகரிக்கலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD), நெஃப்ரோடிக் சிறுநீரக நோய், ஹைபோ தைராய்டிசம் ஆகிய நோய்களிலும் இதன் அளவு அதிகரிக்கும்.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/30/16960417552006.jpg

எல்டிஎல் - லிபோபுரோட்டீன் (a) விளக்கப் படம்

லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ரால் எப்படி வில்லனாகிறது 

  • இந்த கொலஸ்ட்ரால், ரத்த நாளத்தின் உட்புறத்தில், பிற எல்.டி.எல். கொலஸ்டிராலை விட அதிகமாகவும் எளிதிலும் ஒட்டும்தன்மை கொண்டவை. எனவே, எல்.டி.எல். கொலஸ்டிராலைவிட இவை அதிக ஆபத்தானவையாக கருதப்படுகிறது.
  • இவை இதய ரத்தநாள உள்சுவர்களைப் பாதிக்கும். இதனால், அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இவை மூளை பாதிப்பையும் இதயச் செயலிழப்பையும் ஏற்படுத்தும். ரத்த உறைவுத்தன்மையையும் ஏற்படுத்தும்.
  • ரத்தத்தில் இதன் அளவு 50 மிகி/டெ.லி அளவிற்கும், அதற்கு மேலாகவும் உயரும்போது, அது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். இதன் அளவு 14 மிகி/டெ.லி அளவிற்கும் குறைவாக இருந்தால் இதயம் பாதுகாக்கப்படும். 14-30 மிகி/டெ.லி வரை இருந்தால் இதய பாதிப்பு ஏற்பட சிறிதளவு வாய்ப்பு உள்ளது.

ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்

  • ரத்தத்தில் இப்பரிசோதனை செய்வதற்குக் குறைந்தது எட்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவு, பிற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். லிபோபுரோட்டின் (a) கொலஸ்டிராலுடன், உடலில் உள்ள அனைத்து கொலஸ்டிரால் வகைகளின் அளவுகளையும் கணக்கிட வேண்டும்.
  • மேலும், பொதுவான ரத்தப் பரிசோதனைகள், ரத்த சர்க்கரை அளவுகள், சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவும் பரிசோதனைகள், தைராய்டு பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

  • இதயத்தைப் பாதித்து மாரடைப்பை ஏற்படுத்தும் அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றிற்கு முறையாகச் சிகிச்சை செய்வது முக்கியமானதாகும்.
  • கல்லீரல் சுரக்கும் 'பிசிஎஸ்கே 9' நொதியின் (PCSK9 inhibitors) செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகளைக் கொண்ட சிகிச்சைகள், லிபோபு ரோட்டீன் அபெரிசிஸ் (Lipoprotein Apheresis) ஆகியவை தற்சமயம் முயற்சியில் உள்ளன.
  • மரபணு சிகிச்சை முறைகள் ( Gene Silencing techniques) ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன.

எப்படித் தடுக்கலாம் 

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/30/16960418412006.jpg

  • லிபோபுரோட்டீன் (a) கொலஸ்ட்ரால் அளவுகள் மரபணுவுடன் தொடர்புடையவை என்பதால், அதன் அளவைக் குறைப்பதற்கு உணவு முறையில் மாற்றம், உடற்பயிற்சி செய்தல் ஆகியவை பயன்படாது. இருப்பினும், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்தலாம்.
  • சிலருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய், நெஃப்ரோடிக் சிறுநீரக நோய், ஹைபோ தைராய்டிசம் நோய்களினாலும் இவை அதிகரிக்கும் என்பதால் அவற்றுக்கு முறையாக சிகிச்சை செய்வது அவசியமாகும்.
  • அதிக எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கெடுதல் செய்யும் கொழுப்பு உள்ள உணவுகள், புகைபிடித்தல், மது அருந்துதல், மனச்சோர்வு, உறக்கமின்மை ஆகியவை மாரடைப்புக்கு எளிதில் வழிவகுக்கும் என்பதால் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மேலும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு குறைபாடு ஆகிய பாதிப்புகளையும் முறையாக சிகிச்சை செய்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • வாரத்திற்கு ஐந்து முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு உகந்த சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்து மிகுந்த தானிய உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன் உணவுகளும் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி,போன்றவை) இவர்களுக்குச் சிறந்தது.
  • புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களைக் கைவிட வேண்டும். அதிக உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இடையூறு இல்லாத 7-8 மணி நேர உறக்கம் அவசியம். இவை இதய நோய், மாரடைப்பு அபாயத்தை நன்கு குறைக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்