TNPSC Thervupettagam

மழைக்கால நோய்களும் தப்பிக்கும் வழிகளும்

November 25 , 2023 414 days 325 0
  • மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய் அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்கி, தீவிர உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனினும் மழைக்கால நோய்கள் குறித்துப் போதிய விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

வைரஸ் காய்ச்சல்

  • மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது ஃபுளூ காய்ச்சல். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமி களால் இது ஏற்படுகிறது. நோயாளி தும்மும்போதும் இருமும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் இந்தக் கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலுக்குச் சிறப்புச் சிகிச்சை எதுவும் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால்' மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் அவஸ்தைகளைக் கட்டுப்படுத்த ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்' பலன் தரும்.
  • ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால் வலிப்பு வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு எடுக்கச்சொல்ல வேண்டும். திரவ உணவு வகைகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீரைத் தரவேண்டியது அவசியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரணத் தண்ணீரில் துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் படும்படி விரிக்க வேண்டும்.

நிமோனியா காய்ச்சல்

  • பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடியது நிமோனியா காய்ச்சல். கடுமையான காய்ச்சல், தலைவலி, தசைவலியில் தொடங்கி இருமல், சளி, சளியில் ரத்தம், நெஞ்சுவலி, மூச்சு வாங்குதல் எனத் தொல்லைகள் அதிகரிக்கும். ஆரம்ப நிலையில் தகுந்த ஆன்ட்டிபயாட்டிக்குகள் மூலம் இதற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் முழுமையாகக் குணமாகிவிடும். இல்லையென்றால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும்தாம் அதிகமாகப் பாதிக்கும்.

டைபாய்டு காய்ச்சல்

  • சால்மோனெல்லா டைபி' (Salmonella typhi) எனும் பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் அசுத்தமான குடிநீர், உணவு மூலம்தான் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை தொல்லை தரும், உடல் சோர்வடையும். இதைக் குணப்படுத்த பல நவீன மருந்துகள் உள்ளன. இதைக் கவனிக்கத் தவறினால் குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும். உணவுச் சுத்தம், குடிநீர்ச் சுத்தம் இந்தக் காய்ச்சலைத் தடுக்க உதவும்.

வயிற்றுப்போக்கு, காலரா

  • மாசடைந்த குடிநீர், அசுத்த உணவு மூலம் ரோட்டா வைரஸ்கள் நமக்குப் பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதேபோல் பாக்டீரியாக்கள் மூலம் காலரா ஏற்படுகிறது. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளைப் பரப்புகின்றன. நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரிசெய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சையின் நோக்கம். எனவே, பாதிக்கப்பட்டவருக்குச் சுத்தமான குடிநீரை அடிக்கடி கொடுக்க வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர் அல்லது எலக்ட்ரால்' பவுடர் தரலாம்.

சென்னைக் கண்நோய்

  • அடினோ வைரஸ்' கிருமிகளின் தாக்குதலால் இது வருகிறது. அடுத்தவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது. கண் சிவந்து கண்ணீர் வடிதல், எரிச்சல், வலி, வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள். இதற்குச் சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி சொட்டு மருந்தைத் தேர்வு செய்வது நல்லது; சுய மருத்துவம் வேண்டாம். இந்த நோய் வராமல் தவிர்க்க, கண்நோய் வந்தவர் கண்ணைக் கசக்கக் கூடாது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

சீதபேதி

  • அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் சீதபேதிக்குக் காரணம். தெருக்கள், குளக்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் வெளியாகும் இக்கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடை நீர், குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். இவை நம் குடலை அடைந்ததும் கிருமியாக வளரும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்துபோவது போன்ற அறிகுறிகள் உண்டாகும். சீதபேதியைத் தடுக்க சுயத் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை, குடிநீர்த் தூய்மை, உணவுத் தூய்மை ஆகியவை மிக அவசியம். முக்கியமாக, தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எலிக் காய்ச்சல்

  • மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் 'லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல்எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ்' நோய் வரும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்து கொள்வதும் வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்.

டெங்கு காய்ச்சல்

  • மழைக்கால மாதங்களில் இந்திய மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. டெங்கு' எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தக் காய்ச்சல் வருகிறது. இவற்றைச் சுமந்து திரியும் ஏடிஸ் எஜிப்தி' (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவி, நோய் உண்டாகிறது. கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரிய அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி.
  • வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும். டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறைந்த ரத்த அழுத்தம், மூச்சிரைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்