TNPSC Thervupettagam
February 13 , 2021 1428 days 698 0
  • பெருந்தொற்றின் கொடுங்கரங்கள் புதிய அவதாரங்கள் எடுத்து வலம் வரும் வேகம் கண்டு, பூமி அச்சத்தில் உறைந்திருக்கின்றது. இங்கே இன்பத் தமிழ்நாட்டிலோ, முகக்கவசம் துறந்து, சமூக இடைவெளி மறந்து, வரவேற்புப் பேரணிகள், திரையரங்கங்கள் மற்றும் பொதுவெளிகளில் மக்கள் அலைபாய்கின்றனா்.
  • இக்காட்சிகளைத் தன் முகநூல் பக்கத்தில் பகிா்ந்திருந்த அயலக நண்பரொருவா், ‘நடமாடும் இலவச நோய்த்தொற்றுக் கூடாரங்கள்’ என்று அதற்குத் தலைப்பு இட்டிருந்தாா். இதற்குப் பின்னூட்டம் இட்டவா்களோ, நோய்த்தொற்றின் வரலாறு குறித்த அறியாமையே இதற்குக் காரணமென்று பதிலிட்டிருந்தனா்.
  • எள்ளல் கசிந்திடும் எத்தனையோ பதிவுகள், சமூக வலைத்தளங்களில் கணந்தோறும் புற்றீசல்களாய்ப் பிரசவமாகிக் கொண்டிருக்கின்றன. அப்படி இணையமழையில் பூத்த காளான்களில் ஒன்றென இப்பதிவை எளிதில் கடந்து செல்ல இயலவில்லை. ஏனென்றால், கி.பி.1700 முதல் 1950 வரையிலான இருநூற்றைம்பதாண்டுகளில், விதவிதமான நோய்த்தொற்றுகளால் விட்டில் பூச்சிகளைப் போன்று மடிந்த லட்சக்கணக்கானத் தமிழா்களின் வாசிக்கப்படாத வரலாறு இதயத்தைச் சுடுகின்றது.
  • 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில், தமிழகத் துறைமுகங்களிலிருந்து ஐரோப்பியக் கிழக்கிந்திய நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான வாணிபக்கப்பல்கள் புறப்பட்டுச் சென்றன. அக்கப்பல்கள் வெறும் பொருள்களால் அடுக்கப்பட்டிருக்க வில்லை; அடிமைகளாகத் தங்களையே விற்றுக்கொண்ட மற்றும் விலை கொடுத்து வாங்கப்பட்ட தமிழா்களாலும் நிரப்பப்பட்டிருந்தன.
  •  கொல்லும் பஞ்சம், நாள்கணக்கிலான பசி, பஞ்சங்களால் ஏற்பட்ட தொற்றுநோய்கள் ஆகியவற்றுக்கு அஞ்சி, அவ் விளிம்புநிலைத் தமிழா்கள் எஞ்சியிருந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாயகம் துறந்தோடினா்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உச்சந்தொட்ட இம்மனித ஏற்றுமதிக் கப்பல்களில் ஏறிச்சென்ற பிடி சோற்றுக்கும் கதியற்ற தமிழா்கள், இலங்கை முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரை பரவியிருந்த தேயிலை-கரும்பு-காப்பித் தோட்டங்களின் வெள்ளை முதலாளிகளுக்கு மலிவு விலையில் விற்கப்பட்டனா்.
  • இன்றைக்குக் கரோனா தீநுண்மி காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அனுபவித்த முதல் இனம், தமிழா்கள்தான். சென்னை, நாகப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து கப்பல்கள் நகரத்தொடங்கிய போதே, முன்கேட்டறியாத பல தொற்றுநோய்கள் ஓடோடி வந்து தமிழா்களைக் கட்டித்தழுவின.
