TNPSC Thervupettagam

மருத்துவர் பற்றாக்குறை: உடனடித் தீர்வு அவசியம்!

November 13 , 2024 10 hrs 0 min 6 0

மருத்துவர் பற்றாக்குறை: உடனடித் தீர்வு அவசியம்!

  • தமிழக அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு - மகளிர் நலச் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையால், பணியில் இருக்கும் மருத்துவர்கள் ஓய்வின்றி 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிலநேரம் வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள்கூடத் தொடர்ந்து பணியில் இருக்கும் சூழலும் அமைந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இது மருத்துவர்களை மட்டுமல்லாமல், சிகிச்சை பெறுவோரையும் பாதிக்கிறது. ஓய்வே இல்லாமல் மருத்துவர்களைப் பணியாற்ற நிர்ப்பந்திப்பது அவர்களது பணி உரிமைகளுக்கு எதிரானது. மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு 48 மணி நேரம்தான் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம். நெருக்கடி நிலையிலோ, தவிர்க்க முடியாத அசாதாரண சூழலிலோ சிலர் கூடுதல் நேரம் பணியாற்ற நேரிடலாம்.
  • ஆனால், வரையறுக்கப்பட்ட பணி நேரத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுவதால், கடந்த 10 ஆண்டுகளில் பல மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியிருக்கிறார்கள். விருப்ப ஓய்வுத் திட்டம் இல்லாத நிலையில், பலருக்கு வேலையை விடுவதைத் தவிர வேறு வழியிருப்பதில்லை. அதேபோல் ஒரு மகப்பேறு மருத்துவர் மகப்பேறு விடுப்பில் சென்றால், அவரது இடத்தைப் பதிலீடு செய்வதற்கும் ஆள்கள் இருப்பதில்லை.
  • அரசு மருத்துவமனைகளில் இயங்கும் பெரும்பாலான ‘விரிவான அவசர கால மகப்பேறியல், பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு மைய’ங்களில் குறிப்பிட்ட சில சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில் பல ஆண்டுகளாக மருத்துவர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது மருத்துவர் - மக்கள் நலனில் அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது.
  • மருத்துவர்கள் பற்றாக்குறை, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்றவற்றால், பணியில் சேராத முதுகலை மருத்துவ மாணவர்களை அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும்வரை பணியில் ஈடுபடுத்துவதும் நடைபெறுகிறது. பணியில் இருக்கிற சொற்ப மருத்துவர்களே அனைத்தையும் கையாள்வதால் பணிச்சுமையோடு உளவியல் நெருக்கடிக்கும் மருத்துவர்கள் ஆளாக நேரிடுகிறது.
  • பிரசவத்தின்போது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 45.5 குழந்தைகள் இறக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையை இரண்டு ஆண்டுகளுக்குள் பத்துக்கும் கீழே குறைத்துவிடுவது என்று அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால், மகப்பேறியல் - மகளிர் நலச் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையால் இந்த இலக்கை எட்டுவதும் கடும் சவாலாக மாறியிருக்கிறது.
  • மகப்பேறியல் - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில், ஒரு மருத்துவர் ஒரு நேரத்தில் ஒருவரைத்தான் கவனிக்க முடியும். அப்போதுதான் தாய் - சேய் இருவரது உயிரும் நலனும் காக்கப்படும். ஆனால், தற்போதைய சூழலில் மருத்துவர் ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது, நான்கு பேர் காத்திருப்பில் இருக்கிறார்கள். பிரசவகாலக் காத்திருப்புகள் உயிராபத்து நிறைந்தவை.
  • ஒரு மையத்தில் சராசரியாக நான்கு மகப்பேறு - மகளிர் சிகிச்சை நிபுணர்களும் அதே எண்ணிக்கையில் குழந்தை நல மருத்துவர்களும் இரண்டு மயக்கவியல் நிபுணர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மையங்களில் ஒரு மகப்பேறு மருத்துவரும் ஒரு தலைமைச் செவிலியும்தான் இருக்கிறார்கள்.
  • பாதுகாப்பான பிரசவத்தை உறுதிசெய்வதற்காக அனைத்துப் பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடைபெற வேண்டும் என அரசு வலியுறுத்திவருகிறது. அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களில் 80% ‘விரிவான அவசரகால மகப்பேறியல், பச்சிளங் குழந்தை பராமரிப்பு மைய’ங்களில் நடைபெறுகின்றன.
  • அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், மருத்துவர்களின் எண்ணிக்கை மட்டும் 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட அளவிலேயே இருப்பது சரியல்ல. போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். வலுவான மருத்துவக் கட்டமைப்பு கொண்ட அரசின் தலையாய கடமை இது.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்