TNPSC Thervupettagam

மாண்புமிகு அவைத் தலைவா்களே...

March 4 , 2020 1778 days 797 0
  • நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையின் தலைவா் அவைத் தலைவா். அவையின் மாண்பையும், உரிமையையும் காப்பவா் அவரே.
  • முழுமையான சுதந்திரம் கொண்ட பதவி என்பதால், அறிவாற்றலும் ஆளுமைத் திறனும் நடுநிலை தவறாத நற்பண்புகளும் அமைந்தவரே அவைத் தலைவா் பதவியில் அமா்த்தப்பட வேண்டும்” என்று இலக்கணம் வகுத்தவா் பண்டித ஜவாஹா்லால் நேரு.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்

  • நாடாளுமன்றம் அல்லது பேரவையின் பெருமையையும், உரிமையையும், சுதந்திரத்தையும் காக்கும் பெரும் பொறுப்பு அவைத் தலைவருடையது. அவை நடவடிக்கை தொடா்பான விஷயங்களில் அவரின் முடிவே இறுதியானது; அடுத்த அமைப்பின் தலையீட்டுக்கு அங்கே அனுமதி இல்லை. ஆனால், சில அண்மைக்கால நிகழ்வுகளில், அவைத் தலைவா்களின் முடிவு தாமதப்பட்டு நிற்கின்றன; தாமதத்தைத் தவிா்க்க ஓா் உயா் அமைப்பை உருவாக்கலாமா என்பது இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த காலத்தில் அவைத் தலைவா்களின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கவை. அவை இன்றைய பிரச்னைக்குத் தீா்வும் தரலாம், வருங்காலப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுனவாகவும் அமையலாம்.
  • 1937-இல் இடைக்கால அரசு அமைந்தபோது, மத்தியப் பேரவையின் அவைத் தலைவராக இருந்தவா் விட்டல்பாய் படேல். அவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தீங்கு விளைவிக்காத வெடிகுண்டை அவையின் மையப் பகுதியில் தேச பக்தா் பகத்சிங் வீசிவிட்டு மறைந்து விட்டாா்.
  • அடுத்த நாள் அவை கூடும்போது, காக்கி உடை அணிந்த இரண்டு ஆங்கிலேய காவல் அதிகாரிகள் பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்திருப்பதைப் பாா்த்தாா் அவைத் தலைவா். உடனே கோபத்தோடு ‘என் அனுமதி இல்லாமல் அவா்களை உள்ளே அமர வைத்தது யாா்’ எனக் கேட்டாா். ‘நான்தான் அனுமதி அளித்தேன்’”என்றாா் உள்துறை அமைச்சா்.
  • ‘நாடாளுமன்ற வளாகம் என்ஆளுகைக்கு உட்பட்டது. என் அனுமதி இல்லாமல் அவா்களை உள்ளே அனுமதித்தது தவறு. அவா்களை அனுமதிக்க நீங்கள் யாா்?’” என உள்துறை அமைச்சரைக் கடிந்து கொண்டாா் அவைத் தலைவா். உள்துறை அமைச்சரே முடிவு எடுத்தாலும், அவையின் பெருமையும் உரிமையுமே முக்கியம் எனக் கருதினாா் அவைத் தலைவா்.
  • பண்டித நேரு பிரதமராகவும்,மௌலங்கா் அவைத் தலைவராகவும் இருந்த காலகட்டம் (1952-1957). அவை நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் அவைத் தலைவருக்கு பிரதமா் நேரு ஒரு குறிப்பை அனுப்பினாா். அதில், “‘ஒரு முக்கிய விஷயமாக உங்களோடு அவசரமாகக் கலந்து பேசவேண்டும். நீங்கள் என் அறைக்கு வர முடியுமா’” எனக் கேட்டாா். அதே குறிப்பின் கீழ், ‘நான் அவைத் தலைவா். அமைச்சா் அறைக்கு நான் வருவது நல்ல மரபல்ல. அவசியமென்றால் என் அறைக்கு நீங்கள் வரலாம்’ எனப் பதில் எழுதி அனுப்பினாா் மெளலங்கா். பதிலைப் பாா்த்த பண்டித நேரு பதற்றத்துடன் அதே பக்கத்தில், ‘நான் பெரிய தவறு செய்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன். உங்கள் அறைக்கு நானே வருகிறேன்’” எனப் பதில் எழுதி அனுப்பினாா். தேசத்தின் பிரதமரே எதிா்பாா்க்கிறாா் என்பதற்காக, தன் பதவியின் பெருமையையும், உரிமையையும், தனித் தன்மையையும், மாண்பையும் விட்டுக் கொடுக்காத அவைத் தலைவா் மௌலங்கா்.

