TNPSC Thervupettagam

மாணவர்களின் ஒழுக்கம்: அனைவருக்கும் பொறுப்பு உண்டு

October 2 , 2023 457 days 474 0
  • மாணவர்களைக் கையாள்வதில் கல்வித் துறைக்கும் பொதுச் சமூகத்துக்கும் இருக்கும் போதாமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. அப்படியான தருணங்களில் மட்டும் அவற்றைப் பற்றிய கவனம் குவிவது, பின்னர் அந்த அக்கறை நீர்த்துப்போவது எனத் தொடரும் சூழலால் விபரீதங்கள் இன்றுவரை தொடர்கின்றன. புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சமீபத்திய உதாரணம்.
  • தலைமுடியை வெட்டிக்கொண்டு வருமாறு அந்த மாணவரிடம் ஆசிரியர் கடுமை காட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஆசிரியரின் கண்டிப்பால் தேர்வறையிலிருந்து பாதியில் வெளியேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினையை ஆசிரியர்கள் கையாண்ட விதம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
  • முன்னதாக, பள்ளிக்குச் சென்ற மாணவர் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடிச் சென்ற பெற்றோருக்கு முறையான தகவல்கள் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மாணவரின் மரணத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, தலைமை ஆசிரியரும் வகுப்பாசிரியரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். சந்தேக மரணம் என்றும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
  • இந்நடவடிக்கைகளைக் கண்டித்து ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கின்றனர். இப்படியான நடவடிக்கைகளால் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை விதிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எதையுமே ஆசிரியர்கள் கேட்கக் கூடாதா என்கிற கேள்வியும் எழுகிறது.
  • ஒருபுறம், பள்ளி மாணவர்களின் கைகளை போதைப்பொருள்கள் எட்டும் அவலத்தைத் தடுக்கத் தவறும் அரசு, மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பையும் ஆசிரியர்களின் தோளில் சுமத்துகிறது.
  • இன்னொருபுறம் திரைப்படம், தொலைக்காட்சி, சமூக ஊடகங்களால் நேரடித் தாக்கத்துக்கு உள்ளாகும் பதின்பருவத்தினரின் நடத்தையிலும் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தவிர, கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் சமூக, உளவியல் சிக்கல்கள் இந்தப் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்குகின்றன. அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராமல், ஆசிரியர்களுக்கு மேலும் மேலும் அழுத்தம் தரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன.
  • பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில், ஒவ்வோர் ஆண்டும் ஓய்வுபெறுபவர்களுக்கு மாற்று நியமனம் செய்யவும் அரசு முன்வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இரவுக் காவலர்,தூய்மைப் பணியாளர் போன்ற பணியாளர்கள் நியமிக்கப்படாதது பள்ளியின்பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த கவலையை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டு கிறார்கள்.
  • புதிது புதிதாகத் திட்டங்களைக் கொண்டுவருவதில் அரசு காட்டும் முனைப்பு, ஆசிரியர்களைச் சோர்வடையச் செய்திருப்பதைச் சில சம்பவங்கள் உணர்த்துகின்றன. இப்படியான பிரச்சினைகளால், கற்றல்-கற்பித்தல் பாதிக்கப் படுகிறது. தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதை மாணவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாவதாகவும் புகார்கள் எழுகின்றன. இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணும் பொறுப்பை ஆசிரியர்களிடம் மட்டும் விட்டுவிட முடியாது.
  • மாணவர்களின் ஒழுக்கத்துக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெற்றோர், ஆசிரியர்கள், கல்வித் துறை, பொதுச் சமூகம், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பும் பொறுப்பேற்க வேண்டும். இனி, இப்படியான அவலம் நேர்வதைத் தவிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்