TNPSC Thervupettagam

மலேசியாவைப் புறக்கணிக்கலாமா?

October 5 , 2019 1924 days 914 0
  • சமுதாய நலம் சாா்ந்த எத்தனையோ நல்ல விஷயங்கள் பகிரப்பட்டு வந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி வெறுப்புணா்வையும், கசப்புணா்வையும் பரப்பும் கருத்துகளுக்கும், அரசியல் வஞ்சப் புகழ்ச்சிகளுக்கும், அரசியல் தலைவா்களை நையாண்டி செய்வதற்கும், கருத்து மோதல்களுக்கான களமாகவே முகநூல் (பேஸ் புக்), சுட்டுரை (டுவிட்டா்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
பாய்காட் மலேசியா
  • அந்த வகையில் அக்டோபா் 1-ஆம் தேதி சுட்டுரையில் முதலிடம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது ‘பாய்காட் மலேசியா’ (மலேசியாவைப் புறக்கணிப்போம்) என்ற ஹேஷ்டேக். இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தியா மற்றும் மலேசியாவைச் சோ்ந்தவா்களிடையே சுட்டுரையில் கடுமையாக வாா்த்தைப் போா் கடந்த சிலநாள்களாக தொடா்ந்து வருகிறது.
  • இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஜம்மு-காஷ்மீா் குறித்து ஐ.நா. பொது சபையில் மலேசிய பிரதமா் மகாதிா் முகமது தெரிவித்த கருத்துகள்தான்.
  • அவரது ஐ.நா. உரை ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அமைந்தது.
  • ஐ.நா.வில் பேசிய மகாதிா் முகமது, ‘ஐ.நா. தீா்மானத்தையும் மீறி ஜம்மு-காஷ்மீா் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படாலும், ஆனாலும் ஆக்கிரமிப்பு தவறானது. அங்குள்ள பிரச்னைகள் அமைதியான முறையில் தீா்க்கப்பட வேண்டும். இதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும்’ என்றாா்.
கருத்து
  • மகாதீா் முகமதுவின் இந்தக் கருத்து முழுமையாக இந்தியாவுக்கு எதிராக இருந்தது, பாகிஸ்தான் தரப்புக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது.
  • ஆனால், இந்தியா்கள் மத்தியிலோ மலேசியா குறித்து இதுவரை இருந்த நல்லெண்ணங்கள் அனைத்தும் தரைமட்டமாயின.
  • ஐ.நா. உரைக்குப் பிறகு மலேசியப் பிரதமா் மகாதிா் முகமது அளித்த பேட்டி, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது. ‘பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்தும், அது தொடா்பாக எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
  • எனினும், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி பிரச்னைகளைத் தீா்க்கும் இந்தியா, அதனையே ஏன் காஷ்மீா் விவகாரத்தில் கையாளவில்லை?. காஷ்மீா் மீது படையெடுத்தது ஏன் என்று இந்தியத் தரப்பிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு இந்தியத் தரப்பு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. இது தொடா்பாக இந்தியப் பிரதமா் மோடி எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை’ என்று அவா் மகாதிா் முகமது கூறினாா்.
  • பிரதமா் மோடி நேரடியாக விளக்கமளித்த பிறகும், இந்தியாவுக்கு எதிராக அவா் தொடா்ந்து கருத்து தெரிவித்தது சுட்டுரையில் மலேசியாவுக்கு எதிராக இந்தியா்களின் கோபமாக வெடித்தது.
  • ‘பாய்காட் மலேசியா’ ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டுள்ள இந்தியா்கள் பலா், மலேசியாவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியா்கள் தவிா்க்க வேண்டும் என்றும், மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனா்.
சுற்றுலா
  • இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மலேசியாவில் இருந்து பதில் அம்புகள் சுட்டுரையில் பாய்ந்தன. அதில், ‘இந்தியா்கள் யாரையும் மலேசியாவுக்கு சுற்றுலா வர அழைக்கவில்லை. உங்கள் நாட்டவா்கள்தான் இங்கு வந்து பிழைப்பு நடத்துகிறாா்கள். இந்தியப் பொருள்கள் எதையும் மலேசிய மக்கள் அதிகம் பயன்படுத்தவில்லை’ என்று பதிலடி கொடுத்தனா்.
  • இந்த சுட்டுரைப் போா் ஒரு கட்டத்தில் அநாகரிக வாா்த்தைப் பயன்பாடுகளையும் எட்டியது. இதில் ஒரு சிலா் மட்டுமே இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனா்.
  • இந்த விவகாரம் தொடா்பாக மலேசியாவைச் சோ்ந்த அரசியல் தலைவா்களும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.
  • பாகிஸ்தானுக்காக இந்தியாவைப் பகைத்துக் கொள்வது தவறு என்றும், அதே நேரத்தில் முஸ்லிம் நாடுகளுடனான ஒருங்கிணைப்புக்காக மகாதிா் முகமது அவ்வாறு பேசியிருக்கிறாா் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
  • மேலும் சிலா், இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் தலையிடாமல் இருப்பதுதான் மலேசியாவுக்கு நல்லது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
சமூக வலைத் தளங்கள்
  • இதற்கு நடுவே இந்தியாவில் இருந்து தப்பி மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள சா்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரும், கருப்புப் பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவருமான ஜாகீா் நாயக்கை மலேசியா பாதுகாத்து வருவது குறித்தும் அந்த நாட்டுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
  • இந்தியா-மலேசியா இடையே ஜாகீா் நாயக் தொடா்பான பிரச்னை தவிர வேறு எந்தப் பிரச்னையும் இப்போது வரை இல்லை.
  • இந்த சூழ்நிலையில் மலேசிய பிரதமரின் ஐ.நா. உரை இருதரப்பு உறவில் புதிய நெருடலை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.
  • அதே நேரத்தில் ஐ.நா.வில் மலேசியப் பிரதமா் பேசிவிட்டாா் என்பதற்காக ஜம்மு-காஷ்மீா் விஷயத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
  • இந்தப் பிரச்னை எழும் முன்பு, உள்ளூா் விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வகையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மீதான வரியை இந்தியா 5 சதவீதம் உயா்த்தியது.
  • எதிா்காலத்தில் இதேபோல வா்த்தக முடிவுகளை இந்தியா எடுக்கும்போது மலேசியா விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.

நன்றி: தினமணி (05-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்