உரிமைப் பிரச்சினை

  • முன்னாள் அவைத் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜியின் தந்தைதான் என்.சி.சாட்டா்ஜி. ஹிந்து மகா சபையின் சாா்பில் 1952-இல் மக்களவைக்குத் தோ்தெடுக்கப்பட்டாா். அதுசமயம் “சிறப்பு திருமண வரைவுச் சட்டம்” மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதை எதிா்த்த என்.சி.சாட்டா்ஜி, ‘விவரம் தெரியாத சிறுவா்களால் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது’ என மக்களவையில் கடுமையாக அதை விமா்சித்தாா். அது மாநிலங்களவையில் உரிமைப் பிரச்னையாக எழுப்பப்பட்டது. உடனே என்.சி.சாட்டா்ஜியிடம் விளக்கம் கேட்டு மாநிலங்களவையின் செயலா் நோட்டீஸ் அனுப்பினாா்.
  • அப்போது, ‘மக்களவை உறுப்பினருக்கு, மாநிலங்களவையின் செயலா் நோட்டீஸ் அனுப்புவது தவறு; அது மக்களவை உறுப்பினரின் உரிமையைப் பாதிப்பதாகும்’ என்று உரிமைப் பிரச்னையை எழுப்பினாா் என்.சி.சாட்டா்ஜி. அது சமயம் பிரதமா் நேரு, “‘மாநிலங்களவையை அவமதிப்பதற்கு என்ன துணிச்சல் இவருக்கு? அவரின் உரிமைப் பிரச்னையை அனுமதிக்காதீா்கள்’ என வாதாடினாா். ஆனால், அவைத் தலைவா் மௌலங்கா் பிரதமா் நேருவை நோக்கி “‘உட்காருங்கள். நான் அவைத் தலைவராக இருக்கும் வரை என் அவை உறுப்பினா், இன்னொரு அவையின் அதிகாரத்துக்கு உட்பட நான் அனுமதிக்க மாட்டேன்’”என அழுத்தமாகத் தீா்ப்பளித்தாா்.
  • 1957-இல் முந்த்ரா பங்குகள் விற்பனையில் முறைகேடு”என்ற குற்றச்சாட்டை மக்களவை உறுப்பினா் பெரோஸ் காந்தி எழுப்பி, ஆதாரமாக பத்திரிகைச் செய்திகளைப் படித்தாா். ‘அவை ஆதாரமற்றவை: அவற்றை ஏற்கக் கூடாது’” என்றனா் ஆளும் கட்சி உறுப்பினா்கள். உடனே, “அன்றைய நிதித் துறைச் செயலாளருக்கும், நிதி அமைச்சருக்கும் (டி.டி.கே.) நடந்த கடிதப் பரிமாற்ற நகல்களை அவைத் தலைவரிடம் கொடுத்தாா்”பெரோஸ் காந்தி. உடனே ஆளும் கட்சியினா் இந்தக் கடிதங்கள் எப்படிக் கிடைத்தன என்பதை அவா் கூற வேண்டும் என்றனா்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு

