- அந்தரங்கத்துக்கான இறுதி வெளி ‘டைரி’ (Diary). தமிழில் அது டைரி, டயரி என இரு விதமாக எழுதப்படுகிறது. தஞ்சைக்காரர்கள் ‘டைம்’ என்பதை ‘டயம்’ என்று உச்சரிப்பதுபோல. டைரி என்ற பயன்பாடே பொதுமக்கள் தொடர்பு ஊடகத்தில் (‘ஒரு கைதியின் டைரி’, 1985) பயில்கிறது.
- கி.வா.ஜகந்நாதன் போன்ற சென்ற தலைமுறைஎழுத்தாளர்களால் டயரி என்ற சொல் அதிகமாகக் கையாளப்பட்டது. நாள்குறிப்பு, தினக் குறிப்புப் புத்தகம் போன்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும் மக்கள் வழக்குஎன்னவோ ‘டைரி’யைத் தாண்டி வரவில்லை.
டயரியின் தோற்றம்
- செய்யவிருக்கும் பணி, நினைவில் நிறுத்த விரும்பும் அம்சம் போன்றவற்றைக் குறிக்கவே டயரி எழுதுதல் தொடங்கியிருக்கலாம். பிறகு, நாளும் நிகழ்ந்தவற்றைப் பதிந்துவைக்க உதவுவதாக அது மாறியிருக்கலாம். பதிப்பிக்கப்பட்டவை அல்லது காலமாகிவிட்டவரின் டயரிகள்தாம் மற்றவர் வாசிப்புக்குக் கிடைக்கின்றன. யாரோ வாசிப்பர் என்ற எண்ணத்திலோ பதிப்பிக்கும் நோக்கிலோ டயரிகள் பெரும்பாலும் எழுதப்படுவதில்லை.
- இங்கிலாந்தின் அரசியல் சமூக விவரங்களைத் தாங்கியசாமுவேல் பீப்ஸ் (1633-1703)என்பவரது டயரி (1825) பழமையானது. யூதச் சிறுமி ஆன் பிராங்க் (1948) டச்சுமொழியில் எழுதிய உலகத்தின் மிகப் பிரபலமான டயரி, 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
- அது இரண்டாம் உலகப் போர் தொடர்பில் மறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட உள் முரண்கள் பற்றியது. எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்த்தால் சாமுவேல் பீப்ஸ்க்கு அடுத்து இரண்டாவது காலப் பழமையானது ஆனந்தரங்கம் பிள்ளையினுடையதுதான்.
தமிழ், ஆங்கில டயரிகள்
- உ.வே.சாமிநாதையர் (1855-1942) 38 முதல் 84 வயது வரை நாள்குறிப்புகள் எழுதினார். அந்த 46 ஆண்டுகளில் 29 ஆண்டுகளின் டயரிகள் தாம் கிடைத்துள்ளன.
- அவைதாம் சமீபத்தில் சரியற்ற முறையில் அச்சாகி வெளிவந்துள்ளன. மதுரகவி பாஸ்கரதாசின் (1892-1952) நாள்குறிப்புகள், 1917 முதல் 1951 வரை 34 ஆண்டுகள் நீள்கின்றன. சாமிநாதையரின் குறிப்புகள் பதிப்பு வாழ்க்கையைப் படம்பிடிக்கின்றன எனில், இது கலை வாழ்க்கையைக் காட்டுகிறது.
- ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1884-1944) எழுதிய நாள்குறிப்புகளின் தொகுப்பு 2007இல் வெளியானது. தமிழ் உரையாசிரியராகவும் நாவலராகவும் திகழ்ந்த அவரது சுறுசுறுப்பான தினசரி வாழ்க்கையும் பரந்த பார்வையும் மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றன. திருச்சி வானொலியை ‘வானவசனி’ என்று அதில் குறித்துள்ளார்.
- ரேடியோவுக்கு வானொலி என்று பெயர் வழங்காத தொடக்கக் காலம் அது. இத்தகைய நுண் வரலாற்றை எல்லாம் டயரிகளிலிருந்து சுலபமாக அறிய முடிகிறது.
- தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளின் நாள்குறிப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது இக்கால இளைஞர்களுக்கு ஆச்சரியம் தரலாம்; 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிவுலக வரலாற்றை அறிந்தவர்களுக்கு அது சாதாரணசெய்தி. மறைமலை அடிகளின் ஆங்கில நாள்குறிப்பைத் தமிழாக்கம் செய்து, ஆ.இரா.வேங்கடாசலபதி எண்பதுகளில் வெளியிட்டார்.
- பொதுப் பிரமுகர் ஆனந்தரங்கம் நாள்குறிப்புகளைக் கொண்டு பிரபஞ்சன் ஒரு நாவல் எழுதினார் என்றால், தன் பாட்டியின் நாள்குறிப்புகளை வைத்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் முயற்சியில் வெற்றிபெற்றவர் மைதிலி சிவராமன்.
