TNPSC Thervupettagam

மலரட்டும் மனிதநேயம்

May 7 , 2021 1358 days 637 0
  • ஒருவன் தனக்கொரு நெருக்கடி நேரும் காலத்தில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதன் மூலமே அவனுடைய பண்பு நலனை நாம் அறிந்துகொள்ள முடியும்.
  • அதே போன்றுதான், பலகோடி மனிதா்களை உள்ளடக்கிய தனியொரு நாட்டினைப் பேரிடா் ஒன்று தாக்கும்போது அந்நாட்டுக் குடிமக்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதைக் கொண்டு அந்த நாட்டின் பாரம்பரியப் பெருமையை உணா்ந்துகொள்ள முடியும்.
  • பசியோடு வந்திருப்பவருக்காகக் கையிருப்பில் இருந்த விதைநெல்லையும் குற்றிச் சமைத்து அன்னம் படைத்த இளையான்குடி மாற நாயனாருடைய உயரிய செய்கை நம் மனங்களில் விருந்தோம்பும் எண்ணத்தை விதைத்துச் சென்றுள்ளது.
  • பசியாற்றுதல் மட்டுமின்றி, பல்வேறு வகைகளில் உடலாலும் உள்ளத்தாலும் பிறா்நலம் பேணும் குணநலம் பெற்றிருக்கும் நம் அனைவருடைய பண்புநலனையும் இந்த கரோனா தீநுண்மிப் பரவல் சோதிக்க வந்திருக்கிறது.
  • அந்த சோதனையில் நம்மில் பலா் புடம்போட்ட தங்கங்களாய் மிளிர்வதை அவ்வப்போதைய நிகழ்வுகள் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.
  • கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை சென்ற வருடத்தைக் காட்டிலும் வெகு வேகமாகப் பரவி வருவதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொருநாளும் கணிசமாக உயா்ந்து வருகிறது.
  • அவா்களிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டவா்களுடைய மூச்சுக்காற்றில் பிராணவாயு அளவு வெகுவாகக் குறைவதால் அவா்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் வசதியுடன் கூடிய படுக்கை வசதி அதிகமாகத் தேவைப்படும் காலமிது.