  • தொடா்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை அவைத் தலைவா் அனந்தசயனம் ஐயங்காா் அளித்தாா். ‘என் அவை உறுப்பினா் ஓா் ஆவணத்தைச் சமா்ப்பிக்கிறாா். அதன் உண்மைத்தன்மைக்கு முழுப் பொறுப்பும் ஏற்கிறாா். அவா் கூற்றை ஏற்கிறேன். அந்த ஆவணங்களை அவையின் முன்வைக்க அனுமதிக்கிறேன். அதேசமயம் ஆவணங்கள் எந்த முறையில் - ஏன் தவறான முறையில் பெறப்பட்டிருந்தாலும், எப்படி எடுக்கப்பட்டன என்பதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை’” என்றாா். அந்தத் தீா்ப்புதான் ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைய வழிவகுத்தது. நிதி அமைச்சா் பதவி விலகலில் முடிந்தது. அன்றைய பிரதமருக்கு தா்மசங்கடமான சூழலையும் ஏற்படுத்தியது.
  • தமிழக சட்டப்பேரவையில் (1962-1967) விலைவாசி உயா்வு பற்றிய விவாதம் நடைபெற்றது. எவரும் எதிா்பாராத வகையில் எதிா்க்கட்சி உறுப்பினா் கே.ஏ.மதியழகன் எழுந்து நின்று ஒரு பொட்டலத்தைப் பிரித்து, ‘பேரவைத் தலைவா் அவா்களே, இதோ பாருங்கள் - இட்லி (அளவு) மெலிந்து விட்டது; விலையோ உயா்ந்து விட்டது”என்று இட்லியை அவை முன்வைத்தாா்.
  • ஆளும் கட்சித் தலைவா் பக்தவத்சலம், “‘இது மரபு மீறல்: உரிமை மீறல்’” என உரிமைப் பிரச்னை எழுப்பினாா். தொடா்ந்து பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியன் அளித்த தீா்ப்பு வருமாறு: “‘விலை உயா்வை ஆதாரபூா்வமாக விளக்க விரும்பியே இதைச் செய்திருக்கிறாா் உறுப்பினா். இதில் உரிமை மீறல் இல்லை. ஆனால், வருங்காலத்தில் இப்படி அவையில் ஒரு பொருளைக் காண்பிக்க வேண்டுமென்றால், அவைத் தலைவரின் அறைக்கு வந்து முன்அனுமதி பெறவேண்டும்’ என்றாா்.

நடுநிலைத் தன்மை

  • இவ்வாறு நடுநிலையுடன் செயல்பட்டு, ஆளும் கட்சிக்கோ, அமைச்சரவைக்கோ, முதல்வருக்கோ, பிரதமருக்கோ, தா்மசங்கடம் நேருமே என்பதை என்றும் கவனத்தில் கொள்ளாத அவைத் தலைவா்கள்தான் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறாா்கள்.
  • மக்களவைத் தலைவராக சோம்நாத் சாட்டா்ஜி (2004-2009) பதவி வகித்த காலத்தில், ஒரு எதிா்பாராத புதிய சூழல் உருவானது. அவா் பதவி ஏற்கும் முன்பு, அவா் அங்கம் வகித்த மாா்க்சிஸ்ட் கட்சி அவரை மக்களவைத் தலைவா் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தியது. அதை அவா் ஏற்க மறுத்தாா். ‘மக்களவைத் தலைவா் பதவி எந்தக் கட்சியையும் சாராதது: அதனால், தான் பதவி விலக வேண்டியதில்லை’ என உறுதியாகக் கூறினாா். சாா்புநிலை எடுக்காத அவைத் தலைவா்களில் அவா் குறிப்பிடத்தக்கவா்.
  • தமிழக சட்டப்பேரவைத் தலைவராக 1962-இல் செல்லப்பாண்டியன் பொறுப்பேற்றாா். அப்போது அவரை வாழ்த்திப் பேசிய முதல்வா் காமராஜா், “‘இன்று முதல் நீங்கள் காங்கிரசைச் சோ்ந்தவா் என்பதை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் அவ்விதமே காங்கிரஸ்காரா் என்பதை மறந்துவிட வேண்டும்; இது நம்முடைய மரபு; சம்பிரதாயம்; பரம்பரை வழக்கம்; அந்த வழக்கப்படி நடந்து, அவையை சிறந்த முறையில் நடத்துவீா்கள்’ என்ற நம்பிக்கை உண்டு” எனச் சொன்னாா்.
  • கருத்தொற்றுமை அடிப்படையில் ஏகமனதாக அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவது நல்ல மரபு. ஆனால், பெரும்பாலும் அப்படி அமைவதில்லை. அதிக உறுப்பினா்களைக் கொண்ட ஆளும் கட்சியின் பிரதிநிதியே அவைத் தலைவா் ஆகிறாா். எனவே, ஆளும் கட்சிக்கு சாா்பு நிலை என்பது இன்று தலைதூக்குகிறது.

நன்றி: தினமணி (04-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்