- 1978இல் மறைந்த தன் பாட்டி சுப்புலட்சுமி எழுதிய குறிப்புகளைச் சமூகச் சூழலில் பொருத்தி, இருபதாம் நூற்றாண்டு பிராமணப் பெண்ணின் தமிழ் வாழ்க்கையை வரைந்துவிட்டார். ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்: ஒரு குடும்ப ஆவணத்திலிருந்து’ என்பது கி.இரமேஷ் தமிழாக்கிய அந்நூலின் பெயர். புகழ்பெற்ற சகோதரி ஆர்.எஸ்.சுபலட்சுமிவேறு; மைதிலியின் பாட்டி சுப்புலட்சுமி வேறு.
- என்.டி.வரதாச்சாரி (1903-1945) என்ற மயிலாப்பூர் வழக்கறிஞர் எழுதிய ‘காசி டைரிஸ்’ (2004), ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இன்னொரு முக்கியமான நாள்குறிப்பு.13 வயதிலிருந்து தொடங்கும் இவரது நாள்குறிப்புகள் மேல்தட்டு நகர வாழ்க்கையின்பிரதிபலிப்பு. எம்டன் வக்கீல் என்று நீதிமன்ற வளாகத்தில் அறியப்பெற்ற இவர், இரண்டாம்உலகப் போரின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் கவலையுடன் பதிந்து வைத்துள்ளார்.
- பத்திரிகை ஆசிரியர் முத்துநாடாரின் நெடிய டயரி, டயரி எழுதிய ஒரேநவீன எழுத்தாளர் கு.அழகிரிசாமி போன்றோர்டயரிகளும் குறிப்பிடத்தக்கவை. ஓர்எழுத்தாளப் பேராசிரியர் துணைவேந்தரானதும் தன் டயரிகளைத் தீக்கிரையாக்கினார்.
அவசிய காலக் குறிப்புகள்
- சுயசரிதம், பத்தி எழுத்துகள் போன்ற பெரும்பாலான நவீன வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பாரதி, டயரி எழுதவில்லை. ‘மை ஜர்னல் ஆஃப் தாட்ஸ் அண்ட் டீட்ஸ்’ என்று 1913 முதல் 1915க்கு இடையில் அவர் எழுதிவைத்துள்ள குறிப்புகளை டயரி என்றே கருதலாம். டயரிக்கு ‘ஜர்னல்’ என்ற ஒரு பெயரும் உண்டு.
- பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வ.ரா. தனக்கு நாள்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்திருந்தால் பாரதி வாழ்க்கையை மேலதிக விவரங்களுடன் எழுதியிருக்கலாம் என்று வருந்தினார். அலிப்புரம் சிறையில் இருந்த சில காலம் வ.ரா. டயரி எழுதினார். பெரியாருக்கும் பொதுவாக நாள்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ரஷ்ய சுற்றுப்பயணத்தின்போது மட்டும் அவர் டயரி எழுதினார். முக்கியமான விவரங்களைப் பதிய, முக்கியமான காலத்தில் மட்டும் இவர்கள் டயரி எழுதினர்.
நிறுவன டயரிகள்
- குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் ஒரு வழக்கின் தினசரி விசாரணையைப் பதிவு (Case diary) செய்துவைக்க வேண்டும் என்கிறது. தான் நடத்திய தமிழ்க் குருகுலத்தின் தினசரி நடவடிக்கைகளை எழுதி வைத்தார் வ.வே.சு. ஐயர். அது இல்லாவிட்டால், சேரன்மாதேவி குருகுலம் பற்றிய என்னுடைய நூல் முழுமை அடைந்திருக்காது.
- அரசாங்கத்தில் ஓடுகிற காருக்குக்கூட லாக் புக் (Log book) உண்டு. ஆனால், மனிதர்கள் தம் செயல்களைத் திரும்பியே பார்ப்பதில்லை. திரும்பிப் பார்த்தால் ‘சமைந்து’ விடுவீர்கள் என்று யாரோ பயமுறுத்திவிட்டார்கள்.
- பழையதில் பெருமை காண்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அது. கடந்ததை உரமாகக் கொண்டு வளர விரும்புபவர்கள், பின்பற்றவேண்டிய அறிவுரை அல்ல அது. எனவே, டயரி எழுதலாம். நம் செய்கைகளை நாமே பரிசீலிக்க அது உதவும் அல்லது அவமாக நாள் கழிகிறதே என்று சுயமாவது புரியும். எதற்கும் இல்லை என்றாலும் மன ஒருமைக்காவது உபயோகப்படும்.
- மற்றவர் பார்வையிலிருந்து தவிர்க்க நினைக்கும் அந்தரங்கத்தின் இறுதி வாய்ப்புடயரி. அதை நம் சமூகம் வழக்கு விசாரணைக்குஉட்படுத்துவதைத் தனிமனித சுதந்திரத்துக்கு விடப்பட்ட அறைகூவல் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதைப் பற்றித் தனியே எழுதி வருந்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2024)