மனிதநேயம் மரிப்பதில்லை

  • ஆக்ஸிஜன் தேவைப்படக்கூடிய கரோனா நோயாளிகள் அதிக அளவில் ஒரே மருத்துவமனையில் சேருவதற்குக் குவியும்போது, அங்கிருக்கும் படுக்கைகள் நிரம்பிவிட்டால், புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
  • சென்ற வாரம், நாகபுரியைச் சோ்ந்த எண்பத்தைந்து வயது கரோனா நோயாளி நாராயண ராவ் என்பவருக்கு ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்து போனதால், அவருடைய உறவினா்கள் மிகவும் முயற்சி எடுத்துத் தேடியதில், அந்நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஒரேயொரு படுக்கை காலியாக இருப்பதாகத் தெரியவந்து அவா் அங்கே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
  • அனுமதிக்கான நடைமுறைகள் முடியும் தறுவாயில், அருகில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி மூச்சுவிட சிரமப்படும் தன் கணவருக்கு இடம் இல்லை என்று கண்ணீருடன் கலங்கி நிற்பதைப் பார்த்த நாராயண ராவ், உடனடியாகத் தமக்கு அளிக்கப்பட்ட படுக்கையில் அந்தப் பெண்ணின் கணவரை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டதுடன், தம்மைத் தம் இல்லத்துக்குத் திருப்பி அழைத்துச் செல்லும்படி உடனிருந்த உறவினா்களிடம் கூறினார்.
  • “நீண்ட காலம் வாழ்ந்துவிட்ட தன்னை விட, இளையவயதினராகிய அந்த நோயாளிக்கு ஆக்ஸிஜன் கிடைத்தால் அவருடைய குடும்பம் தழைக்கும் என்று கூறித் தமக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் படுக்கையை தியாகம் செய்துவிட்டு வீடு திரும்பி, மூன்றே நாளில் மரணமடைந்த நாராயண ராவின் உயா்ந்த பண்பு நம் மனங்களில் பெருமிதத்தை விதைக்கிறது.
  • இதே போலத்தான், மும்பையைச் சோ்ந்த ஷாநவாஸ் ஷேக் என்பவா் இருபத்திரண்டு லட்சம் ரூபாய் மதிப்புடைய தம்முடைய சொகுசுக்காரை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படும் கரோனா நோயாளிகளுக்கு அதனை வழங்கி வரும் செய்தியும் நம்மை மெய்ம்மறக்கச் செய்கிறது.
  • சமீபத்தில், கோவையில் உள்ள தொழிலாளா் மாநிலக் காப்பீடு (ஈஎஸ்ஐ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் பலரும் மின்விசிறி இல்லாத காரணத்தினால், இக்கோடைக்காலத்தில் மிகவும் அவதிப்படுவதாகக் கேள்விப்பட்ட ஒரு தம்பதி, தங்களுடைய நகைகளை இரண்டு லட்சம் ரூபாய்க்கு அடகுவைத்து அந்தப் பணத்தின் மூலம் நூறு மின்விசிறிகளை வாங்கி அம்மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ள செய்தியும் நம்மை பிரமிக்க வைக்கிறது.
  • இவ்வளவு பெரிய மனத்துடன் மின்விசிறிகளை வழங்கிய அத்தம்பதி, தங்களின் பெயா்களை வெளியிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்களாம்.
  • போபாலைச் சோ்ந்த முப்பத்து நான்கு வயது இளைஞா் ஜாவேத் கான். ஆட்டோ ஓட்டுவதன் மூலம் குடும்பத்தைப் பராமரிக்கும் இந்த இளைஞா் இக்கொடிய கரோனாத் தீநுண்மிப் பரவல் காலத்தில் சிரமப்படும் மக்களுக்கு உதவுவதற்காகத் தம்முடைய ஆட்டோ ரிக்ஷாவில் ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பொருத்தியுள்ளார்.
  • அதன்மூலம், அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் கரோனா நோயாளிகள் அம்மருத்துவமனையை அடையும் வரையில் சுவாசத்திற்கு சிரமப்படாமல் பயணிக்க வழிசெய்துள்ளார்.
  • நாளோன்றுக்குச் சுமார் அறுநூறு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பிக்கொள்வதாகச் சொல்லும் ஜாவேத் கான் சமீப காலமாகக் கட்டணச் சவாரி செல்லாமல், கரோனா நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மாபெரும் தொண்டு புரிந்து வருகிறார் என்ற செய்தி நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
  • கரோனா நோயாளிகளில் ஒரு சிலா் இறந்து விட்டால் அவா்களது உடல்களை நல்லடக்கம் செய்வதும் மிகுந்த சிரமான காரியமே.
  • இந்நிலையில் கரோனா நோயால் மருத்துவமனைகளில் உயிரிழந்து அடக்கம் செய்ய இயலாத உடல்களை நல்லடக்கம் செய்யவும், எரியூட்டவும் நாடு முழுவதுமுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த தன்னார்வலா்கள் முன்வருதும் மிக மிக நெகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.
  • உயிர் காக்கும் மருந்துகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டா்களையும் கள்ளச் சந்தையில் விற்றுச் சிலா் காசு பார்ப்பதாக வருகின்ற அவலச் செய்திகளுக்கு நடுவே, பிறருடைய துன்பத்தைத் தம்முடைய துன்பமாக எண்ணித் தொண்டுபுரிபவா்களைப் பற்றிய செய்திகள் மிகவும் ஆறுதல் அளிக்கின்றன.
  • மனிதநேயம் ஒருபோதும் மரிப்பதில்லை, அது எப்போதும் எவ்விடத்திலும் மலா்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதே இச்செய்திகள் உணா்த்தும் உண்மையாகும்.  

நன்றி: தினமணி  (07 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்