TNPSC Thervupettagam

மாதவிடாய் விடுப்பு அவசியமா?

October 17 , 2024 20 days 81 0

மாதவிடாய் விடுப்பு அவசியமா?

  • பிஹார், கேரளம் போன்ற மாநிலங்​களில் மாதவிடாய் விடுப்பு இருப்​பதால் தமிழ்​நாட்​டிலும் அப்படியான ஏற்பாடு தேவை என்று சமீபகால​மாகப் பலர் குரல் கொடுக்​கின்​றனர். ஆனால், மாதவிடாய் விடுப்பு அவசியம்தானா என விவாதிப்பது அவசியம்.

உண்மை நிலவரம்:

  • ஸ்பெயின், ஜப்பான், இந்தோ​னேசியா, தென் கொரியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு முறை உள்ளது. இங்கிலாந்தில் இதற்கெனத் தனி விடுப்பு இல்லை. தேவை என்றால் பெண்கள் இதை ‘உடல் நலமற்ற விடுப்பு’ என்று எடுத்​துக்​கொள்​ளலாம். அதற்கென்று சட்டம் இல்லை; ஆனால், நிறுவனங்கள் அவர்களின் விருப்பு​ரிமைப்படி வழங்கலாம். அமெரிக்​கா​விலும் இந்த விடுப்பு முறை இல்லை.
  • பெண்களுக்குப் பருவமடைதல் (puberty) அல்லது மாதவிடாய் தொடக்கம் (menarche) வளர்ச்சியின் ஓர் அங்கம்​தான். இது தவிர மார்பகங்கள் வளர்ச்சி அடைவது, பிறப்பு​றுப்புகள், அக்குள் போன்ற பல இடங்களில் முடி வளர்ச்சி, ஹார்மோன் மாற்றங்​களால் முகப்பரு, உடல் எடை, உயரம் கூடுதல் போன்ற மாற்றங்​களுடன் மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.

பிற்போக்குக் கருத்து​களுக்கு வலுசேர்க்கும்:

  • மாதவிடாய் என்பது இயல்பான ஒரு நிலை. அதற்காகச் சிறப்புச் சலுகைகள் கொடுப்போம் என்பது ‘பெண் பலவீன​மானவள்’, ‘பாது​காக்​கப்பட வேண்டியவள்’ போன்ற கருத்​துக்​களுக்கு வலுசேர்க்​கும். இது ஒரு வகையில் மென் பாலினப் பாகுபாடு (benevolent sexism). பெண்களுக்கு எந்த ஒரு சமத்துவ ஏற்பாடாக இருந்​தா​லும், அது பாலினங்​களைச் சமத்துவ நிலைக்குக் கொண்டு​வந்து, பாலின இடைவெளியைக் குறைக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது.

எதிர்​கொள்வது எளிது:

  • பெண்கள் மாதவிடா​யின்போது இயல்பாக இருக்க வேண்டும். குளித்துச் சுத்த​மாகத் தன்னை வைத்துக்​கொள்ள வேண்டும்... அவ்வளவு​தான். மற்றபடி, உடற்ப​யிற்சி உள்பட எல்லா செயல்​பாடு​களிலும் ஈடுபடலாம். பஞ்சுத்​தக்கை (tampons) எனப்படும் சாதனத்தைப் பயன்படுத்​தினால் நீச்சல்கூட அடிக்​கலாம். விளையாட்டு நிகழ்வு​களில் கலந்து​கொள்​ளலாம்.

பெண்களுக்கு எப்போது விடுப்பு தேவை?

