TNPSC Thervupettagam

மழைக்காலத்தில் குழந்தைகள் நலம் காப்போம்

November 23 , 2024 2 hrs 0 min 5 0

மழைக்காலத்தில் குழந்தைகள் நலம் காப்போம்

  • பொதுவாக மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படும். இது நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவ ஏதுவான சூழலை ஏற்படுத்துவதோடு குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்றுகள், உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதற்கு முன் மழைக்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
  • அதிக நாள்கள் நீடிக்கும் வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை, 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை 3 முதல் 5 நாள்கள் வரை மிதமாகவோ, கடுமையாகவோ தாக்கக்கூடியவை.
  • ஆனால், சமீப காலத்தில் 7 முதல் 10 நாள்கள் வரை காய்ச்சல் நீடிக்கிறது. குறிப்பாக, வயது அதிகமுள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற நீடித்த காய்ச்சல் அதிகம் ஏற்படுவது பெற்றோரைக் கவலையடையச் செய்கிறது. இதற்குக் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதும் சரியான நேரத்தில் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.
  • மேல்சுவாசத் தொற்று (URI – Upper Respiratory Infection) மழைக்காலத்தில் காற்றில் உண்டாகும் அதிக ஈரப்பதம், வைரஸ் கிருமிகளை அதிகம் பரவச் செய்யும். இதன் விளைவாகப் பெரும்பாலான குழந்தைகளுக்கு மேல்சுவாசத் தொற்று ஏற்படக்கூடும். இது தீவிர இருமல், தொண்டைப் புண் அல்லது எரிச்சல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

டெங்கு காய்ச்சல்:

  • மழைக்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க தொற்று டெங்கு காய்ச்சல். கொசுக்களின் மூலமே டெங்கு காய்ச்சல் தொற்று அதிக அளவில் பரவுகிறது. தீவிர காய்ச்சல் - தலைவலி, தசை - மூட்டு வலி, சோர்வு, குமட்டல், வாந்தி போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகள். இந்தக் காய்ச்சல் அறிகுறிகள் தீவிரமடையும்போது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படலாம். டெங்கு இது நம் உள்ளுறுப்பைப் பாதிக்கும் தன்மை கொண்டது.
  • குழந்தைக்கு அதிகக் காய்ச்சல் தொடரும்போது, குறிப்பாக வேறு ஏதேனும் அறிகுறிகளுடன் காய்ச்சல் இருந்தால் உடனடியாகக் குழந்தைகள் நல மருத்துவரை நாடுவது மிகவும் அவசியம். ஆரம்பநிலையில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது டெங்கு ரத்தக்கசிவுக் காய்ச்சல் நோயின் மிகக் கடுமையான தாக்கத்தில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க உதவும்.

நெபுலைசேஷன்:

  • காற்றில் அதிக ஈரப்பதத்தோடு ஒவ்வாமையும் சுவாசக் கோளாறுகளும் சேரும்போது குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகளால் மூச்சுத்திணறல் ஏற்பட அதிகச் சாத்தியம் உள்ளது. இத்தகைய சூழலில் குழந்தையின் மூச்சுத்திணறல் பிரச்சினையைச் சரிசெய்ய உடனடியாக நெபுலைசேஷன் தேவைப் படுகிறது.
  • மருத்துவப் பின்னணி காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்கெனவே இருந்தாலும் வைரஸ் தொற்றுகளாலும் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். இத்தகைய சூழலில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பதும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் மிகவும் அவசியம்.

ஃபுளூ பாதிப்புகள்:

  • காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண், உடல் வலி, தலைவலி ஆகியவை ஃபுளு காய்ச்சலின் அறிகுறிகள். அது மட்டுமன்றி, குழந்தை களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, நடுக்கத்துடன் கூடிய காய்ச்சலும் ஏற்படும். சிலநேரம் சுவாசச் சிக்கலும் ஏற்படும். இச்சமயங்களில், குழந்தையின் உடல் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். திரவ உணவைக் கூடுதலாக வழங்க வேண்டும்.

தடுப்பூசிப் பரிந்துரை:

  • வைரஸ் தொற்று, அதைச் சார்ந்த சிக்கல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கத் தடுப்பூசி மிகவும் பயனுள்ளது. அந்த வகையில் ஃபுளூ, வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியம்.

மழைக்காலத்தில் கவனம்:

  • தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க நம்மைச் சுற்றிச் சுகாதாரமான சூழலைப் பராமரிப்பது அவசியம். குழந்தைகளை நிறைய தண்ணீர் குடிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனால், உடலில் நீரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். மழைக்காலத்தில் குழந்தைக்கு ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள், சரியான கால அளவில் குழந்தைகளுக்கு முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும். குழந்தையின் உடல்நலத்தைப் பற்றிய ஆலோசனைக்காகக் குழந்தைகள் நல மருத்துவரிடம் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்