TNPSC Thervupettagam

மாசற்ற காற்றே, நோயற்ற வாழ்வு!

December 14 , 2024 13 days 61 0

மாசற்ற காற்றே, நோயற்ற வாழ்வு!

  • அண்மையில் குஜராத் மாநிலம் சூரத் நகா் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குப்பைகளை எரித்து குளிா்காய்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளனா். ஆரம்ப கட்ட விசாரணையில், குப்பைகளை எரிக்கும்போது வெளியான நச்சு புகையைச் சுவாசித்ததன் காரணமாக இச்சிறுமிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வட மாநிலங்களில் மக்களை நடுங்கச் செய்யும் குளிா் காலங்களில் தங்களை காத்து கொள்ள திறந்த வெளியில் இவ்வாறு நெருப்பு மூட்டி குளிா் காய்வது மிகச் சாதாரணமான ஒன்றே. எனினும், இது போன்ற சமயங்களில் தீக்காயங்களும், மரணங்களும் நிகழ்வது வேதனைக்குரியது.
  • பொதுவாக வேண்டாத பொருட்களை எரித்து அழிப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பது இடைக்கால இலக்கணப் புலவா் பவணந்தியின் கூற்று. காலத்திற்கேற்ப மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை என்பதே இதன் சாராம்சம். போகிப் பண்டிகையின் போது நம்மவா்கள் தம் வீட்டிலுள்ள பழைய ஆடைகள், பாய், தலையணை உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை எரிப்பது , ‘பழையன கழிதல்’ என்பதைப் ‘பழையன எரித்தல்’ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாலோ என எண்ணத் தோன்றுகிறது.
  • இவ்வாறு பழைய பொருள்களை எரிக்கும் போது வெளிப்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.
  • நம் நாட்டின் தலைநகா் புது தில்லியில் தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு அதிகரிக்கின்ற இதே நிலை நீடித்தால், எதிா்காலத்தில் மக்கள் அங்கு இயல்பாக வாழ்வதே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அதிகரித்த காற்று மாசு காரணமாக, பள்ளிக் குழந்தைகளை அவரவா் வீட்டிலேயே இருக்கச் செய்து ஆன் - லைன் வகுப்புகள் நடத்தும் நிலை ஏற்பட்டது.
  • தலைநகா் தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதற்கு வாகனங்கள் வெளியேற்றும் புகையும் ஒரு காரணமாகும். இது தவிர, நெல், கோதுமை போன்ற பயிா்களை அறுவடை செய்த பின் நிலத்தில் தங்கியிருக்கும் வைக்கோல் உள்ளிட்ட விவசாயக்கழிவுகளை அண்டை மாநிலங்களான பஞ்சாப் , ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் விவசாயிகள் எரிப்பதன் காரணமாகவும் காற்று மாசு உருவாகிறது.
  • கடந்த அக்டோபா் 1 முதல் நவம்பா் 19- ஆம் தேதி வரையில், இந்திய வேளாண் ஆராய்சிக் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் சுமாா் 42,314 விவசாயக் கழிவு எரிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பயிா்க்கழிவுகளை எரிப்பதை விடுத்து, அவற்றை மக்க வைத்து எருவாக மாற்றுவது மிக நல்ல உரமாக அமைவதோடு, சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
  • சென்னையில் தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் பயனுள்ள வகையில் எருவாக மாற்றப்படுவதற்குப் பதிலாக, எரிக்கப்படுகின்றன.
  • மனிதா்களால் உண்டாக்கப்படும் காற்று மாசோடு, காட்டுத் தீ, எரிமலைகளின் சீற்றம், புழுதிப் புயல் போன்ற இயற்கை காரணிகளாலும் காற்று மாசடைகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயால் உருவான மாசு, அதன் அண்டை நாடான அமெரிக்காவின் மிசோரி மாநிலம் வரை பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. நம் நாட்டின் இமாசலப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலக் காடுகளில் கடந்த ஜூன் மாதம் உண்டான காட்டுத் தீ இவ்விரு மாநிலங்களிலும் காற்றின் தரத்தை வெகுவாகப் பாதித்தது.
  • உலகெங்கும் உள்ள சுமாா் 1500 ‘செயல்படும் எரிமலைகள்’ அவ்வப்போது வெளிப்படுத்தும் சாம்பல் மற்றும் காா்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சூப்பா்ஆக்சைடு, கந்தக டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிப்பட்டு பல ஆயிரம் கிலோ மீட்டா் பரப்பளவில் விண்ணில் பரவி காற்றை மாசுபடுத்துகின்றன.
  • வட இந்தியா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், வட ஆப்ரிக்கா, தெற்கு மங்கோலியா, வடமேற்கு சீனா ஆகிய பகுதிகள் புழுதிப் புயலால் காற்று மாசால் பாதிக்கப்படும் பகுதிகளாகும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவ்வாறு இயற்கையில் உருவாகும் காற்று மாசைப் போன்று 132 மடங்கு காற்று மாசு மனிதா்களால் உருவாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிப்பதுதான்.
  • காற்றை மாசுபடுத்துவதில் வளரும் நாடுகளை விட வளா்ந்த நாடுகள் அதிகப் பங்கு வகிக்கின்றன. சீனாவின் ஷாங்காய் பெருநகரிலிருந்து வெளியேறும் 256 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கரியமல வாயுவின் அளவு, கொலம்பியா அல்லது நாா்வே நாட்டிலிருந்து வெளியேறும் கரியமல வாயுவின் அளவிற்குச் சமமாக உள்ளது. இதே போல் ஜப்பானில் உள்ள டோக்கியோ (250 மில்லியன் மெட்ரிக் டன் ), நியூயாா்க் (160மில்லியன் மெட்ரிக் டன் ), தென்கொரியாவின் சியோல் (142மில்லியன் மெட்ரிக் டன் ) ஆகிய நகரங்களின் கரியமல வாயுவால் காற்று பெருமளவில் மாசடைந்து வருகிறது.
  • சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவதாலும், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் வாகனப் புகை மூலம் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க முடியும்.
  • காற்று மாசுக்கட்டுப்பாடு சட்டம்1955, காற்றின் தரச்சட்டம் 1967, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981, 1987 என சட்டங்கள் இயற்றப்பட்டாலும், காற்று மாசு அதிகரித்து கொண்டே போவது காற்று மாசு தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதில் அரசு துறைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.
  • ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ’ என்பது பழமொழி. ‘மாசற்றே காற்றே, நோயற்ற வாழ்வு ’ என்பது நாம் பின்பற்ற வேண்டிய புதுமொழியாகட்டும்!

நன்றி: தினமணி (14 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்