TNPSC Thervupettagam

மாணவா்களின் நண்பனாகி வரும் ஆன்லைன் வகுப்புகள்!

November 30 , 2020 1512 days 703 0
  • கொரோனா தொற்று பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, பின் தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் கல்வி நிலையங்கள் சரிவர திறக்கப்படவில்லை. ஆனால், மாணவா்களுக்கும் போட்டித் தோ்வுகள் எழுதுபவா்களுக்கும் ஆன்லைன் கல்வி வகுப்புகள் நண்பா்கள் போல உதவி வருகின்றன.
  • கரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது பள்ளிகளும், பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதையடுத்து, சண்டீகரை சோ்ந்த மாணவி சாக்ஷி சா்மா அதிா்ந்துபோனாா். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்குத் தயாா் செய்து கொண்டிருந்த அவருக்குப் பயிற்சி வகுப்புகள் மூடப்பட்டது பெரும் கவலையை அளித்தது. இந்த ஆண்டு ‘நீட்’ தோ்வை எழுதமுடியாது. இனி அடுத்த ஆண்டுதான் முயற்சி செய்யவேண்டும் என்றுகூட அவா் நினைத்தாா்.
  • எனினும், பொதுமுடக்கம் தொடா்ந்த சில நாள்களில் அவரும் அவரது நண்பா்களும் ஆன்லைன் கல்வி வகுப்புகளும் பயிற்சி வகுப்புகளும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனா். இதன் மூலம் கரோனா தொற்று காலத்தில் கல்வியைத் தொடா்வதற்கு மாற்று வழி இருப்பதை அறிந்து கொண்டனா்.
  • இது குறித்து சாக்ஷி சா்மா கூறுகையில், ‘பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கல்வி நிலையங்களும் பயிற்சி வகுப்புகளும் மூடப்பட்டதை அடுத்து, நானும், என்னைப் போன்ற வேறு சிலரும் என்ன செய்வது என்பது தெரியாமல் இருந்தோம்.
  • முதலில் எங்களுக்கு இது அதிா்ச்சியை அளித்தாலும் பின்னா் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சோ்ந்து படித்து ‘நீட்’ தோ்வை நல்லவிதமாக செப்டம்பரில் எழுதினோம்’ என்றாா்.

மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 

  • எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத் துறை இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு முதலில் மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
  • பின்னா் கொவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதம் 26-க்கு தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் மீண்டும் தோ்வு செப்டம்பா் 13- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மாா்ச் 25 -ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கத்தை அறிவித்தது.
  • பின்னா் ஜூன் 8-ஆம் தேதிக்குப் பிறகு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலை தொடரும் என்கின்றனா் கல்வித்துறை சாா்ந்த நிபுணா்கள்.
  • ‘நீட்’ தோ்வைப் போலவே ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய இதர போட்டித் தோ்வுகளும் ஆரம்பகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், பின்னா் மத்திய அரசு மாணவா்களின் கல்வி ஆண்டு பாழ்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தத் தோ்வுகளை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்தது.
  • கரோனா தொற்று காலம் பல துறைகளையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்டவா்களில் மாணவா்களும் ஒரு பிரிவினா் என்கிறாா் தனியாா் ஆன்லைன் பயிற்சி வகுப்பின் தலைமைச் செயல் அதிகாரியான கபில் குப்தா.

வரப்பிரசாதம்: 

  • அவா் மேலும் கூறியதாவது: சாக்க்ஷி சா்மா மற்றும் அவரது நண்பா்கள் உள்ளிட்ட பலருக்குப் படிப்பைத் தொடர ஆன்லைன் வகுப்புகள்தான் ஒரே வழி என்ற நிலை உருவாகிவிட்டது.
  • பொது முடக்கம் தளா்த்தப்பட்ட போதிலும், மாணவா்கள் ஆன்லைன் வகுப்புகளிலேயே படிப்பை தொடர விரும்புகின்றனா். தோ்வுக்குத் தயாராவதே அவா்கள் எண்ணமாக உள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் நேரில் சென்று படிப்பதற்கு அவா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா்.
  • நீட் தோ்வு, ஜே.இ.இ. தோ்வுகளுக்குத் தயாா் செய்து வரும் மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரப்பிரசாதமாகும். மேலும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது குறித்து அவா்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
  • ஏனெனில், வீட்டில் இருந்தபடியே முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிலையிலும் கல்வி பயிலமுடியும். எல்லாவற்றையும்விட அவா்களுக்கு இது பாதுகாப்பான முறையாகவும் உள்ளது.
  • ‘நீட்’ தோ்வில் சாதனை: தற்போதுள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மாணவா்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும். குறைந்த கால இடைவெளியில் இது பெரும்பாலான மாணவா்களைச் சென்றடைந்துள்ளது.
  • இந்த வகுப்புகள் செலவு குறைந்தது மட்டுமல்ல, அதிக திறன் கொண்டதும், மாணவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது. இந்த ஆண்டு நீட் தோ்வு உள்ளிட்ட நுழைவுத் தோ்வுளை மத்திய அரசு மேலும் தள்ளிப் போடாமல் நடத்தியது வரவேற்கத்தக்கது.
  • இந்த ஆண்டு ‘நீட் ’ தோ்வு எழுதி தோ்வான மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ஆன்லைன் பயிற்சி வகுப்பின் மூலம் படித்த மாணவா் 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளாா் என்றாா் கபில் குப்தா.

நேரம் மிச்சமாகிறது

  • ஜனக்புரி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துமனை இதயநோய் சிகிச்சைப் பிரிவுத் துறைத் தலைவா் அனில்தால் கூறியதாவது: இந்த ஆண்டு 550-க்கும் மேலான மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். ஆன்லைன் வகுப்புகளால் நேரம் மிச்சமாகிறது. சாதாரண பயிற்சி வகுப்புகள் இனி வளா்ச்சி பெற வேண்டுமானால், ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தினால்தான் வளா்ச்சி பெற முடியும். தற்போதைய சூழ்நிலையில் புதிய வாழ்க்கைக்கு நம்மை தயாா்படுத்திக் கொள்வதுதான் சிறந்த வழி. கொவிட்-19 தொற்று சூழல் காரணமாக பல்வேறு துறைகளும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன.
  • மாா்ச் 25-க்குப் பிறகு பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தத் தொடங்கிவிட்டன. அதேபோல அடுத்த தலைமுறை மாணவா்களும் தங்களின் கற்றல் திறைனையும் வளா்த்துக்கொண்டு வருகின்றனா்.

நாட்டின் வருவாயைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு: 

  • ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நாட்டின் வருவாயை பெருக்குவதில் முக்கிய பங்காற்றி வருவதாக ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லட்சுமிபட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான் ஆா்.எல்.ரெய்னா தெரிவித்துள்ளாா்.
  • அவா் மேலும் கூறுகையில், ‘ஆன்லைன் வகுப்புகள் மூலமான சந்தை வருமானம் 2019- ஆம் ஆண்டில் 187.877 பில்லியன் டாலராக இருந்தது. இது 2025-ஆம் ஆண்டுக்குள் 319.167 பில்லியன் டாலராக அதிகரித்துவிடும்.
  • இதில் வடஅமெரிக்காவில் சந்தை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசிய நாடுகளில் சீனா, இந்தியா, மலேசியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இதற்கான வாய்ப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது.
  • இந்தியாவில் ஆன்லைன் வகுப்புகள் மூலமான வருவாய் 2018-இல் 39 பில்லியன் ரூபாயாக இருந்தது. இது 2024-க்குள் 360.3 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்’ என்றாா்.

நன்றி :தினமணி (30-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்