- பெண்களுக்கு மாதவிடாய்க் கால விடுமுறை அறிவித்த முதல் நாடு சோவியத் ஒன்றியம். பொதுச் சமையலறை,பொதுச் சலவையகம், அரசே குழந்தைகளைப் பராமரித்தல், கருக்கலைப்புக்கு அனுமதி, விவாகரத்துஉரிமை, மாதவிடாய்க் கால விடுப்பு என நூறாண்டுகளுக்கு முன்னதாகவே குழந்தைகள், பெண்களுக்கானபல்வேறு நலச் சட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்குப் பின்னணியில் இருந்தவர் அலெக்சாந்த்ரா கொலந்த்தாய் (Alexandra Kollontai). 1917 புரட்சிக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் சமூக நலத் துறை கமிசார் (அமைச்சர்) பொறுப்பை ஏற்றவர். அவரது சிந்தனையில்தான் இவை உருப்பெற்றன. கொலந்த்தாய் இல்லாமல் இவை நடந்தேறியிருக்க இயலாது.
- நாடெங்கும் அப்போது இவை பற்றிய விவாதங்கள் உருவாவதற்கும் அவரே காரணகர்த்தா. ஆனால், இவற்றில் பல சட்டங்கள் 1936இல் திரும்பப் பெறப்பட்டன. அதில் மாதவிடாய்க் கால விடுப்பு என்பதும் மிக முக்கியமானது. பெண்களின் நலனுக்காக இத்தகைய சிறப்புக் கவனம் செலுத்தப்படுவது ஆண்–பெண் தொழிலாளர்களுக்கு இடையேயான ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்பதும், உலகப் போர், அதனால் ஏற்பட்ட பஞ்சம் போன்றவையும் இதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்பட்டன.
சீரற்ற உணவுப் பழக்கமும் பற்றாக்குறையும்
- மாதவிடாய் என்பது பெண்கள் உடற்கூறின்படி ஆரோக்கியமான அனைத்துப் பெண்களுக்கும் 28 நாள்களுக்கு ஒருமுறை நிகழ்வது. மாதவிடாய் சுழற்சி என்பதும் கர்ப்பம் தரிப்பதும் நோயல்ல... ஆனால், எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியான உடல் நலத்துடன் இருப்பதில்லை. அனைத்துப் பெண்களும் சரியாக உணவை முறையாக உட்கொள்வதும் இல்லை. குடும்பத்தில் எல்லோருக்கும் கொடுத்த பிறகு மிஞ்சிய உணவுகளை உண்பதையே வழக்கமாக வைத்திருப்பவர்கள் நம் பெண்கள். இப்போதுதான் ஓரளவுக்காவது சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சரியான உணவின்மைக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை, உணவுப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வு போன்ற சமூகக் காரணிகளும் முக்கியமானவை. ரத்தசோகையின் காரணமாக வெள்ளைப்படுதல் போன்ற கடுமையான பிரச்சினையையும் எதிர்கொள்கிறார்கள்.
- மாதவிடாய் தொடங்குவதற்குச் சில நாள்கள் முன்னதாகவே கடுமையான மன அழுத்தத்துக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். நம் சமூகத்தைப் பொறுத்தவரை வீட்டுப் பணியும் சமையலும் பெண்களுக்கு மட்டுமேயானவை என்ற மனப்போக்கில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. பணிப் பகிர்வு என்பதும் பெரும்பான்மையான குடும்பங்களில் இல்லை. எத்தகைய முற்போக்கான பெண்களும்கூட முற்றிலும் இவற்றிலிருந்து விடுபட முடியாததும் துரதிர்ஷ்டமே. கர்ப்ப காலத்தில் குழந்தையின் வரவை எதிர்நோக்கியாவது பெண்ணைக் கொண்டாடும் சமூகம், மாதவிடாய் காலத்தில் அவளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
- பணி நேரம் தவிர, பணிக்குச் செல்லும் பயண நேரமும் முதன்மையானது. பெரு நகரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிப்பது – அது எத்தகைய வாகனமாயினும் – அதிக நேரம் எடுக்கக் கூடியது. இந்தஅலைச்சலினால் ஏற்படும் கூடுதல் சோர்வும் வலியும் தவிர்க்க முடியாதவை. இத்தகைய விடுபட முடியாத அழுத்தமான சுழல்களுக்குள் சிக்கித் தவிக்கும் பெண்களின் உடல்-மன ஆரோக்கியம் பற்றிய முதன்மையான பார்வையும் அது குறித்த அக்கறையும் மிக அவசியம்.