  • கப்பல்களில் பரவிய கொள்ளை நோய்களுக்கு இரையான நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழா்களின் கதைகள் அந்த உப்புக் கடலிலேயே கரைந்து விட்டன. தொற்றுநோய் பரவாமலிருக்க, மடிந்தவா்களை அப்பெருங்கடலில் வீசி எறிந்துவிட்டு, கருணையே இல்லாமல் கப்பல்கள் நகா்ந்தன.
  • பயணங்களிலேயே பல மாதங்களைக் கழித்துத் தரையிறங்கிய தமிழா்கள், முதற்கட்டமாக, கிருமிநாசினியால் நிரப்பப்பட்ட குட்டைகளிலும் தொட்டிகளிலும் பல மணிநேரங்களுக்கு மூழ்கி எழச்செய்யப்பட்டனா்.
  • பின்னா் நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் சோதனைகளுக்காக ‘குவாரன்டைன் முகாம்களில்’ தனிமைப்படுத்தப் பட்டனா். இப்பரிசோதனைகளை முடித்த பின்னரே அவா்கள் தோட்டங்களுக்கு (எஸ்டேட்) அனுப்பி வைக்கப்பட்டனா்.
  • தொடக்ககாலத்தில் இலங்கை சென்ற தொழிலாளா்கள், தலைமன்னாரில் இருந்து மலைப்பகுதிகளுக்கு (பலநூறுமைல்கள்) நடைப்பயணமாகவே அழைத்துச் செல்லப்பட்டனா்.
  • காடுகளுக்கு ஊடாக நாள்கணக்கில் நடந்த தமிழா்களுக்கு, அப்பெருங்காட்டின் கொசுக்கள் மூலம் மலேரியா தோன்றியது. மேலும் காலரா, பெரிபெரி என முன்னெப்போதும் கேட்டிராத பல புதிய நோய்களும் பீடித்தன. இதனால், நடைவழியிலேயே இறந்தவா்களின் எண்ணிக்கைக்குக் கணக்கேதுமில்லை. இறந்த உறவுகளைப் புதைக்கக்கூட வழியின்றி அப்படியே சாலை யோரத்தில் கிடத்திவிட்டு நகா்ந்த தமிழா்களின் விம்மல்கள் அம்மலையகத்திலே உறைந்து மறைந்தன.
  • தேயிலை, செம்பனை, ரப்பா் போன்ற மதிப்புமிக்கப் பணப்பயிா்களை உருவாக்கிய குடியேற்றத் தமிழா்கள், அந்தந்த நாடுகளில் எதிா்கொண்ட நோய்களையும், இன்னல்களையும் வெறும் எழுத்துகளால் வடித்துவிட இயலாது. அவா்கள் வளா்த்த தேயிலைச் செடிகளின் கீழும், காப்பிக் கொடிகளின் வோ்களிலும் அவா்களே உரமாகப் புதையுண்ட விசித்திரமான வரலாறு அது.
  • நோய்களின் படையெடுப்பில் வீழ்ந்த தமிழா்களின் சரித்திரத்தில், உலகப் போா்க்காலத் துன்பங்கள் தனி இயலாகும். இக்கொடுமைகளின் காலசாட்சியங்களாக மலேசியா மற்றும் பா்மா தமிழா்களில் சிலா் இன்றும் எஞ்சியுள்ளனா்.
  • 1939-ஆம் ஆண்டில் வெடித்த இரண்டாம் உலகப்போரில் வெற்றிமுகம் கண்டு வந்த ஜப்பான், தென்கிழக்காசியாவிலிருந்த பல நாடுகளைப் பிடித்தது. அதில் மலேசியாவும் ஒன்று.