  • மாதவிடா​யின்போது வலி என்பது 80 சதவீதம் பெண்களுக்கு இயல்பாக ஏற்படு​வது​தான். பொறுத்​துக்​கொள்ள முடியாத அளவுக்கு இருந்​தால், வலி நிவாரணி எடுத்​துக்​கொள்​ளலாம். அளவுக்கு அதிகமான வலி, குருதிப் போக்கு, மனரீதியான மாற்றங்கள் இருந்​தால், அது இயல்பான நிலை இல்லை. அப்போது மருத்​துவரின் சிகிச்சை நிச்சயம் தேவை. அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் அல்லது விடுப்பு பரிந்​துரைக்​கப்​பட்டால் எடுப்பது நல்லது.
  • இதை ‘மாதவிடாய் விடுப்பு’ என்றில்​லாமல் ‘உடல் நலனின்மை’ (sick leave) என்று இருபாலருக்கும் பொதுவான விடுப்பாக இருக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் வளர்ச்​சி​யின்போது சந்திக்கும் உடல்நலக் குறைபாடு​களின்போது ஓய்வு தேவை என்று மருத்​துவர் பரிந்​துரைத்​தால், அவர்களும் இந்தப் பொது விடுப்பைப் பயன்படுத்​திக்​கொள்​ளலாம்.

குழந்தைப் பேறு விடுப்பு எடுக்​கலாமா?

  • மகப்பேறு / கர்ப்​ப​காலமும் இயல்பான நிலைதான். கர்ப்​பத்​தின்​போது உடற்ப​யிற்சி செய்வது இயல்பு. குழந்தை பிறப்​புக்குப் பிறகு ஆறு வாரங்​களில் ஒரு பெண் இயல்புக்கு மாறுவார்.
  • நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட ஸ்காண்​டிநேவிய (scandinavian) நாடுகளில் பேறுகால விடுப்பு இல்லை. மாறாக, ‘பெற்றோர் விடுப்பு’ என்று இருபாலருக்கும் பொதுவான விடுப்பு உண்டு. ஆணோ பெண்ணோ யார் வேண்டு​மானாலும் இந்த விடுப்பை எடுத்​துக்​கொள்​ளலாம். தாய்ப் பால் எடுக்கும் கருவி மூலம் (breast pump) எடுத்துக் குழந்தைக்காக வைத்து​விட்டு பெண்கள் வேலைக்குச் செல்லலாம்.
  • அதைக் குளிர் பெட்டியில் வைத்து, குழந்தைக்குப் பாலாடை மூலம் தந்தை கொடுக்​கலாம். தமிழ்​நாட்டில் மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் என்பது பெருமைக்​குரிய ஒன்று. ஆனால், ஒரு ஆணும் பெண்ணும்தான் பெற்றோர் ஆகின்றனர் என்பதால், குழந்தை / மகப்பேறு பெண்களின் வேலை என்று ஒதுக்​காமல் இருபாலரும் விடுப்பு எடுத்​துக்​கொள்​ளலாம் என்கிற சட்டம் வேண்டும்.

மாதவிடாய் விடுப்பு வந்தால் என்ன ஆகும்?

  • பாலின இடைவெளி அதிகரிக்​கும். பெண்களுக்கு மென் பாலினப் பாகுபாடு நடக்கும். ‘அவளுக்கு மாதவிடாய்... அப்படித்தான் கத்து​வாள்’ என்று மாதவிடாய் சார்ந்து பெண்கள் பற்றிய தவறான புரிதல்கள் வலியுறுத்​தப்​பட்டு, பெண்களை மேலும் அடிமைப்​படுத்தும் போக்கு அதிகரிக்​கும். பல பெண்கள் வேலை செய்யும் இடத்தில் யாருக்கு மாதவிடாய் என்று ஊருக்கே தெரியும் அளவுக்கு இந்த விடுப்பு அமையும்.
  • பெண்களை மாதவிடா​யின்போது ஒதுக்​கிவைக்க வேண்டும் என்று பேசுபவர்​களுக்குச் சாதகமாகவும் மாறக்​கூடும். மாதவிடாய் தொடர்பான புரிதல்​களுக்கு, உடல் சார்ந்த கல்வி - உடலுறவு சார்ந்த கல்வி தேவை (sex education). மாதவிடாய் என்பது இயற்கை​யானது என்று புரிந்​து​கொண்​டால், அதற்கெனப் பிரத்யேக விடுப்பு தேவையில்லை என்பதையும் புரிந்​து​கொள்ளலாம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்