பெண்களுக்கு ஓய்வளிக்கும் உலக நாடுகள்
- ஜப்பானில் 1947இலிருந்தே மாதவிடாய் விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிலும் தைவானிலும் முழுமையான மூன்று நாள்கள் விடுமுறை அளிப்பதற்கான சட்டங்கள் உள்ளன. இந்தோனேசியா (2003) ஜாம்பியா (2015) போன்ற நாடுகளிலும் மாதவிடாய்க் கால விடுமுறை அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயின், சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் 2023இல் இணைந்தது. இந்தியாவிலும் விடுமுறை உண்டு: இந்தியாவில் மாதவிடாய் விடுமுறை குறித்தான சட்டங்கள் இல்லாவிடினும், 1992இல் இரு நாட்கள் மாதவிடாய் விடுமுறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது பிஹார் அரசு.
- கேரளத்தில், கொச்சி ராஜ்ஜியத்தின் தலைநகர் திருப்பூணித்துறையிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 1912ஆம் ஆண்டிலேயே ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் நீட்சியாகவே பினராயி விஜயன் தலைமையில் அமைந்த இடதுசாரிக் கேரள அரசு, பல்கலைக்கழகங்களில்பயிலும் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்க முன்வந்துள்ளது. இவை தவிர, மும்பையிலுள்ள இரு தனியார் நிறுவனங்களும், சென்னையில் இரு ஊடக நிறுவனங்களும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்துவருகின்றன.
இயலாதவர்களுக்கு விடுமுறை அளிப்போம்
- கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, ஊதியம், உண்ணும் உணவு போன்ற அனைத்திலும் எத்தனை எத்தனை பாகுபாடுகள் பெண் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாலினப் பாகுபாடற்ற நிலை அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாதவிடாய் விடுப்பு என்பதில் மட்டும் ஏன் பாலின பேதம் குறித்த சிந்தனை மேலெழ வேண்டும்? பெண்கள் வலிமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஏற்றத்தாழ்வுகளும் நம்மிடம் ஏராளம் இருக்கின்றன. பெண்களிடமே மாதவிலக்கு விடுமுறைக்கு எதிரான கருத்து நிலவுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இயன்றவர்கள் பணிக்குச் செல்லட்டும்; இயலாதவர்கள் ஓய்வெடுக்கலாமே... மாதவிலக்கைக் காரணமாக்கி மூன்று நாள்களுக்கு வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதும், தற்போது விடுமுறை வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதும் ஒன்றல்ல.
- முந்தையது தீட்டு என்ற பெயரில் அருவருப்புடன் ஒதுக்கிவைத்துப் பெண்ணை இழிவுபடுத்தியது, மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிக மோசமான சடங்காச்சார வன்முறை. விடுமுறை கோருவது அவளுக்கான ஓய்வு, உரிமை, உடல்-மன நலன் அனைத்தும் சார்ந்தது. ஒருநாள் ஓய்வளித்தாலும் மறுநாள் வீறு கொண்டு பன்மடங்கு சக்தியுடன் தன் பணிகளைச் செய்யக்கூடியவள் பெண். இதில் அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமல்லாமல், கடுமையான உடல் உழைப்பைச் செலுத்தக்கூடிய ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள் இதனை ஏற்காது என்பதைப் புறந்தள்ளி, அவர்களையும் இணங்க வைக்க வேண்டும் என்பது முதன்மையானது. மாதவிடாய் கால விடுமுறை குறித்த ஆழ்ந்த புரிதலும் சமூகத்தின் சரிபாதியான பெண்கள் நலன் மீதான புரிந்துணர்வும் ஏற்பட பொதுச் சமூகத்திடையே தொடர்ச்சியான விவாதங்களும் அதன் மீதான தீர்வும்தான் இப்போதைய தேவை!
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2023)