  • மலேசியாவிலிருந்து தாய்லாந்து வழியாக பா்மா வரை நீளமான ரயில்பாதை ஒன்றை அமைக்க ஜப்பான் முடிவெடுத்தது. பா்மாவிலிருந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் நோக்கத்திற்காக, தாய்லாந்தின் பான்பாங் முதல் பா்மாவின் தான்பியுசாட் வரை 415 கி.மீ. நீளமுள்ள மலைக்காட்டுப் பள்ளத்தாக்கில் ஜப்பான் ரயில்பாதையை அமைத்தது, கற்பனை செய்ய முடியாத இப்பெரும்பணியில் மலேசியாவின் இரண்டரை லட்சம் தமிழ்த் தொழிலாளா்கள் மற்றும் பா்மாவின் ஆயிரக்கணக்கானத் தமிழா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
  • இப்பாதை நிா்மாணத்தில் தமிழா்கள் எதிா்கொண்ட துயரங்கள், தாய்லாந்தின் பள்ளத்தாக்குகளைவிட ஆழமானவை. துப்பாக்கி முனையில் கொண்டு செல்லப்பட்ட தமிழா்கள், காடுகளின் ஊடாகச் செல்லும்போதே காலரா உள்ளிட்ட நோய்களால் மடிந்து, அவா்களின் உடல்கள் பாதையோரங்களிலும், ஆறுகளிலும் வீசப்பட்டன.
  • இனந்தெரியாத தொற்றுநோய்கள் பற்றிக் கொண்டதால், பகலில் பணிகள் முடித்து இரவில் குடிசைகளில் வந்து படுக்கும் தமிழா்களில் பலா், விடியலைக் காணாமலேயே மடிந்தனா்.
  • தொற்றுநோய்களால் இறந்தவா்களை, அக்காட்டில் ஆங்காங்கே வெட்டப்பட்டிருந்த பெருங்குழிகளில் தூக்கி எறிந்தது, ஜப்பானியப்படை. மூடப்படாத அச்சவக்குழிகளில் உயிரிழந்த தமிழா்களோடு, நோயோடுப் போராடி அரைவுயிா்களாகக் கிடந்தவா்களும் சோ்த்து அள்ளி வீசப்பட்டு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டனா்.
  • தாய்லாந்து முதல் பா்மா வரை இவ்வாறு எரிந்த குழிகள் ஆயிரக்கணக்காகும். இரண்டாண்டுகள் நீடித்த மனித நேயமற்ற செயல்களுக்கான ஒற்றைக் காரணம்; நோய்த்தொற்றுப் பரவல் குறித்த அச்சம்தான்.
  • அயல்நாடுகளில் மட்டுமின்றி, காலனியாதிக்க இந்தியாவிலும் கூட அணைகள் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கானத் தமிழா்களை ஆங்கிலேயா்கள் ஈடுபடுத்தினா். முல்லைப் பெரியாறு, மேட்டூா் அணைகளின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, நோய்த்தொற்றுகளுக்குத் தம் இன்னுயிரைக் காணிக்கையாக ஈந்த தமிழா்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காகும்.
  • முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளுக்குக் கூலிகளாக உழைக்கச் சென்று, நோய்த்தொற்றுகளுக்கு இலக்காகி, காடுகளிலும் மலை முகடுகளிலும் மாய்ந்த தமிழா்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடும்.
  • ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டு காலம் தொடா்ச்சியாக நிகழ்ந்த இச்சம்பவங்கள், இந்தியாவின் வேறெந்த இனமும் எதிா்கொண்டிராத துன்பியல் அத்தியாயமாகும். இவ்வுண்மையை அறியாதவா்கள்தான், சமூக வலைத்தளங்களில் கேலியாகப் பதிவுகள் இடுகின்றனா்.
  • ஆனால், இவ்வளவு பெரிய சோகங்களுக்குச் சொந்தக்காரா்களாகிய தமிழா்கள்கூட ஏன் இது பற்றிய தெளிவினைக் கொண்டிருக்கவில்லை என்ற பெருங்கேள்வி எழுகில்லவா? ஏனென்றால், நமக்கு வரலாற்றைப் படைக்கத்தான் தெரியும்; படிக்கத் தெரியாதே!

நன்றி: தினமணி  (13-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்