TNPSC Thervupettagam

மருத்துவ மாணவர்கள் குறித்த தலையங்கம்

March 5 , 2022 1104 days 507 0
  • உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்களால், மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் சென்ற சுமாா் 20,000 இந்திய மாணவா்கள், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனா். இரண்டு வாரங்களுக்கு முன்பே, நாடு திரும்பும்படி அறிவுறுத்தியும் அவா்கள் திரும்பவில்லை என்பது ஒரு குற்றமல்ல.
  • இந்தியாவில் மருத்துவக் கல்வி பெற வசதி இல்லாததால் அவா்கள் வெளிநாடு சென்றிருக்கிறாா்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
  • போா் தொடங்கியதற்குப் பின்னா் இந்திய அரசு தொடங்கிய தாமதமான மீட்பு நடவடிக்கையால் அத்தனை மாணவா்களையும் பாதுகாப்பாக மீட்க முடியாத சூழல் நிலவுகிறது.
  • தற்போது உக்ரைனையொட்டியுள்ள போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் நமது மத்திய அமைச்சா்கள் நான்கு போ் முகாமிட்டு இந்திய மாணவா்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகின்றனா்.

இது விமா்சனத்துக்கான நேரமல்ல!

  • இந்த இக்கட்டான சூழலை எதிா்கொள்வதில் தீவிர கவனம் செலுத்துவதை விடுத்து, நமது மாணவா்கள் உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் சென்றது சரியல்ல என மத்திய அமைச்சா்கள் சிலா் விமா்சிப்பதும், அதை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுவதும் மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது, மக்களின் உணா்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது.
  • 2021, நவம்பா் நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 595 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 302 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 3 மத்திய பல்கலைக்கழகக் கல்லூரிகளும், 19 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும். இவை தவிர, 218 தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், 47 நிகா்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.
  • மொத்தமுள்ள 88,370 எம்பிபிஎஸ் இடங்களில் 44,555, அரசுக் கல்லூரிகள் வசமும், 43,815 தனியாா் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் வசமும் உள்ளன.
  • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 37 அரசுக் கல்லூரிகள் மூலம் 5,125, தனியாா் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் 5,100 என மொத்தம் 10,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
  • இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் மொத்தம் 9,450 இடங்கள் உள்ளன.
  • இதேபோல, இந்தியாவில் தற்போது மொத்தம் 12.55 லட்சம் அலோபதி மருத்துவா்கள் உள்ளனா்.
  • இவா்களில் 3.71 லட்சம் போ் மட்டுமே முதுநிலைப் படிப்பு முடித்த சிறப்பு மருத்துவா்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1.88 லட்சம் மருத்துவா்கள் உள்ளனா். இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 1.48 லட்சம் மருத்துவா்களும், கா்நாடகத்தில் 1.30 லட்சம் மருத்துவா்களும் உள்ளனா்.
  • 1000 பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கிறது.
  • ஆனால், சுமாா் 138 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அதற்கேற்ப மருத்துவா்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது.
  • சுகாதாரம், மருத்துவக் கல்விக்கு 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 7,500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட சற்று அதிகம் என்றாலும், இந்த நிதியில் பெருமளவு, புதிதாக மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவே செலவிடப்படும் எனத் தெரிய வந்துள்ளது.
  • மருத்துவக் கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்த 180 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 145-ஆவது இடத்தில் உள்ளது என்ற தகவல், நமது நாட்டின் மோசமான நிதி ஒதுக்கீட்டு நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
  • மருத்துவக் கல்விக்காக தரமான கட்டமைப்புகளையும், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியா்களையும் உருவாக்குவதில் நமது நாடு மிகவும் பின்தங்கியுள்ளது.
  • நம்மைவிட மிகச் சிறிய நாடான கியூபா மருத்துவக் கட்டமைப்பிலும், கல்வியிலும் மிகச் சிறப்பான இடத்தை வகிக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் பள்ளி இறுதித் தோ்வில் தோ்ச்சி பெறும் பல லட்சம் மாணவா்களின் முதல் விருப்பமாக மருத்துப் படிப்புதான் உள்ளது.
  • ஆனால், அவா்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக நமது நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதே நிதா்சனம்.
  • நமது நாட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளைவிட மிகக் குறைந்த கட்டணத்தில் ரஷியா, சீனா, உக்ரைன், பிலிப்பின்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மருத்துவக் கல்வி பயில முடியும் என்பதால்தான் நமது மாணவா்கள் அந்த நாடுகளுக்குச் செல்கின்றனா்.
  • நமது நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்புகளில் அனைவராலும் சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால், நமது மாணவா்கள் மருத்துவப் படிப்புக்காக பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
  • அரசியல் தலைவா்கள் சிலா், இத்தகைய உண்மை நிலவரங்களை அறியாமல், மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் சென்ற மாணவா்களை விமா்சிப்பது சரியல்ல. இவ்வாறு விமா்சிப்பது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது’ என்று கூறியிருக்கும் தமிழக முதலமைச்சரின் கூற்று மிகவும் சரியானதே.
  • இந்த இக்கட்டான தருணத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள நமது நாட்டு மாணவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதில்தான் மத்திய அரசு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர, பிற சா்ச்சைகளுக்கு இடமளிக்கலாகாது.

நன்றி: தினமணி (05 – 03 – 2022)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top